International Coffee Day: காபி பிரியரா நீங்கள்? - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை முடித்த பின்னரோ, நடுநடுவே சிறு இடைவேளையின்போது அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னரோ என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது.
சர்வதேச காபி கழகத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 1991ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 மில்லியன் 60 கிலோ காபி பைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக 2018ஆம் ஆண்டு காபி பயன்பாடு 160 மில்லியன் பைகளை தாண்டுமென்று கணிக்கப்பட்டது.
இன்று உலக காபி தினம் கொண்டாடப்படும் நிலையில், காபியை பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சர்யமளிக்கும் தகவல்களை தெரிந்துகொள்வோம்.
1. காபியும் ஒரு பழம்தான்!
பழுப்பு நிறத்திலிருக்கும் கொட்டையை பொடி செய்தே நீங்கள் காபி போடும் பொடி தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், அந்த கொட்டைகள் காபி செர்ரி என்ற பழத்தினுள்ளிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் ஒரு காபி செர்ரி பழத்தை கடித்துப்பார்த்தால் அதனுள்ளே இரண்டு விதைகள் இருக்கும். அதுதான் தட்டையான முகம் கொண்ட பக்கங்களுடன் வளர்ந்து பெரிய கொட்டைகளாக மாறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு விதைகளில் ஏதாவதொன்று வளராமல், ஒன்று மட்டும் வளர்ந்தால் அதற்கு பீபெர்ரி என்று பெயர். சாதாரண காபியை விட இந்த பீபெர்ரி கசப்பாக இருக்கும்.
2. சிலர் காபியை சாப்பிடுவார்கள்!

பட மூலாதாரம், Getty Images
நீங்கள் பல ஆண்டுகாலமாக காபி குடித்து வருபவராக இருக்கலாம். ஆனால், காபியை உண்ணும் வினோத பழக்கம் கொண்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில காபி நிறுவனங்கள் வீணான காபியை கொண்டு மாவை உருவாக்கி அதை பிரட், சாக்லேட், சாஸ் மற்றும் கேக்குகளிலும்கூட பயன்படுத்துகிறார்கள்.
3. கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காபி கொட்டை

பட மூலாதாரம், Getty Images
புனுகுப் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காபி கொட்டைதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்தது ஆகும்.
இந்தோனீசியாவிலுள்ள புனுகுப் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் கோபி லுவாக் என்னும் காபி கொட்டையின் 500 கிராம் 700 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.
அதாவது, சாதாரண காபி கொட்டைகள் இந்த பூனைகளுக்கு கொடுக்கப்பட்டு அதன் மலம் வழியாக அது வெளியேறும் வரை காத்திருந்து அந்த கொட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொடி செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தாய்லாந்திலுள்ள யானைகளால் உண்ணப்பட்டு அதன் மலத்திலிருந்து பெறப்படும் பிளாக் ஐவோரி காபி என்றழைக்கப்படும் காபி கொட்டைகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் 35 கிராம் அளவுள்ள சிறிய பை 85 டாலர்களுக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.
4. காபி உடல்நலனுக்கு நல்லது...
காபியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது.
இந்தாண்டின் தொடக்கத்தில் சஞ்சிகை ஒன்றில் பதிப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
10 ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் 16 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஒருவரது ஆற்றலையும், விளையாட்டு திறனையும் உடனடியாக புதுப்பிப்பதற்கு காபி பயன்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
5. காபி ஆபத்தையும் விளைவிக்கலாம்…

