மும்பை மாநகராட்சி தேர்தல்: தாக்கரே சகோதரர்கள் ஒன்றுசேர்ந்தும் பாஜக வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விநாயக் ஹோகாடே
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவு மகாராஷ்டிரா மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனாவின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சி மீண்டும் தாக்கரே அணியின் கைக்குத் திரும்புமா அல்லது இந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றுமா என்பதே முக்கியமான கேள்வியாக இருந்தது.
பள்ளிக் கல்வியில் கட்டாய ஹிந்திக்கு எதிர்ப்பு, மராத்தி மொழி விவகாரம், அந்தப் பின்னணியில் தாக்கரே சகோதரர்களின் சமரசம் என கடந்த ஓராண்டாகவே பல்வேறு விஷயங்கள் மகாராஷ்டிர அரசியலில் கவனம் பெற்றன.
'சிவசேனா யாருடையது? ஷிண்டேவின் சிவசேனாவா, தாக்கரேயின் சிவசேனாவா?' என்கிற கேள்விகளுக்கும் இந்தத் தேர்தல் ஒரு பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இத்தனை அரசியல் முக்கியத்துவம் கொண்ட சூழலில் கூட, தாக்கரே சகோதரர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றிணைப்பு இருந்தபோதும், மும்பை மாநகராட்சியை அவர்களால் ஏன் தக்க வைக்க முடியவில்லை?
இந்தக் கேள்வியே இப்போது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
தாக்கரே சகோதரர்களுக்கு பின்னடைவு
மும்பை மாநகராட்சியில் 227 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
ஒருபுறம், தாக்கரே சகோதரர்களின் கூட்டணி, "கடந்த 25 ஆண்டுகளாக தாக்கரேக்களின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை, மராத்தி மக்களின் சொத்தாகவே தொடரும்" என்ற மொழி அடிப்படையிலான அரசியல் பிரசாரத்தை முன்வைத்தது
மறுபுறம், பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி, "மும்பையின் மேயர் ஒரு முஸ்லிமாக இருக்கமாட்டார்" என்ற மத அடிப்படையிலான பிரசாரம் மேற்கொண்டது.
தேர்தலில் மும்பையில் பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி பெரும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், தாக்கரே சகோதரர்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவு
பாஜக – 89
சிவசேனா (ஷிண்டே ) – 29
சிவசேனா (உத்தவ்) – 65
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) – 6
காங்கிரஸ் – 24
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) – 1
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) – 3
ஏஎம்ஐஎம் – 8
சமாஜ்வாதி – 2
மொத்தம் – 227

பட மூலாதாரம், Getty Images
'எதிர்பார்ப்புகளை தாண்டி கடுமையாக போராடிய தாக்கரே'
இந்த மும்பை மாநகராட்சி தேர்தல் மொழிக்கும் மதத்துக்கும் இடையிலான போட்டியாக அமைந்துவிட்டது.
பள்ளிக் கல்வியில் ஹிந்தியை கட்டாயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிரான பின்னணியில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றிணைந்தனர். அந்தக் கூட்டணியை அறிவிக்கும் போது, "மும்பையின் மேயர் மராத்தியராகவே இருப்பார்" என்று கூறி, அவர்கள் இந்த விவகாரத்தை மொழி அரசியலாக மாற்றினர்.
இதற்கு எதிராக, பாஜக இந்தத் தேர்தலை மொழி விவகாரத்திலிருந்து மதம் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்குத் திருப்ப முழுமையாக முயன்றது.
பாஜக மும்பை தலைவர் அமித் சதாம், "மும்பையின் மேயராக எந்த 'கான்' என்பவரும் நியமிக்கப்பட மாட்டார்" என்று கூறிய கருத்தே, அந்த முயற்சிகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இந்த முடிவுகளை ஆய்வு செய்த ஹேமந்த் தேசாய், "பாரதிய ஜனதா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மகாயுதி முன்வைத்த 'உத்தவ் தாக்கரேயின் சிவசேனா முடிவுக்கு வரும்' என்ற கூற்று நிறைவேறவில்லை. அதாவது, 'தாக்கரே பிராண்ட்'-ஐ அவர்களால் குலைக்க முடியவில்லை" என்று கூறுகிறார்.
தாக்கரேக்கு இது ஒரு மன உறுதி போராட்டமாகவும், ஒருகட்டத்தில் தாக்குப்பிடிக்கும் போராட்டமாகவும் தோன்றியது. உண்மையில், பல வகைகளில் அது அப்படித்தான் இருந்தது.
'மராத்தியர் பெரும்பான்மை பகுதிகளில் தாக்கரே ஆதிக்கம்'
2017 மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, மாநில அரசியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிவசேனா இரண்டானது, அதன்பிறகு மும்பை மாநகராட்சியின் பல கவுன்சிலர்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்குச் செல்ல, இது உத்தவ் தாக்கரேக்கு ஒரு தாக்குப்பிடிக்கும் போராட்டமாகவே மாறியது.
இதுகுறித்து பேசிய ஹேமந்த் தேசாய், "மராத்தி, பாலாசாகேப் தாக்கரே அல்லது அஸ்மிதா (அடையாளம்) என்ற பிராண்டை மக்கள் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு மாற்றத் தயாராக இல்லை. அது தாக்கரே குடும்பத்திற்கே சொந்தமானது என்பதையே இது வெளிப்படுத்துகிறது" என்று கூறுகிறார்.
ஆனால், தாக்கரே சகோதரர்கள் இந்தத் தேர்தலில் மராத்தி அடையாள உணர்வை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதைப் பற்றி ராஜேந்திர சதே கூறுகையில், "தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்ததும் பெரிய மாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் அதிசயமான அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒன்றும் நடக்கவில்லை. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளில் பாஜக, தாக்கரே சிவசேனாவை அந்த அளவுக்கு பலவீனப்படுத்தி விட்டது; இப்போது ஒரு வலுவான அமைப்பே இல்லை" என்கிறார்.
"அதனால், தாக்கரே உணர்ச்சி அடிப்படையில் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறைந்த காலக்கெடுவில் தன்னால் முடிந்த அளவிற்கு அவர் செய்தார்" என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மராத்தி அடையாள உணர்வை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளனர் என்று சொல்லலாம். ஏனெனில், இதைவிடக் குறைவான வெற்றியே அவர்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அந்த வகையில், அவர்கள் இதுவரை பெற்றுள்ள வெற்றி சிறிதல்ல. மராத்தியர் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும், பாஜக அவர்களை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் ஒரு உணர்வை உருவாக்குவதில் அவர்கள் சந்தேகமில்லாமல் வெற்றி பெற்றுள்ளனர்" என்றார்.
பிபிசி மராத்தி ஆசிரியர் அபிஜித் காம்ப்ளே, மும்பையில் மராட்டியர் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் வாக்குகள் தாக்கரே சகோதரர்களுக்கு ஆதரவாகவே பதிவாகியுள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுவதாகத் தெரிவித்தார்.
மேலும், "தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்திருந்தாலும், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்களின் செயல்பாடு ஒப்பீட்டளவில் சிறப்பானதாகவே உள்ளது. அவர்களுக்கு எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய சவால்கள் இன்னும் அதிகமாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.

"உணர்ச்சிகரமான அரசியல் பிடிப்பு குறைந்துவிட்டதா?"
தாக்கரே சகோதரர்கள், மராத்தி மொழி விவகாரத்தை மையமாக வைத்து மொழி அடிப்படையிலான துருவப்படுத்தலை செய்ய முயன்றனர். இதனுடன், 'தாக்கரே பிராண்ட்'-ஐ பாதுகாப்பது என்பதும் இந்தத் தேர்தலில் அவர்களுக்கான ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.
இரு தாக்கரே சகோதரர்களின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்யும் அபய் தேஷ்பாண்டே, "உத்தவ் தாக்கரே கடுமையான போட்டியை அளித்துள்ளார். ஆனால் எம்.என்.எஸ்-ன் (MNS) செயல்திறன் ஒப்பிடத்தக்கதாக இல்லை. மராத்தியர் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் உத்தவ் தாக்கரே கூடுதல் வாக்குகளைப் பெற முடிந்தது. ஆனால் ராஜ் தாக்கரேவால் அதைச் செய்ய முடியவில்லை, எனவே அவரது எண்ணிக்கை (வாக்கு எண்ணிக்கை) குறைவானதாகத் தெரிகிறது" என்று கூறினார்.
"மும்பையில் வெற்றிபெற மராத்தியர் வாக்குகள் மட்டும் போதாது என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால், இந்த முறை தாக்கரே சகோதரர்கள் ஒன்றாக இருந்தாலும், சில கவுன்சிலர்கள் ஷிண்டே பக்கம் சென்றனர், இதனால் வாக்காளர்கள் சிறிது மாறியுள்ளனர். அவர்கள் (ஷிண்டே குழு) அதனால் பயனடைந்தனர், பாஜகவும் பயனடைந்தது" என்றும் அவர் கூறினார்.
அதோடு, "ஷிண்டே குழுவினர் குறைவான இடங்களில், அதாவது 90 இடங்களில் போட்டியிட்டனர். 69 இடங்களில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே நேரடிப் போட்டி இருந்தது. இந்த இடங்களில் பெரும்பாலானவற்றில், வாக்காளர்கள் தாக்கரே பக்கமே நின்றதாகத் தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த அரசியலுக்கான அனுதாபம் உத்தவ் தாக்கரேவுக்குச் சாதகமாக இருந்தது போல் தெரிகிறது, அவர் அதனால் பயனடைந்துள்ளார். தாக்கரே என்ற பெயர் இன்னும் மும்பையிலிருந்து அழியவில்லை என்பதையும் இது காட்டுகிறது" என்றும் அபய் தேஷ்பாண்டே கூறினார்.
இந்த விவகாரத்தின் வேறு ஒரு பக்கத்தை ராஜேந்திர சாத்தே முன்வைக்கிறார்.
"கடந்த 5 ஆண்டுகளில், மும்பையில் உள்ள தனது மிகப்பெரிய போட்டியாளரான சிவசேனாவை பாஜக அழித்துள்ளது. ஒருபுறம், அவர்கள் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கைகோர்த்திருந்தாலும், அது அதிகம் வளராமல் இருப்பதையும் உறுதி செய்துள்ளனர். ஷிண்டேவின் சிவசேனா பெற்றுள்ள வெற்றி தாக்கரேவைக் காட்டிலும் மிகவும் குறைவு." என்று அவர் கூறுகிறார்.
காங்கிரஸ் - வஞ்சித் பகுஜன் அகாதி கூட்டணியின் தாக்கம்

பட மூலாதாரம், Facebook/Indian National Congress - Maharashtra
இந்தத் தேர்தலில் நடந்த மற்றொரு அசாதாரண விஷயம், காங்கிரஸ் மற்றும் வஞ்சித் பகுஜன் அகாதி ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணி.
கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போது முறிந்துபோன கூட்டணிப் பேச்சுகள், இந்த மாநகராட்சித் தேர்தலில் வெற்றிகரமானதாக அமைந்தன. மும்பையில், காங்கிரஸும் வஞ்சித் பகுஜன் அகாதியும் கூட்டணி அமைத்துப போட்டியிட்டன. தலித்-முஸ்லிம் வாக்குகளை வெல்வதில் அவை வெற்றியடைந்தாலும் அது குறைந்த அளவே இருந்தது என்று கூறலாம்.
இதுபற்றிப் பேசிய ஹேமந்த் தேசாய், "கடந்த மாநகராட்சித் தேர்தலில், காங்கிரஸ் 31 இடங்களை வென்றிருந்தது. இப்போது 24 இடங்கள் மட்டுமே. காங்கிரஸ் வெளிச்சத்திற்கு வராவிட்டாலும், களத்தில் இல்லாவிட்டாலும் இத்தனை இடங்களை வென்றுள்ளது. காங்கிரசுக்கு தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்பதே இதன் பொருள்" என்றார்.
"முஸ்லிம் வாக்குகள் உத்தவ் தாக்கரேவுக்குக் கிடைத்துள்ளன. ஆனால் அவை எம்.என்.எஸ்-க்குச் சென்றதாகத் தெரியவில்லை. அந்த முஸ்லீம் வாக்குகள் காங்கிரஸ்-வஞ்சித் கூட்டணிக்குச் சென்றிருக்கலாம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பாஜக வெற்றி பெற்றது எப்படி?

உண்மையில், இந்தத் தேர்தலுக்கான களத்தை தாக்கரே சகோதரர்களே உருவாக்கியிருந்தனர். ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, 'தாக்கரே பிராண்ட்', மராத்தி மக்களின் இருப்பு போன்ற அம்சங்கள் அனைத்தும் தேர்தல் விவாதத்தின் மையமாக இருந்தன.
ஆனால், அப்படியிருந்தும் பாஜக ஏன் இந்த அளவிலான வெற்றியைப் பெற்றது?
இதுகுறித்து பிபிசி மராத்தியிடம் பேசிய ராஜேந்திர சதே, "மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகளை உடனடி பிரசார விஷயங்களின் அடிப்படையில் மட்டும் ஆய்வு செய்ய முடியாது. இந்த முடிவுகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியவை. மும்பையை வெல்ல, சிவசேனாவைப் பிரிப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், சிவசேனா உடையாமல் ஒன்றுபட்டிருந்திருந்தால், இந்த முடிவுகளின் எண்ணிக்கைகளே தெளிவாக என்ன நடந்திருக்கும் என்பதை காட்டுகின்றன" என்று கூறுகிறார்.
மேலும் அவர், "சிவசேனா ஒன்றுபட்டிருந்தால், மும்பையை மட்டும் அல்ல - தானே, நவி மும்பை, கல்யாண்... ஒருவேளை சம்பாஜிநகர் (ஔரங்காபாத்) கூட சிவசேனாவே வென்றிருக்கும்" என்றும் குறிப்பிட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












