பிரான்ஸுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிப்பது ஏன்?

பிரான்ஸுக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன்?

பட மூலாதாரம், Reuters

இந்த விஷயம் நடந்த நாள் 2019 ஆகஸ்ட் 22. பிரதமர் நரேந்திர மோதி, பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருந்தார். செய்தியாளர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

காஷ்மீரில் 370 வது பிரிவை நீக்குவது குறித்து பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், "கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் உள்ள சாதாரண குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதில் பிரான்ஸ் கவனம் செலுத்துகிறது," என்றார்.

அதே நேரத்தில், பிரதமர் மோதியுடன் பேசியதாகவும் அவர் கூறினார். இந்த விஷயத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்ரோங் குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கும் இது பொருந்தும் என்றும் மக்ரோங் வலியுறுத்தினார்.

இப்போது 2020 அக்டோபர் 28ஆம் தேதிக்கு செல்வோம். பிரான்ஸில் இஸ்லாம் குறித்த சமீபத்திய சர்ச்சை தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் பிரான்ஸ் அதிபரை பகிரங்கமாக ஆதரித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,"சர்வதேச விவாதத்தின் மிக அடிப்படையான தரங்களை மீறி அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கிற்கு எதிராக, ஏற்றுக்கொள்ள முடியாத தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். பிரெஞ்சு ஆசிரியரின் உயிரை பலிகொண்ட மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் நாங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் எந்த நியாயமும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் பிரான்ஸுடன் உறுதியாக நிற்பது பற்றிப் பேசியுள்ளன.

வியாழக்கிழமை பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் ஒருவர் கத்தியால் தாக்கியதில் மூன்று பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் மோதி ட்வீட் செய்து அதைக் கண்டித்தார்.

இதன் பின்னர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

ஆனால் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவின் போபால் நகரில் நடந்தன.

இந்தியாவின் ஆதரவு குறித்து பிரான்ஸில் கருத்து

பிரான்ஸுக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன்?

பட மூலாதாரம், PTI

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை இந்தியாவுக்கான பிரான்ஸின் தூதர் எம்மானுவேல் லீனைன், ட்வீட் செய்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸும் இந்தியாவும் எப்போதும் ஒருவரை ஒருவர் நம்பலாம் என்று கூறியுள்ளார்.

காஷ்மீரில் மனித உரிமைகள் பிரச்சனையில் பிரான்ஸ் இந்தியாவை பகிரங்கமாக ஆதரிக்காதபோது, ​​பிரான்ஸில் நடப்பது தொடர்பாக இந்தியா ஏன் அந்த நாட்டை ஆதரிக்கிறது?

இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான நட்புதான் இதற்கு ஒரே காரணமா அல்லது பின்னணியில் வேறு ஏதாவது இருக்கிறதா?

இரு நாடுகளின் உறவுகளையும் கண்காணிக்கும் ஐ.ஆர்.ஐ.எஸ் கழகத்தில், இணை ஆராய்ச்சியாளர் ஜான் ஜோசப் பைலோட் தற்போது பிரான்ஸில் வசித்து வருகிறார்.

பாரிஸிலிருந்து பிபிசியிடம் பேசிய அவர், "இந்தியாவின் இந்த ஆதரவு குறித்து பிரெஞ்சு ஊடகங்களில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் பார்க்க முடியவில்லை. இந்தியாவின் இந்த ஆதரவுக்கு பிரான்ஸில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, கோவிட் -19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, பிரான்ஸில் புதன்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனம் அந்த செய்தியின் மீது அதிகமாக இருந்தது. மறுபுறம் பிரான்ஸில் 'இஸ்லாமோஃபோபியா' (இஸ்லாம் மீதான வெறுப்பு மற்றும் பய உணர்வு) பற்றி ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த நாட்டின் (இந்தியா) சமய சார்பின்மையை தனது சமயசார்பின்மைக்கு ஒப்பாக பிரான்ஸ் கருதவில்லையோ, அந்த நாட்டின் ஆதரவால் மக்ரோங் அதிகமாக எதையும் பெறமுடியாது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் மனித உரிமைகள் பிரச்சனையில் பிரான்ஸ் குரல் எழுப்பி வருகிறது, "என்று தெரிவித்தார்.

"இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பிரான்ஸுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடப்பட்ட அதே நேரத்தில், பிரான்ஸின் சேனல் ARTE இல், ஜம்மு-காஷ்மீரில் எந்த ஒரு இந்திய குடிமகனும், விவசாய நிலம் அல்லாத நிலங்களை வாங்கமுடியும் என்ற செய்தி வந்துகொண்டிருந்தது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜான்-ஜோசப் பைலோட் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உறவை தொடர்ந்து கவனித்து வருகிறார். ARTE , பிரான்ஸின் செல்வாக்குமிக்க சேனல்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

மக்ரோங்குக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதற்கான செய்திகளை விடுத்து , காஷ்மீரின் புதிய நிலச் சட்டத்தின் செய்திகளைக் காண்பிக்கும் போக்கானது, இந்தியாவின் எந்த அம்சத்தை பிரெஞ்சு ஊடகங்கள் அதிகம் விவாதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

ஆகவேதான், ஒன்றேகால் ஆண்டுக்கு முன்பான மோதி மற்றும் மக்ரோங்கின் சந்திப்பு இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸுக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன்?

பட மூலாதாரம், EPA

ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இந்த பிரச்சனையால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது என்று சொல்லமுடியாது. இது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே.

"இந்தியா, பிரான்ஸுக்கு ஆதரவு தெரிவிக்க பல காரணங்கள் உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை இது காட்டுகிறது. தேவைப்படும் காலங்களில் இந்தியா தனது நண்பரான பிரான்ஸுடன் நிற்கிறது. ஆனால் இதற்கு இன்னொரு காரணம் சீனாவை எதிர்க்க அவர்கள் இருவருக்கும், ஒருவருக்கொருவர் தேவை. சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைத் திரட்ட இந்தியா முயற்சிக்கிறது. மறுபுறம், சீனா உலகில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் வேகத்தை ஐரோப்பிய நாடுகள் , மனித உரிமைகள் மற்றும் பிற மதிப்புகளுக்கு எதிரானதாக பார்க்கின்றன, "என்று அவர் மேலும் கூறுகிறார்.

'பயங்கரவாதத்தின்' மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் தானும் ஒன்று என்று இந்தியா எப்போதும் சர்வதேச அளவில் கூறிவருகிறது. அதனால்தான் பிரான்ஸிலோ அல்லது பிற நாடுகளிலோ இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கும்போது இந்தியா வெளிப்படையாக கருத்துதெரிவிப்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

இந்தியா - பிரான்ஸ் உறவுகள்

ராகேஷ் சூட், பிரான்ஸிற்கான இந்திய தூதராக இருந்துள்ளார்.

இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உறவை ஒரே வரியில் அவர் விளக்குகிறார். "இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான நட்பு உள்ளது. இது சோதனையின்கீழ் வரும்போது ஒவ்வொரு முறையும் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,"என்று குறிப்பிடுகிறார்.

பிரெஞ்சு அதிபர் காஷ்மீரில் மனித உரிமைகள் பிரச்சனையை ஏன் எழுப்புகிறார்?

"பிரான்ஸின் சமயசார்பின்மைக்கு அதன் சொந்த வரையறை உள்ளது. அதன் கீழ் எந்த மத அடையாளமும் பொது இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. பிரான்ஸில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் மதச்சார்பின்மை குறித்த இந்த வரையறை முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் ஹிஜாப்பை கூடாது என்று சொன்னால், கிறிஸ்தவ சிலுவையையும் அதே போல சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் சமயசார்பின்மை வேறுபட்டது. இது பற்றிய புரிதல் இரு நாடுகளிலும் வேறுபட்டது. " என்று அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்கிறார்.

ஆனால் காஷ்மீரில் மனித உரிமைகள் பற்றி பிரான்ஸ் பேசுவதால், இந்தியாவும் பிரான்ஸும் நண்பர்கள் அல்ல என்று சொல்லமுடியாது என்று ராகேஷ் சூட் கருதுகிறார்.

அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் இரு நாடுகளும் நல்ல உறவைக் கொண்டுள்ளன என்று ஜான்-ஜோசப் பைலோட் நம்புகிறார். மோதி- மக்ரோங் இடையிலான இணக்கம் ஆரம்பத்தில் இருந்தே மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால் இரு நாடுகளின் மக்களிடையே இது இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இந்தியாவை பிரான்ஸ் எப்போதெல்லாம் ஆதரித்தது?

பிரான்ஸுக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன்?

பட மூலாதாரம், PTI

1998 ஆம் ஆண்டு அணுஆற்றல் சோதனையின் நேரத்தை நினைவு கூர்ந்த ராகேஷ் சூட், "உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியாவை கைவிட்ட நேரத்தில், இந்தியாவுக்கு பிரான்ஸிடமிருந்து அதிக உதவி கிடைத்தது. ஆசியாவில் ஒரு நாடு எங்கள் கூட்டாளி என்றால் அது இந்தியாதான் என்று பிரான்ஸ் அப்போது தெரிவித்தது. இந்த நிலைப்பாடு இன்று வரை தொடர்கிறது," என்று தெரிவித்தார்.

1998 மே 11 ஆம் தேதி, அடல் பிஹாரி வாஜ்பேயி அரசு , போக்ரானில் அணு சோதனை நடத்தியது. அதன் பிறகு, இந்தியா மீது பல சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டன. அந்த நெருக்கடியின் போதும் பிரான்ஸ் இந்தியாவை ஆதரித்தது.

இந்தியாவை பிரான்ஸ் ஆதரித்த மேலும் பல சந்தர்ப்பங்களும் உள்ளன என்று ராகேஷ் சூட் கூறுகிறார்.

"1982 ஆம் ஆண்டில், தாராபூர் அணுமின் நிலையத்திற்கு யுரேனியம் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது. அந்த நேரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து கூட உதவி கிடைக்கவில்லை. பிரான்ஸ் அப்போது உதவிக்கரம் நீட்டியது.

விண்வெளித் திட்டத்திலும் இந்தியாவும் பிரான்ஸும் நிறைய கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளன. நீர்மூழ்கிக்கப்பலை உருவாக்குவதிலும் பிரான்ஸ் இந்தியாவிற்கு உதவுகிறது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று கூறிய முதல் நாடு பிரான்ஸ்.

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இவ்வாறு சொல்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே பிரான்ஸ் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது. சீனாவுடனான எல்லை பதற்றத்திற்கு இடையே நமது நாட்டில் ரஃபால் விமானங்கள் வந்துசேர்ந்தன. இந்த போர் விமானங்களையும் இந்தியா பிரான்ஸிடமிருந்துதான் வாங்கியுள்ளது. இந்த இரு நாடுகளும் சர்வதேச சூரியஆற்றல் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் உள்ளன. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் இந்தியாவுக்கும் பிரான்ஸூக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் சிறப்பாக இருந்தன என்பதைக் காட்டுகிறது," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான வர்த்தகம்

பிரான்ஸுக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன்?

பட மூலாதாரம், Indian Embassy in Paris

பிரதமர் மோதி ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் சென்ற நாடுகளில் பிரான்ஸும் ஒன்று.

பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 11.59 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு வர்த்தகம் இருந்தது.

இந்தியா பிரான்ஸுக்கு செய்யும் ஏற்றுமதி அதிகமாக உள்ளது . பிரான்ஸிலிருந்து இறக்குமதி குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை, தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியா பிரான்ஸுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில், பருத்தி ஆடைகள் மற்றும் உடைகள் முக்கியமானவை. பிரான்ஸ் இந்தியாவுக்கு விற்கும் பொருட்களில் பூச்சி கொல்லிகள், தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான மருந்துகள், பிற மருத்துவ மற்றும் ரசாயன பொருட்கள் அடங்கும்.

இது மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே பல நிலைகளில் ஒப்பந்தங்களும் முதலீடுகளும் நடந்துள்ளன.

கோவிட் 19 காலகட்டத்தில் கூட, இந்தியாவின் வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா, பிரான்ஸ் சென்றிருப்பதற்கு இதுவே காரணம். அங்கிருந்து அவர் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கும் செல்வார்.

வியாழக்கிழமை பிரான்ஸை அடைந்த அவர் பிரதமர் மோதியின் செய்தியை மீண்டும் நினைவூட்டினார். இந்தப்பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் அன்பை பிரதிபலிக்கிறது.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: