அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
- எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக கூறுகின்றன.
"அவர்களின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அழிந்துவிட்டன," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார்.
"அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். நான், 'மிகவும் தாமதமாகிவிட்டது!' என்று சொன்னேன்"எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளின் மீதும் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் இரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ராணுவ ரீதியாக மேலோங்கியிருப்பதாக பரவலாகக் கருதப்படும் நிலையில், இந்தப் போரில் தாக்குப்பிடிக்க இரானுக்கு என்ன வழிகள் உள்ளன?
இரான் எந்த மாதிரியான உத்தியைப் பின்பற்றுகிறது?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
இரான் உத்தி என்ன?
லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு பாதுகாப்பு நிபுணரான முனைவர் எச்.ஏ. ஹெல்லியர், இரானின் தற்போதைய ராணுவ அணுகுமுறை அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலையோ "ஒரு வழக்கமான போரில்" தோற்கடிப்பது அல்ல, மாறாக எந்தவொரு மோதலையும் "நீடித்ததாகவும், பிராந்திய ரீதியாக பரவியதாகவும் மற்றும் பொருளாதார ரீதியாக அதிக விலை உயர்ந்ததாக" மாற்றுவதாகும் என்கிறார்.
மேலும், "இரானால் வழக்கமான முறையில் வெற்றி பெற முடியாது. ஆனால் மற்றவர்களின் வெற்றி அதிக விலை கொண்டதாகவும் நிச்சயமற்றதாகவும் இருப்பதை உறுதி செய்வதே அதன் உத்தி " என்றும் அவர் கூறுகிறார்.
பிரான்சில் உள்ள சயின்சஸ் போ-வின், சர்வதேச ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியரான நிக்கோல் கிரஜெவ்ஸ்கியும் இக்கருத்தை ஒப்புக்கொள்கிறார்.
இரானின் இந்த உத்தியை அவர் "சோர்வூட்டும் போர்" என்று விவரிக்கிறார்.
இது எதிரி நாட்டின் வளங்களை தீர்ந்துபோகச் செய்து, அவர்களின் சண்டையிடும் திறன் பலவீனமடையும் வரை தொடர்ச்சியான இழப்புகளை ஏற்படுத்தி அவர்களை சோர்வடையச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ராணுவ அணுகுமுறையாகும்.
இதில் ஒரு உளவியல் ரீதியான பரிமாணமும் உள்ளது.
"கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரின் போது, இரான் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதலை திருப்பியது. மக்களிடையே உளவியல் ரீதியான பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவது இதன் நோக்கம்'' என்கிறார் கிரஜெவ்ஸ்கி

பட மூலாதாரம், EPA/Shutterstock
ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் இரானின் பாதுகாப்பில் முதுகெலும்பாக அமைகின்றன என்று பரவலாக நம்பப்படுகிறது.
இஸ்ரேல் உடனான 12 நாள் போரின் போது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை இருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் "நிலத்தடி சேமிப்பு மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் மறு உற்பத்தி முயற்சிகள் காரணமாக துல்லியமான எண்ணிக்கையை அறிவதில் நிச்சயமற்ற தன்மை உள்ளது" என்று கிரஜெவ்ஸ்கி கூறுகிறார்.
பிப்ரவரி 2026-ல் இரான் சுமார் 2,500 ஏவுகணைகளைக் கொண்டிருந்ததாக இஸ்ரேல் மதிப்பிடுகிறது. இவை குறுகிய (1,000 கிமீ வரை) மற்றும் நடுத்தர (1,000-3,000 கிமீ) தூரம் வரை பாயும் ஏவுகணைகள் ஆகும்.
சுமார் 2,000 கிமீ தூரம் பாயும் திறன் கொண்ட செஜ்ஜில் ஏவுகணை மற்றும் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையான இரானில் ஃபத்தாஹ் என அழைக்கப்படும் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக இரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்

பட மூலாதாரம், Getty Images
'ஏவுகணை நகரங்கள்'
மேலும், இரானிய அதிகாரிகளும் இரானிய ஊடகங்களும் "ஏவுகணை நகரங்கள்" என்று அழைக்கப்படும் நிலத்தடி ஏவுகணை வசதிகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும் அவற்றின் அளவு மற்றும் இருப்பு பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால், இந்த போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28 முதல் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்கள் 86% குறைந்துள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி ஜெனரல் டான் கெய்ன் கூறினார்.
மேலும் மார்ச் 4, செவ்வாய்க்கிழமை அன்று இது மேலும் 23% குறைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவிக்கிறது.
இருப்பினும், "இஸ்ரேலிய உள்கட்டமைப்பு, அமெரிக்க பிராந்திய தளங்கள் மற்றும் அதன் வளைகுடா கூட்டாளிகளைக் குறிவைப்பதற்கும், அதே நேரத்தில் ஹார்முஸ் நீரிணை' வழியாக செல்லும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை அச்சுறுத்துவதற்கும்" இரானிடம் குறிப்பிடத்தக்கத் தாக்குதல் திறன் இன்னும் உள்ளது என்று ஹெல்லியர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் சிறிய இடையூறு கூட கடுமையான உலகளாவிய பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்," என்று குறிப்பிடுகிறார்.
உலகின் 20% எண்ணெய் இந்த குறுகிய நீரிணை வழியாகச் செல்கிறது. மேலும் இதனை கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் தாக்கப்படும் என இரான் கூறுகிறது

பட மூலாதாரம், Getty Images
நேரடி சேதத்தைத் தாண்டிய உத்தி
இரான் மேம்பட்ட ஏவுகணைகள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டாலும், அதன் டிரோன் திறன் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக கிரஜெவ்ஸ்கி கூறுகிறார்.
போருக்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான 'ஷாஹெத்' டிரோன்களை இரான் தயாரித்ததாகக் கருதப்படுகிறது.
இந்த வடிவமைப்பு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, மேலும் அமெரிக்கா கூட இந்தத் தொழில்நுட்பத்தின் சில அம்சங்களைப் நகலெடுத்துள்ளது.
இவை நேரடி சேதத்தைத் தாண்டி உத்தி நோக்கத்தையும் கொண்டுள்ளன.
அதாவது, எதிரிகளை விலையுயர்ந்த இடைமறிப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவதன் மூலம் "காலப்போக்கில் வான் பாதுகாப்பு அமைப்புகளை சிதைத்து பலவீனப்படுத்துகின்றன".
"இதன் ஒரு பகுதி எதிரியின் இடைமறிப்புத் திறனை சோர்வடையச் செய்வதை உள்ளடக்கியது" என்று கிரஜெவ்ஸ்கி கூறுகிறார்.
இருப்பினும், போர் தொடங்கிய முதல் நாளிலிருந்து இரானின் டிரோன் ஏவுதலும் 73% குறைந்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
''அமெரிக்காவும் இஸ்ரேலும் 2,000-க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. அதே நேரத்தில் இரான் 571 ஏவுகணைகளையும் 1,391 டிரோன்களையும் ஏவியுள்ளது, அவற்றில் பல இடைமறிக்கப்பட்டுள்ளன'' என்று டெல் அவிவை தளமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் கூறுகிறது.
போர் தொடர்வதால், இந்த வேகத்தில் சண்டையைத் தொடர்வது இரு தரப்பிற்கும் கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
எவ்வளவு காலம் நீடிக்கும்?
மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்றைக் கொண்டுள்ள நாடுகளுள் இரானும் ஒன்றாகும்.
இரான்–இராக் போர் தொடங்கிய காலத்திலிருந்தே போரைத் தாங்கும் திறன் இரானுக்கு உருவாகியுள்ளது.
இரானுடைய உத்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது, அதன் உள்நாட்டு ஒற்றுமையைப் பொறுத்தே அமையக்கூடும்.
"பாதுகாப்பு மற்றும் அரசியல் உயர்மட்டத்தினர் எவ்வளவு தூரம் ஒற்றுமையாக இருக்கிறார்கள் அல்லது அவர்களுக்குள் பிளவுகள் ஏற்படுகிறதா என்பதைப் பொறுத்தே இது அமையும்" என்று கூறும் கிரஜெவ்ஸ்கி, "பிளவுகள் ஏற்பட்டால் அது ராணுவ உத்தியில் அதிக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்"என்று விளக்குகிறார்.
மேலும், "ஏவுகணை இயக்குபவர்கள் அதிக மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருப்பது போல் தெரிகிறது, இது தவறான இலக்குகள் மீதான தற்செயலான தாக்குதல் அல்லது துல்லியமற்ற தன்மைக்கு காரணமாகிறது. பல செயல்பாடுகள் மிகவும் ஒழுங்கற்ற முறையில் உள்ளன மற்றும் அங்கு ஒருவித சோர்வு நிலை காணப்படுகிறது"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
'அடுத்தகட்ட நகர்வு'
இரானின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், அண்டை நாடுகளுக்கு நிலைமைகளை "தாங்க முடியாததாக" மாற்றுவதாகும்.
இதன் மூலம் அந்த நாடுகள் "அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கோ அல்லது போரை முடிப்பதற்கோ அமெரிக்காவை நகர்த்த முயற்சி செய்யலாம்" என்று கிரஜெவ்ஸ்கி கூறுகிறார்.
மேலும் , "இரானின் தற்போதைய திட்டம் வெற்றி பெறுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இப்போது எடுத்திருக்கும் ஆபத்தான முயற்சி இதுதான்" என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், இந்த ஆபத்தான முயற்சி எளிதில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
வளைகுடா நாடுகள் "ஆரம்பத்தில் இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திருந்தாலும், இரானின் பதிலடித் தாக்குதல்களால் இப்போது தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர்கள் முடிவு செய்யலாம். எனவே, இரானிடமிருந்து வரும் உடனடி அச்சுறுத்தலை நிறுத்த அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதே சிறந்தது என்று அவர்கள் கருதலாம்" என ஹெல்லியர் கூறுகிறார்.
மேலும், "வளைகுடா நாடுகள் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் நேரம் கடந்துக்கொண்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு தேர்தல் 2026 - உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












