ஜெஃப் பெசோஸ் - முகேஷ் அம்பானி: உலகப் பணக்காரருக்கும் இந்தியப் பணக்காரருக்கும் இடையே சிக்கி சிதையும் பிக் பஜார்

ஜெஃப் பெசோஸ் - முகேஷ் அம்பானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ் - முகேஷ் அம்பானி
    • எழுதியவர், ஆலோக் ஜோஷி
    • பதவி, மூத்த பத்திரிக்கையாளர், பிபிசி-க்காக

உலகின் மிகப்பெரும் பணக்காரரும் இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மோதலில் நடுவில் சிக்கிச் சிதைவது இந்தியாவின் சில்லரை விற்பனைத் துறை சிங்கமான கிஷோர் பியானியும் அவரது பிக் பஜார் நிறுவனமும்தான்.

பிக் பஜார் இவரது மிகவும் பிரபலமான பிராண்ட். இந்த பேரம் இதைவிட பெரியது; இதில் பணயம் வைக்கப்பட்டிருப்பது அதைவிடவும் மிகப் பெரியது.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆவார். இப்போது அவருடன் மோதுபவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் உலகின் நான்காவது பணக்காரருமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. கிஷோர் பியானி மற்றும் அவரது ஃப்யூச்சர் க்ரூப் தொடர்பானதே இந்த மோதல்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நடுவர் மன்றமான சிங்கப்பூர் சர்வதேச நடுவர்மன்ற மையத்தின் மூலம், அமேசான் நிறுவனம் ஓர் இடைக்கால உத்தரவைப் பெற்றது. இதன்படி ஃப்யூச்சர் க்ரூப் தனது நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமத்திற்கு விற்க முடியாது. ஏன், எப்படி என்று பார்ப்பதற்கு முன், இந்த பேரத்தைப் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம்.

பியானியின் ஃப்யூச்சர் க்ரூப் தனது சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு விற்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக ரிலையன்ஸ் சுமார் ரூ .24,700 கோடியை வழங்கும் என இரு நிறுவனங்களும் ஆகஸ்ட் மாதம் அறிவித்தன.

முகேஷ் அம்பானி

பட மூலாதாரம், Getty Images

ஃப்யூச்சர் குரூப் மீது கண் வைக்கும் உலக சில்லரைத் தொழில் அதிபர்கள்

அப்போதே கூட, கிஷோர் பியானி ஏன் இந்த பேரத்தை மேற்கொள்கிறார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. பிக் பஜார் அவருக்கு மிகவும் பிடித்த பிராண்ட் மட்டுமல்ல. இதன் மூலம் முழு சில்லறை மற்றும் மொத்த வணிகமும் அவரிடம் இருந்து கை நழுவிப் போய்விடும். அதன் பிறகும் நிறுவனத்தின் முழு கடனையும் அடைக்க முடியாது.

இந்த விஷயத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் அல்ல. நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் புதிய தொழில்களைத் தொடங்க நிறைய செலவழித்திருந்தது, இதற்காக பியானி குடும்பமும் தங்கள் சொந்த பங்குகளை அடகு வைத்திருந்தனர். விரைவில் சந்தை மேம்படும், வருவாய் அதிகரிக்கும் என்றும், இந்தக் கடனை எல்லாம் அடைத்துப் பங்குகளைத் திரும்பப் பெறலாம் என்றும் அவர்கள் நம்பினர்.

கிஷோர் பியானி நீண்ட காலமாகவே, உலகின் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுடன் கைகோர்க்க முயன்றார். வால்மார்ட் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார் அவர். பிரான்சின் கேரஃபோருடனான அவரது உடன்படிக்கை பற்றிய செய்திகளும் 10 ஆண்டுகளுக்கு முன்பே வந்தன.

