இஸ்ரேலை விட சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது இரான் அதிக ஏவுகணைகளை ஏவியது ஏன்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், அப்துல் ரஹ்மான் அபு தாலிப்
- பதவி, பிபிசி அரபி மொழி சேவை
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பிபிசி அரபு சேவை ஆய்வின்படி, கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக நடந்த 12 நாள் போரை விட, தற்போது நடந்து வரும் போரின் போது இரான் வளைகுடா பிராந்தியத்தை நோக்கி அதிக ஏவுகணைகளை ஏவியுள்ளது என தெரிய வருகிறது.
சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது வீசப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியுள்ளது.
ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் குறித்த எண்ணிக்கையை ஓமன் வெளியிடவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியுள்ளன.
இரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் வளைகுடா நாடுகள் மீதான இந்தத் தாக்குதல்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அந்த நாடுகளின் நிலப்பகுதி இரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படாவிட்டால், இரானும் அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.
பிபிசியின் உலக விவகாரங்களுக்கான ஆசிரியர் ஜான் சிம்ப்சன் கூறுகையில், பெஸெஷ்கியன் அமைதிக்கான செய்தியை அளித்திருந்தாலும், அவருடைய வார்த்தைகளை இரானிய தலைமையின் நிலைப்பாடாகக் கருத முடியுமா என்பதுதான் கேள்வி எனத் தெரிவித்துள்ளார்.
இரானின் பாதுகாப்புத் திறன்களில் பாலிஸ்டிக், குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன. இரானிடம் டிரோன்களும் உள்ளன. ஆனால் அது தனது உத்தியை இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு மாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
இந்த ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன?
இஸ்ரேலுக்கு எதிராக முன்பு நடந்த போர்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது, இரான் தனது ஆயுதங்களை எந்த அளவிற்கு நம்பியிருக்க முடியும்?
இரான் ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன?

பட மூலாதாரம், Wisam Hashlamoun/Anadolu via Getty Images
இரான் குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. ஜனநாயக நாடுகளின் பாதுகாப்புக்கான அறக்கட்டளைப் படி, இரானின் குறுகிய தூர ஏவுகணைகள் 300 முதல் 1,000 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.
இந்த ஏவுகணைகள் வளைகுடா நாடுகள் உட்பட பல அண்டை நாடுகளை தாக்க வல்லவை.
நடுத்தர தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை பாய்ந்து இஸ்ரேலை சென்றடையக் கூடியவை.
இரான் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்துள்ளது.
- ஷஹாப் 1: 300 கிலோமீட்டர்
- ஃபதே 110: 300-500 கிலோமீட்டர்
- ஷஹாப் 2: 500 கிலோமீட்டர்
- சுல்ஃபிகார்: 700 கிலோமீட்டர்
- கியாம் 1: 750 கிலோமீட்டர்
- ஷஹாப் 3: 2000 கிலோமீட்டர்
ஆதாரம்: பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம்
இரானின் மிக முக்கியமான ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும், இவை அதிக உயரத்தை எட்டக்கூடியவை மற்றும் அங்கிருந்து ஒரு வில் போன்ற பாதையில் இலக்குகளை நோக்கி செல்லக்கூடியவை.
ஜனநாயக பாதுகாப்பு அறக்கட்டளையின்படி, இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாதிப்பை ஏற்படுத்துவதற்கான மிக சக்தி வாய்ந்த ஆயுதமாகவும், விமானப் படைக்கு மாற்றாகவும் கருதுகிறது.
தடைகள் காரணமாக இரானால் வழக்கமான ஆயுதச் சந்தைகளை அணுக முடிவதில்லை, இதனால் அதன் விமானப் படை பலவீனமான நிலையில் உள்ளது.
குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறக்கின்றன. அவை தங்கள் இலக்குகளை அடைய ஜெட் அல்லது புரொப்பல்லர் உதவியைப் பயன்படுத்துகின்றன.
இரானிய ஏவுகணைகள் பயன்பாடு உத்தி எவ்வாறு மாறியது?

பட மூலாதாரம், Reuters
இரான் தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் என இரு தரப்புகள் மீதும் தனது ஏவுகணைகளை வீசி வருகிறது. இது முந்தைய போரிலிருந்து மாறுபட்ட ஒரு அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கத்தாரின் அல்-உதெய்த் தளத்தை மட்டுமே இரான் தாக்கியிருந்தது.
அமெரிக்க கொள்கை ஆராய்ச்சி மையமான அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் கீழ் இயங்கும் 'கிரிட்டிக்கல் த்ரெட்ஸ் ப்ராஜெக்ட்' தகவல்படி, போரின் முதல் நான்கு நாட்களில் இரான் சுமார் 36 முறை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
அதிகபட்சமாக முதல் நாளில் 20 முறை ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் ஒவ்வொரு முறையும் சராசரியாக இரண்டு முதல் மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்தப் போக்கு இரண்டாம் நாளில் தலைகீழாக மாறியது.
தினசரி ஏவுகணை வீச்சுகளின் எண்ணிக்கை இரண்டாம் நாளில் நான்காகவும், மூன்று மற்றும் நான்காம் நாட்களில் ஆறாகவும் குறைந்தது.
அதே நேரத்தில், ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளின் சராசரி எண்ணிக்கை இரண்டாம் நாளில் 9 முதல் 30 வரை அதிகரித்தது.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவன , போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 4 வரை இரான் 128 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, வியாழக்கிழமை காலை வரை நடந்த இந்தத் தாக்குதல்களில் 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் வீரர்கள் யாரும் காயமடையவில்லை.
இரான் தான் ஏவிய ஏவுகணைகளின் துல்லியமான எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், புரட்சிகர காவல் படையின் (பஸ்தரன்-இ-இன்கிலாப்) கூற்றுப்படி, போரின் ஐந்தாம் நாளான மார்ச் 4 மதியம் வரை, வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது 17 முறை ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய மதிப்பீடுகளின்படி, தற்போது நடந்து வரும் போர் மற்றும் முந்தைய போர்களின் போது இரான் தனது ஏவுகணை ஏவுதளங்களில் சுமார் பாதியை இழந்துவிட்டது.
முக்கியமான அச்சுறுத்தல்கள் திட்ட (Critical Threats Project) உதவி இயக்குநர் நிக்கோலஸ் கார்ல் கருத்துப்படி, இது ஏவுகணை அலகுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பலவீனப்படுத்தியுள்ளதுடன், அவற்றை இடைமறிப்பதையும் எளிதாக்கியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவுகணைகளை ஏவும் குழுக்களை அவை ஏவப்படும் முன்போ அல்லது ஏவும் போதோ குறிவைப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இன்னும் எத்தனை ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது என்றாலும், அவை அதிகமாக இல்லை என்று கூறிய கார்ல், "இது இரான் ஒரே நேரத்தில் வீசக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறது"என்பதை குறிப்பிட்டார்.
இருப்பினும், அவரது கருத்துப்படி, இது இஸ்ரேலுக்கு இரானிய ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்காது. அதே சமயம், இந்தத் தாக்குதல்களைத் திறம்பட ஒருங்கிணைப்பது இரானுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
வளைகுடா நாடுகள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல்

பட மூலாதாரம், Fadel Senna/AFP via Getty Images
இரான் "வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்கள்" என்று தான் கருதும் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சகங்களின் தரவுகளின் அடிப்படையில், நான்கு நாட்களில் இரான் வளைகுடா நாடுகள் மீது 551 ஏவுகணைகளை வீசியுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை முந்தைய போரை விட அதிகமாகும்; அப்போது 12 நாட்களில் இஸ்ரேல் மீது இரான் சுமார் 500 ஏவுகணைகளை ஏவியிருந்தது.
இந்த நாடுகள் இரானிய தாக்குதல்களைத் தங்களது "இறையாண்மை மீதான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்" என்று கண்டித்துள்ளன, சிவிலியன் இலக்குகளும் குறிவைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஓமன் கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இராக் மற்றும் சிரியாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகள் இதுவரை இரான் மீது எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜ்ஜீய அழுத்தங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
நிக்கோலஸ் கார்ல் கூற்றுப்படி, வளைகுடா நாடுகளைக் குறிவைக்கும் முடிவு, முந்தைய மோதல்களில் பயன்படுத்த பொருத்தமற்றதாக இருந்த ஆயுதங்களைப் பயன்படுத்த இரானுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், "இஸ்ரேலை சென்றடையக் கூடிய ஆயுதங்களை மட்டுமே இரான் பயன்படுத்தி வந்தது. இப்போது அது குறுகிய தூர ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும், அதாவது கடந்த ஆண்டு பயனின்றி இருந்த அனைத்து ஏவுதளங்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன" என்று அவர் கூறுகிறார்.
இரான் தொடர்ந்து 'ஷாஹெட்' டிரோன்களையும் பயன்படுத்தி வருகிறது. அதாவது, அது இன்னும் பல செயல்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது என்பது தான் இதன் பொருள்.
போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 86 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த வீழ்ச்சி 23 சதவீதம் என்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
டிரோன்களை அதிகமாக நம்பியிருக்கும் இரான்
பிபிசி பகுப்பாய்வின்படி, வளைகுடா நாடுகளின் மீதான இரானின் தாக்குதல்களில் ஏவுகணைகளை விட டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மார்ச் 4-ஆம் தேதி பிற்பகல் வரை, வளைகுடா நாடுகள் மீது 1,493 டிரோன்களும் 551 ஏவுகணைகளும் வீசப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 12 நாள் போரின் போது இஸ்ரேல் மீது இரான் செலுத்திய 1,100 ட்ரோன்களை விட அதிகமாகும்.
கார்ல் கருத்துப்படி, வளைகுடா நாடுகளை பின்வாங்கச் செய்வதன் மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிப்பதே இரானின் உத்தியாக இருக்கலாம்.
அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் கூற்றுப்படி, போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானிய டிரோன் தாக்குதல்கள் 73 சதவீதம் குறைந்துள்ளன. தொடர்ந்து உற்பத்தியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இரான் தனது கையிருப்பை பாதுகாக்க முயற்சிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இரான் தொடர்ந்து எவ்வளவு நாள் ஏவுகணைத் தாக்குதலை தொடர முடியும்?
போருக்கு முன்பு இரான் வசம் சுமார் 2,500 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாக இஸ்ரேல் மதிப்பிடுகிறது. இரான் மாதத்திற்கு சுமார் 100 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகிறார். இந்த மதிப்பீடுகளைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியாது.
கார்ல் கருத்துப்படி, இரானின் கையிருப்பு ஒரு கட்டத்தில் ஆபத்தான நிலைக்குக் குறையத் தொடங்கும், ஆனால் இது எப்போது நடக்கும் என்று சொல்வது கடினம்.
இரான் தற்போதைய உத்தியைத் தொடரும், அதாவது இப்பிராந்தியத்தில் பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் கருதுகிறார்.
இதனைக் குறித்து விளக்கிய அவர், "தங்கள் ஏவுகணைகளில் பல எதிரிகளின் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்படும் என்பதை இரானியர்கள் அறிவார்கள். ஆனால் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் தங்கள் எதிரிகளின் இடைமறிப்பு ஏவுகணை கையிருப்பை குறைக்க அவர்கள் விரும்புகிறார்கள்" என்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிடம் "வரம்பற்ற ஆயுதங்கள்" இருப்பதாகக் கூறுகிறார். அதே நேரத்தில் இரானின் பாதுகாப்பு அமைச்சகம் "அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் போராடும்" திறன் தங்களுக்கு இருப்பதாகக் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதல்கள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழி தாக்குதலை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா நிலம் மற்றும் கடல் வழியிலிருந்தும் ஏவுகணைகளை ஏவி வருகிறது.
அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் கூற்றுப்படி, போரின் முதல் நான்கு நாட்களில், அமெரிக்கா 2,000 தாக்குதல்களை நடத்தியதுடன் 2,000-க்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மார்ச் 4 வரை 600 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த காலகட்டத்தில், இஸ்ரேலிய விமானப்படை மொத்தம் 5,000 குண்டுகளை வீசியுள்ளது.
இரானிய செம்பிறை அமைப்பின் (ஹிலால்-இ அஹ்மர்) தகவல்படி, இந்தத் தாக்குதல்களில் 175 குழந்தைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட 1,045 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் போரின் முதல் நாளில் மினாப்பில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்த எண்ணிக்கையில் புரட்சிகர பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












