பாபர் மசூதி தீர்ப்பு: இந்தியாவில் முன்பை விட கையறுநிலையில் இருக்கிறார்களா முஸ்லிம்கள்?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா
சுமார் மூன்று தசாப்த காலம், 850 சாட்சிகள், 7,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ டேப்கள் என விசாரணை நடந்த பிறகு, புனித நகராகக் கருதப்படும் அயோத்தியில் இந்து கும்பலைச் சேர்ந்தவர்கள் 16வது நூற்றாண்டைச் சேர்ந்த மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது தொடர்பான வழக்கில் யாரும் குற்றவாளிகள் இல்லை என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் இந்திய முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானியும், பாஜக மூத்த தலைவர்கள் பலரும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்து புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், 1992ல் ``சமூக விரோதிகள்'' மசூதியை இடித்தனர் என்றும், அது திட்டமிட்ட செயல் கிடையாது என்றும் கூறியுள்ளது.
சில மணி நேரங்களில் நடந்து முடிந்த மசூதி இடிப்பு சம்பவம், திட்டமிட்டு ஒத்திகை பார்த்த பிறகு நடந்த சம்பவம் என்பதற்கும், ஆயிரக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், உள்ளூர் காவல் துறையினரின் உடந்தையுடன் நடந்தது என்பதற்கும் எண்ணற்ற நேரடி சாட்சியங்கள் இருந்தும் தீர்ப்பு இவ்வாறு அமைந்துள்ளது.
இது ``திட்டமிட்டு நடந்த செயல்பாடு'' என்றும் ``சட்டத்தின் ஆட்சியை அவமானகரமான வகையில் மீறிய செயல்'' என்றும் கடந்த ஆண்டு இந்தியாவின் உச்சநீதிமன்றம் இதுபற்றிக் கூறியுள்ளது.
எனவே, இந்த விடுதலைகளுக்கு எப்படி விளக்கம் தரப் போகிறோம்?
இந்தியாவின் சீர்குலைந்த மற்றும் மந்தமான நீதி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மற்றும் ஒரு நிரூபணமாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது. அரசியல் குறுக்கீடுகள், போதிய நிதி அளிக்காதது மற்றும் பலவீனமான செயல் திறன் ஆகிய காரணங்கள் நீதித் துறை கடந்த சில தசாப்தங்களில், சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமாகிவிட்டது என்று பலரும் அஞ்சுகின்றனர்.


இந்தியாவில் வாழும் 200 மில்லியன் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படும் நிலை தீவிரமடைவதைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, பன்முகத்தன்மையான மக்கள் வாழும், மதச்சார்பற்ற இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நரேந்திர மோதி தலைமையிலான இந்து தேசியவாத பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு, அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

பட மூலாதாரம், AFP
மாட்டிறைச்சி சாப்பிட்டது அல்லது இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுக்களை வாகனங்களில் கொண்டு சென்றதற்காக முஸ்லிம்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பக்கத்து நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத அகதிகள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்த மோதியின் அரசாங்கம் சட்ட திருத்தங்கள் செய்துள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, அரசியல் சட்டத்தில் தரப்பட்டிருந்த தன்னாட்சி அந்தஸ்தை மோதி அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இந்த ஆண்டு முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் பரவுதலுக்கு அவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டினர். டெல்லியில் நடந்த இஸ்லாமிய குழுவின் முஸ்லிம் மத நிகழ்வு ஒன்றில பங்கேற்றவர்கள் மூலம் கொரோனா பரவியதாக பரப்பப்பட்டது.
நோய்த் தொற்று காலத்தில் நடந்த பெரிய அளவிலான இந்து மத நிகழ்வுகளின்போது இதுபோன்ற அரசியல், பொது அல்லது ஊடகங்களில் கருத்துகள் கூறப்படவில்லை அல்லது பலிகடா ஆக்கப்படவில்லை.
இவை மட்டும் அல்ல. சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த குளிர்காலத்தின் போது டெல்லியில் நடந்த கலவரங்களைத் தூண்டியதாகக் கூறி, முஸ்லிம் மாணவர்கள் மற்றும் இயக்கவாதிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் தூண்டுதலில் ஈடுபட்ட பல இந்து பிரமுகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அடக்குமுறைகளின் தொடர்ச்சியாகத் தான் பாபர் மசூதி தீர்ப்பு அமைந்துள்ளது என்று முஸ்லிம்கள் பலர் கூறுகின்றனர்.


தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு நிஜமானதாக இருக்கிறது. இந்து பெரும்பான்மை சித்தாந்தம் குறித்து மோதியின் கட்சி எதையும் மறைக்கவில்லை. பிரபல செய்திச் சேனல்கள் வெளிப்படையாக முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டுகின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் சக்தி மிகுந்த பிராந்திய கட்சிகளாக இருந்த, முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த கட்சிகள், இப்போது அவர்களைக் கைவிட்டுவிட்டதாகத் தோன்றுகிறது.
முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், முஸ்லிம்களுக்கு கைமாறாக எதையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப் படுகிறது. அந்த சமுதாயத்திலேயே கூட வெளிப்படையாகப் பேச சில தலைவர்கள் மட்டுமே உள்ளனர்.
``நிர்வாக முறையின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தங்களை தலைதூக்க முடியாத நெருக்கடிக்கு தள்ளிவிட்டார்கள் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர். அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் தங்களைக் கைவிட்டு விட்டதாக நினைக்கின்றனர். சமுதாயத்தில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன'' என்று டெல்லியை சேர்ந்த சிந்தனை அமைப்பான கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் அசிம் அலி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
உண்மையில், முஸ்லிம்களை ஓரங்கட்டுவதில் இந்தியாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ``தேச விரோதிகள்'' என்று குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ``அதே சமயத்தில் சமாதானப் படுத்தப்படுபவர்களாகவும்'' இருந்து இரட்டை முத்திரைகளைத் தாங்கி வருகின்றனர் என்று ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு நியாயமற்ற முறையில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்று இந்து தேசியவாதிகள் கூறுவதை பல இந்தியர்கள் நம்பினாலும், முக்கியமான சமூகப் பொருளாதார ஆதாயங்களால் இந்தச் சமுதாயத்தினர் பயன் அடையவில்லை என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் நகரங்களில் முஸ்லிம்கள், எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் இடவசதிகள் அளிக்கப்படுவதில்லை. நாட்டின் பெருமைக்குரிய மத்திய காவல் படை அதிகாரிகளில் இந்தச் சமுதாயத்தினரின் எண்ணிக்கை 2016ல் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் முஸ்லிம்கள் மக்கள் தொகை 14 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே முறைப்படுத்திய சம்பளம் பெறும் வேலைகளில் உள்ளனர். இது தேசிய சராசரியைவிட பாதிக்கும் குறைவானது என்று ஓர் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.


தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் விகிதம் அதிகம். ஆனால் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது கல்வியைத் தொடராமல் போவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொருளாதார சூழல் தான் இதற்குப் பெரும்பாலும காரணமாக அமைகிறது. இந்திய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்களவையில் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 1980ல் இது 9 சதவீதமாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோது, ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லாமல் ஆட்சியைப் பிடித்த முதலாவது கட்சியாக இருந்தது.
எந்த மதத்துக்கு எதிராகவும் தங்கள் கட்சி பாகுபாடு காட்டவில்லை என்று மோதியும் அவருடைய சகாக்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். பல இஸ்லாமிய நாடுகள் தமக்கு ஆதரவாக இருப்பதாக மோதி கூறியுள்ளார். தனது அரசின் நலத் திட்டங்கள் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து ஏழைகளுக்கும் கிடைப்பதாக அவர் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் ``போலி மதசார்பின்மையை'' கடைப்பிடிப்பதாக பல ஆண்டுகளாக பாஜக கூறி வருகிறது.
இந்தப் புகாரில் உண்மை இருப்பதாக சிலர் நம்புகின்றனர். உதாரணமாக நாட்டின் கிழக்குப் பகுதியில் மேற்குவங்க மாநிலத்தில் 3 தசாப்தங்களுக்கும் மேலாக ஆட்சி செய்தது பற்றி அவர் குறிப்பிடுகிறார்கள். மாநில மக்கள் தொகையில் 25 சதவீதம் அளவுக்கு இருக்கும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அந்த ஆட்சி வெளிப்படையாக நடவடிக்கைகள் எடுத்ததைக் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இருந்தபோதிலும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் மத பதற்றம், பிரிவினைவாத அரசியல் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்றாலும், மேற்குவங்கத்தில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் பொருளாதார ரீதியிலும், மனிதவளக் குறியீட்டிலும் நல்ல நிலையில் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. ``மார்க்கெட்களில் மத வித்தியாசம் கிடையாது. எனவே குஜராத் போன்ற மாநிலங்களில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு வியாபாரம் நன்றாகவே நடக்கிறது'' என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த பேராசிரியர் மிர்ஸா அஸ்மெர் கூறுகிறார்.
பாஜக பின்பற்றும் வாக்கு வங்கி அரசியலுக்கான மத விஷயங்கள் காரணமாக முஸ்லிம்கள் ``தனி குழுக்களாக'' முன்னிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. ``எப்படி ஒருமுகப்படுத்துகிறார்கள்? உங்கள் அடையாளத்துக்கு இன்னொருவரை அச்சுறுத்தலாகக் காட்டும் நிலை உள்ளது'' என்று அரசியல் விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஜாப்ரெலோட் கூறியுள்ளார்.
இன தேசியவாதத்தில் உருவான ``இனவாத ஜனநாயகத்தை'' நோக்கி இந்தியா செல்கிறது என்று அவர் கருதுகிறார். ``உரிமைத்துவம் மற்றும் மேலாதிக்க எண்ணம் தீவிரமாக'' இருப்பதை அது காட்டுகிறது என்கிறார் அவர்.
முழுமையாக இருளாகிவிடவில்லை. பிரிவினையின் பாதிப்புகளில் இருந்து விடுபட்ட இளம் மற்றும் நடுத்தர இளைஞர்கள் உருவாகின்றனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பரவலாக நடந்த போராட்டங்களில், இதுபோன்ற முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தெருக்களில் வந்து போராடினர்.
அடங்கி இருப்பவர்கள், குரலற்ற சிறுபான்மையினர் என்ற தடைகளை உடைத்து அவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சமுதாய பயிற்சி மையங்கள் உருவாகி வருகின்றன. இந்தியாவில் மதிப்புமிக்க மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இளம் முஸ்லிம்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. ``இளம் முஸ்லிம்கள் பலர் தங்கள் ஆடையின் கைகளில் ஆக்கபூர்வமான முறையில் தங்கள் அடையாளங்களை அணிந்து கொள்கிறார்கள். தங்கள் கருத்துகளை வெளியிட அவர்கள் பயப்படுவதில்லை'' என்று அலி கூறுகிறார்.
ஆனால் கடைசியாக, இந்த விடுதலைகள் இந்திய முஸ்லிம்களிடம் கவலைகளை அதிகரிக்கச் செய்து, அநீதி இழைக்கப்பட்ட உணர்வை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும்.
``பல வழிகளில், அது கைவிடப்பட்ட சமுதாயமாகிவிட்டது. அதிகாரம் இல்லாத நிலைமை போன்ற உணவுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். தங்கள் அமைப்புகள், இந்து தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளால் பல ஆண்டுகளாக சுரண்டலுக்கு ஆளாகிவிட்டதாக உணர்கிறார்கள்'' என்று அரசியல் விஞ்ஞானி ஜாஹீர் அலி தெரிவித்தார். ``வறுமை காரணமாக அவர்களின் நிலை மேலும் மோசமாகிவிட்டது'' என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- "எனக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கு புதினே காரணம்" - ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவால்னி குற்றச்சாட்டு
- ஐபிஎல் 2020: MI Vs KKIP - புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி முதலிடம்; பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- ராகுல், பிரியங்கா விடுவிப்பு: ஹாத்ரஸ் பெண்ணின் குடும்பத்தை எச்சரித்தாரா ஆட்சியர் - என்ன நடந்தது?
- ஏர் இந்தியா ஒன்: இந்திய பிரதமருக்காக வந்தது புதிய விமானம் - விலை எவ்வளவு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