சுருக்கமாகச் சொன்னால், உலகின் அனைத்து பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ஃப்யூச்சர் தொடர்பில் ஆர்வம் கொண்டிருந்தன என்று கூறலாம். ஏனெனில் அதுவரை இது நாட்டின் மிகப்பெரிய சில்லறை நிறுவனமாக இருந்தது. ஃப்யூச்சர் க்ரூப்பின் நிர்வாகமும் எதிர்வரும் காலங்களில், டாடா, பிர்லா மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட ஒரு பெரிய கூட்டாளி தேவை என்பதை உணர்ந்திருந்தது.

ஜெஃப்

பட மூலாதாரம், Getty Images

ஒரே ஒரு தடை இருந்தது. அது, இந்தியாவின் அந்நிய முதலீட்டுக் கொள்கை. குறிப்பாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பதில் அனைத்து அரசுகளுமே சற்று தயக்கம் காட்டி வந்தன.

நிறுவனத்தின் மீது கட்டுப்பாடோ குறைந்த பட்சம் அழுத்தமோ கொடுக்கக்கூடிய ஒரு பங்குதாரர் கிடைக்கும் வரை, எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் ஒரு இந்திய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ய தயங்குகிறார்.

சில்லறை வணிகத்தின் விதிகள் மிகவும் கடினமாக இருந்தன. இருப்பினும், சில நிபந்தனைகளுடன், இப்போது வெளிநாட்டு நிறுவனம் ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையில் 100 சதவிகிதம் மற்றும் மல்டி பிராண்ட் சில்லறை விற்பனையில் 51 சதவிகிதம் வரை முதலீடு செய்யலாம். ஆனால் அதற்கான பாதை எளிதானது அல்ல.

எல்லா நிறுவனங்களும் இந்த விதிமுறைகளை ஏற்கவில்லை. மற்றொரு பெரிய தடை என்னவென்றால், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதாவது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதிகள் இவை.

இந்த தளர்வுக்குப் பிறகும், எந்த ஈ-காமர்ஸ் நிறுவனமும் இந்தியாவில் ஒரு சில்லறை நிறுவனத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்க முடியாது, மேலும் இந்த இரு நிறுவனங்களின் ஆன்லைன் வணிகம் மற்றும் ஆஃப்லைன், அதாவது கடை, கிடங்கு போன்றவற்றிற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது என்ற நிபந்தனையும் உண்டு.

இந்த விதி விசித்திரமானது, ஏனென்றால் ஒருபுறம் அமேசான் இந்தியாவில் கனஜோராக வியாபாரம் செய்து வருகிறது, மறுபுறம் இந்தியாவில் இருந்து தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் இப்போது வால்மார்ட்டின் கைகளுக்குச் சென்றுவிட்டது. ஆனால் அமேசான் நிறுவனம், ஃப்யூச்சர் க்ரூப் அல்லது வேறு எந்த ஒரு சில்லறை வர்த்தக நிறுவனத்தின் ஒரு பகுதியை வாங்குவது இன்னும் எளிதானது அல்ல.

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனம் அமேசான்

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனம் அமேசான்

பட மூலாதாரம், Getty Images

பல சில்லறை வர்த்தக நிறுவனங்கள், சட்டங்கள் அனுகூலமாக மாறியதும் ஒப்பந்தங்களை விரைந்து செயல்படுத்தும் வண்ணம், முன்னரே தங்கள் கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத்து வைத்தன. 2030 வாக்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த படியாக, இந்தியா உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தகச் சந்தையாக மாறும் என்று உலக பொருளாதார மன்றம் கணித்திருந்தது, இந்த முன்னேற்பாட்டுக்கு ஒரு காரணம்.

இந்த ஆண்டு, நாட்டின் சில்லறை வணிகத்தின் அளவு சுமார் 70 ஆயிரம் கோடி டாலர்கள், இது 10 ஆண்டுகளில் சுமார் 1.3 லட்சம் கோடி டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தச் சந்தையின் பெரும் பகுதியை கைவசப்படுத்த விரும்புகிறது. இன்று இல்லையென்றால் நாளை அரசாங்கம் இந்த வணிகத்தில் அந்நிய முதலீட்டை எளிதாக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இதற்குப் பின்னால் ஒரு பெரிய தர்க்கம் இருக்கிறது. நாட்டின் முழு சில்லறை சந்தையையும் ஏன் அரசாங்கம் ஒன்று போல் கருதவில்லை என்ற கேள்வியை வர்த்தகர்கள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை பலரும் தொடர்ந்து எழுப்புகிறார்கள்.

ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனுக்கு, அதாவது சூப்பர்மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் போர்டலுக்கு வெவ்வேறு சட்டங்கள் எவ்வாறு இருக்க முடியும்?

ஒருவேளை இதே எண்ணத்தில்தான் அமேசான், ஃப்யூச்சர் க்ரூப் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 2019 இல், அமேசான் பியூச்சர் க்ரூப் நிறுவனமான ஃபியூச்சர் கூப்பன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் வாங்கியது.

இந்த நிறுவனம் பரிசுக் கூப்பன்கள், பணப்பரிவர்த்தனைச் செயலிகள் போன்றவற்றில் வர்த்தகம் செய்கிறது. அதாவது, நீங்கள் பிக் பஜார் அல்லது சென்ட்ரலில் இருந்து பரிசுக் கூப்பனை வாங்கி ஒருவருக்குப் பரிசளித்தால், அந்த வவுச்சர் இந்த நிறுவனத்திடமிருந்து வருகிறது.

உலகப் பணக்காரருக்கும் இந்தியப் பணக்காரருக்கும் இடையே சிக்கி சிதையும் பிக் பஜார்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பெரிய விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனத்திற்கு பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 10 சதவீத பங்கு இருந்தது.

எனவே ஒரு வகையில், தான் ஃப்யூச்சர் ரிடெய்லில் முதலீடு செய்யத் துவங்கி விட்டதால் விதிமுறைகள் மாறும் போது அடுத்த நகர்வுகளை முன்னெடுக்கலாம் என்ற எண்ணம் அமேசானுக்கு இருந்திருக்கலாம்.

இந்த ஒப்பந்தம், அமேசானுக்கு ஃப்யூச்சர் ரீடெய்லின் விளம்பரதாரரின் முழு அல்லது பகுதிப் பங்குகளை வாங்குவதற்கான உரிமையை அளிக்கிறது.

இதற்காக,அந்நிறுவனத்திற்கு கால் ஆப்ஷன் வழங்கப்பட்டது. இந்த கால் ஆப்ஷனை ஒப்பந்தத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததிலிருந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் வரை பங்குகளாக மாற்றலாம்.

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஃப்யூச்சர் க்ரூப்பின் வர்த்தகத்தில் பங்கு பெற அமேசான் புறவாசல் வழியாக நுழைவதாகவே கருதப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 2019 ஆகஸ்டில் கையெழுத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பியூச்சர் குழுமம் அந்த நேரத்தில் ஃபுட் ஹால், ஃபேஷன் அட் பிக் பஜார் போன்ற புதிய வடிவங்களை நிறுவவும் அதன் பழைய பிராண்டான பிக் பஜாரை விரிவாக்கவும் முயற்சித்தது.

கடந்த ஆறு- ஏழு ஆண்டுகளில், பல நிறுவனங்களையோ அல்லது அவர்களின் வர்த்தகத்தையோ வாங்குவதன் மூலம் தொடர்ந்து தனது வணிகத்தை விரிவுபடுத்துவதில் அது மும்முரமாக இருந்தது.

கொரொனாவால் வந்த சிக்கல்

கொரொனாவால் வந்த சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

தனது பணத் தேவைகளைக் கடன் மூலம் பூர்த்தி செய்து கொண்டது. இந்த நேரத்தில், சந்தையில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இனிஷியல் பப்ளிக் ஆஃபருக்குப் பிறகு, டி-மார்ட்டும் புது உத்வேகத்துடன் வணிகத்தை விரிவுபடுத்த முயன்றது.

நாட்டின் நிலைமையும் மேம்படப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கடன் வாங்கி வணிகத்தை விரிவுபடுத்துவதில் எந்த ஆபத்தும் உணரப்படவில்லை. இந்த வணிகத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்வதும் அதற்கு முக்கியம்.

விளம்பரதாரர்களும் கடன் தேவையை பூர்த்தி செய்வதற்காக தங்கள் பங்குகளை நிறைய அடகு வைத்திருந்தனர். அந்த நேரத்தில், ஃப்யூச்சர் ரீடெய்லின் பங்குகள் சுமார் 380 ரூபாயாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில், திடீரென்று அதன் பங்குகள் கடுமையாகச் சரிந்தன, குறுகிய காலத்தில் அது ரூ .100 க்கும் கீழே சரிந்தது.

விலை வீழ்ச்சியடைந்தால், கடன் வழங்கும் வங்கிகள் அடமானமாக அதிக பங்குகளைக் கேட்கின்றன. ஒரு குறுகிய காலத்தில், கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் வங்கிகளுக்கு அடமானம் வைக்கப்பட்டன.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த வீழ்ச்சி ஏன் திடீரென வந்தது என்பதற்கு பதிலே இல்லை. நிறைய ஊகங்கள் உள்ளன. பங்குச் சந்தையில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த, சில குழுக்கள் திட்டமிட்டு இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையிலும், தொழிலை சமாளித்திருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, ஏனென்றால் தினசரி விற்பனை மிகவும் அதிகமாக இருந்ததால் பணச் சுழற்சி நடந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போது தான் வந்தது கொரோனா என்னும் கொடூரம்.

மார்ச் மாதத்தில், பொது முடக்கம், மலை போல் ஒரு துயரத்தை ஏற்படுத்தியது. அன்றாட விற்பனையும் பண சுழற்சியும் நின்று போயின.

கிஷோர் பியானி ஒரு நேர்காணலில், பொது முடக்கத்திற்குப் பிறகு, அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டதாகவும், அடுத்த மூன்று நான்கு மாதங்களில், நிறுவனம் ஏழாயிரம் கோடி இழப்பை சந்தித்ததாகவும் இது தாங்க கொள்ளமுடியாதது என்றும் தெரிவித்தார்.

கிஷோர் பியானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிஷோர் பியானி

இறுதியில், அதனால் நிறுவனத்தை விற்க முடிவு செய்ய வேண்டியிருந்தது என்றும் இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில், நிறுவனத்தின் வழக்குரைஞரும் இந்த ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், நிறுவனம் திவாலாகிவிடலாம் என்று வாதிட்டார்.

அமேசான் ஏன் இந்த விவகாரத்தை சிங்கப்பூருக்கு எடுத்துச் சென்றது, ஒப்பந்தம் தடைபடுமா? என்ற கேள்விகள் எழுகின்றன

இரு தரப்பினரும் இது குறித்து எதுவும் கருத்து கூறவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரிலிருந்து உத்தரவு வந்தவுடன், அதே இரவில் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து, ஒப்பந்தத்தை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாக ஒரு அறிக்கை வந்தது.

இதேபோன்ற அறிக்கை ஃப்யூச்சர் க்ருப்பிடமிருந்தும் வந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து ஃப்யூச்சர் க்ரூப் மேல் முறையீடு செய்யலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது குறித்த மேலும் தகவல் இல்லை.

சிங்கப்பூர் நடுவர் மன்ற முடிவு இந்தியாவில் நேரடியாகச் செல்லுபடியாகாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அதற்கு உடன்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது ஃப்யூச்சர் க்ரூப் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யத் தயாராக இல்லை என்றால், அமேசான் சிங்கப்பூரில் பெற்ற உத்தரவை இந்திய நீதிமன்றத்திற்குக் காட்டி, அதன் ஒப்புதலைப் பெற்று ரிலையன்ஸ், ஃப்யூச்சர் நிறுவனங்களுக்கு உத்தரவை வழங்க வேண்டும். இப்படிச் செய்யப்படாவிட்டால் ஒப்பந்தம் தொடரும்.

மோதலுக்கு என்ன காரணம்?

