ஐபிஎல் 2020: MI Vs KKIP - புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி முதலிடம்; பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

பட மூலாதாரம், BCCI / IPL
ஐபிஎல் தொடரின் நேற்றைய 13ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதிக் கொண்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் களமிறங்கிய மும்பை அணி 192 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
மும்பை இந்தியனஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் குவிண்டன் டி காக் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர் ஆனால் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார் குவிண்டன்.
அடுத்து வந்த சூர்யா குமார் யாதவ் நான்காவது ஓவரில் ரன் அவுட் ஆனார். அப்போது 21 ரன்களை எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
சூரிய குமார் யாதவிற்கு இஷாந்த் கிஷன் களமிறங்கினார். மறுமுனையில் கேப்டன் ரோஹித் ஷர்மா நிலைத்து ஆடினார்.
அதன்பிறகு 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 14ஆவது ஓவரில் மும்பை அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது.
அதன்பின் களமிறங்கிய போலார்ட்டுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் ரோஹித் ஷர்மா. ரோஹித் ஷர்மா 45 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார்.
நேற்றைய போட்டியின் அரை சதம் மூலம் ரோஹித் ஷர்மாவுக்கு மற்றொரு சிறப்பும் வந்து சேர்ந்தது. ஆம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்துள்ளார் ரோஹித் ஷர்மா.
ரோஹித் ஷர்மாவை அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்த போலார்ட் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை எடுத்தார்.
அதன்பிறகு 20 ஓவர் முடிவுகளில் மும்பை அணி 191 ரன்களை எடுத்தது.

பட மூலாதாரம், BCCI / IPL
192 ரன்கள் இலக்கு என்று களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான மயங்க் அகர்வால் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 5ஆவது ஓவரில் பும்ராவின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்துவந்த கருண் நாயர் குர்னால் பாண்ட்யா வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலும் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் சாஹர் வீசிய பந்தில் 17 ரன்களை எடுத்திருந்த நிலையில் 9ஆவது ஓவரில் அவுட் ஆனார்.
அதன்பின் பூரன் மற்றும் மேக்வெல் இணைந்து அணிக்கு 40 ரன்களை சேர்த்தனர். ஆனால் அடுத்தடுத்த ஓவரில் அவர்கள் இருவரும் அவுட் ஆகினர். இருப்பினும் அணியில் ஓரளவு ரன்களை சேர்த்தார் பூரன் அவர் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 44 ரன்களை எடுத்தார்.
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது.
நேற்றைய போட்டிக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் வரிசையில் உள்ளது மும்பை அணி. அதனை தொடர்ந்து டெல்லி அணியும், கொல்கத்தா அணிகளும் உள்ளன. சென்னை அணி கடைசியில் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