பட மூலாதாரம், Reuters
ஒருவித ஊக்கியாக செயல்படும் காபியை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தினால் அது உங்களது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருந்தால் காபியின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், கர்ப்பமாக இருக்கும்போது அதிகளவு காபியை அருந்துவது பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருப்பதற்கோ அல்லது சில சமயங்களில் கருச்சிதைவுக்கோ காரணமாகலாம்.
அதாவது, கர்ப்பமாக உள்ள பெண்கள் ஒருநாளைக்கு இரண்டு கோப்பை காபிக்கு மேல் குடிக்கக்கூடாது என்று பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
6. காபி எங்கு, யாரால், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
ஒன்பதாவது நூற்றாண்டில் எத்தியோப்பியாவை சேர்ந்த கல்டி என்ற ஆடு மேய்ப்பவர், தனது ஆடுகள் வித்தியாசமான மரத்திலுள்ள கொட்டைகளை உண்பதையும், அதன் காரணமாக அவை இரவு முழுவதும் சோர்வடையாமல் கண் விழித்திருந்ததையும் கண்டு ஆச்சர்யமடைந்தார்.
இதுகுறித்து, தனது ஊரிலுள்ள துறவிகளிடம் கல்டி கூறியதாகவும், அதை உணர்ந்த அவர்கள் அக்கொட்டைகளை சூடான பானத்தில் கலந்து குடித்தால் வெகுநேரம் வழிபாடுகளை சோர்வின்றி செய்ய முடியுமென்று எண்ணியதாகவும் நம்பப்படுகிறது.
7. காபி என்றால் ஒயின் என்று அர்த்தம்

பட மூலாதாரம், Getty Images
15ஆம் நூற்றாண்டு வாக்கில் காபி ஏமனில் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டது. காபி ஏமன் மொழியில் ஒயினை குறிக்க பயன்படுத்தப்படும் குவாஹா வார்த்தையால் வழங்கப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு பிறகு பெர்சியா, எகிப்து, சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் காபி பயிரிடப்பட்டது.
8. உலகின் முதல் காபி கடை….

பட மூலாதாரம், AFP
காபி வீடுகளில் மட்டுந்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் காபி பிரியர்கள் பலரால் அலுவலகத்தில் வேலையோ, வெளியே பயணமோ செய்ய முடியுமா? வாய்ப்பே இல்லைதானே? ஆம், தற்போது வீதியெங்கும் காணப்படும் காபி கடைகள் முதன் முதலாக மத்திய கிழக்கு நாடுகளில்தான் தொடங்கப்பட்டன.
காபி கடைகள் ஆரம்பிக்கப்பட்ட வெகு விரைவிலேயே அவை ஊர் கதை பேசும் இடமாகவும், செஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும் இடமாகவும், பாட்டு கேட்கும் பகுதியாகவும் மாறிவிட்டன.
9. காபி அதிகமாக சாகுபடி செய்யப்படும் நாடு

பட மூலாதாரம், Reuters
நீங்கள் இந்தியாவில் காபி குடித்தாலும், அமெரிக்காவில் காபி குடித்தாலும் அது ஒரே சுவையாக இருக்கக்கூட வாய்ப்புண்டு. ஏனெனில், "பீன் பெல்ட்" என்று என்றழைக்கப்படும் மெக்ஸிகோவின் கிழக்குப்பகுதிலிருந்து பப்புவா நியூகினியா வரையிலான பகுதியில்தான் மிக அதிகளவிலான காபி சாகுபடி செய்யப்படுகிறது.
அதாவது, அதிகபட்சமாக பிரேசிலில் 36 சதவீத காபியும், வியட்நாமில் 18 சதவீதமும், கொலம்பியாவில் 9 சதவீத காபியும் உற்பத்தி செய்யப்படுகிறது.
10. அதிக காபி குடிக்கும் நாடு

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச காபி கழகத்தின் தரவின்படி, உலகிலேயே பின்லாந்தை சேர்ந்த மக்கள்தான் அதிகளவில் காபி பருகுகின்றனர். அதாவது ஒரு வருடத்திற்கு, பின்லாந்தை சேர்ந்த ஒருவர் சுமார் 12 கிலோ காபியை பருகுகிறார்.
அதைத்தொடர்ந்து, நார்வே (9.9 கிலோ). ஐஸ்லாந்து (9 கிலோ), டென்மார்க் (8.7 கிலோ) ஆகிய நாடுகள் உள்ளன.
பிற செய்திகள்:
- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. செயல்பட்டவிதம் சரியா?
- தமிழகத்தில் இன்று அமலாகும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் - 10 முக்கிய தகவல்கள்
- ஐபிஎல் 2020: KKR Vs RR - பலத்த அடி வாங்கிய ராஜஸ்தான் அணி; தரவரிசை பட்டியலில் முன்னேறிய கொல்கத்தா
- பாபர் மசூதி இடிப்பு: "ஒரு முஸ்ஸிமாக தொடர்ந்து அவமானப்படுகிறேன்" - ஒவைஸி எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