மோதலுக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

ஃப்யூச்சர் க்ரூப் மற்றும் ரிலையன்ஸ் முன்முயற்சி எடுப்பதற்குப் பதில் இப்போது அமேசான் வழக்கு தொடரட்டும் என காத்திருக்கின்றன. இந்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடத்தவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் ஃப்யூச்சர் க்ரூப்புக்கும் அமேசானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் டெல்லியில் சர்ச்சைக்கு தீர்வு காணப்படுவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃப்யூச்சர் க்ரூப்பின் இரண்டு வாதங்கள் அதன் தரப்பை வலுவாக ஆக்குகின்றன என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஒன்று, ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனம், அமேசானுடனான ஒப்பந்தத்தில் ஒரு தரப்பிலும் இல்லை, எனவே அதன் தொழிலை விற்க அதற்கு முழு உரிமை உள்ளது. இரண்டாவதாக, இந்த ஒப்பந்தம் ரத்தானால், ஃப்யூச்சர் க்ரூப் திவாலாகலாம். இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடலாம்.

நீதிமன்றத்தில் என்ன நடந்தாலும் அது மக்களின் பார்வைக்கு வரும். ஆனால், இந்தப் பிரச்சினையில் முகேஷ் அம்பானி மற்றும் ஜெஃ ப் பெஜோஸ் ஏன் எதிரும் புதிரும் ஆனார்கள்?

இந்த விவகாரம், ஃப்யூச்சர் க்ரூப் அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் ஒப்பந்தத்தைப் பற்றியது அல்ல. இவர்கள் இருவரும் உலகின் மிகப் பெரிய சந்தையைத் தமதாக்க விரும்புகிறார்கள் என்பது தான் விஷயம்.

அது தான் இந்தியாவின் சில்லறை வணிகம். ரிலையன்ஸ் ரீடெய்ல் இப்போது நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாக 10,900 கடைகள் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனையைக் கொண்டுள்ளது, மேலும் ஃப்யூச்சர் க்ரூப்புடனான இந்த ஒப்பந்தம் 1700 கடைகளையும், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும் தரும்.

உலகப் பணக்காரருக்கும் இந்தியப் பணக்காரருக்கும் இடையே சிக்கி சிதையும் பிக் பஜார்

பட மூலாதாரம், Reuters

ஆனால் அமேசானின் நோக்கம் இதை விட மிகப் பெரியது. ஆறரை பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இது திட்டமிட்டுள்ளது. அதற்கு இங்கிருக்கும் மிகப் பெரிய சவால் ரிலையன்ஸ் நிறுவனம். ஏனெனில் இது மிகப்பெரிய சில்லறை வர்த்தக நெட்வொர்க்கை மட்டுமல்ல, ஜியோமார்ட் போன்ற ஆன்லைன் போர்ட்டலையும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற வலுவான நெட்வொர்க்கையும் கொண்டுள்ளது.

ஆனால், அமேசான், ஆன்லைன் வணிகத்தை மட்டுமே நம்ப வேண்டும். மறுபுறம், ஆன்லைன் சந்தையில் அதற்குப் போட்டியாளரான பிளிப்கார்ட், ஆதித்யா பிர்லா பேஷன் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நிறுத்த அது துடிப்பதற்கும் இதுவே காரணம். ஃப்யூச்சர் க்ரூப் இந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டால், வேறு ஒரு நிறுவனத்தை ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்து தரும் பொறுப்பையும் தான் எடுத்துக்கொள்வதாக அமேசான், சிங்கப்பூரில் தெரிவித்ததும் கேள்விக்குள்ளாகிறது.

ஆனால் இந்தத் துறையை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது மட்டுமல்லாமல் இதில் சில உள் நோக்கங்கள் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அமேசான் மற்றும் ஃப்யூச்சர் க்ரூப்புக்கு இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அல்லது, அமேசான் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நேரடியாக ஒரு உடன்பாட்டை எட்ட விரும்பி, இந்த ஒப்பந்தத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் இது குறித்த தெளிவான காட்சி கிடைக்கும்.

(அலோக் ஜோஷி பொருளாதார விவகாரங்களில் தேர்ந்தவர். இவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: