தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
"கோச் சார், உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது. உங்களது அந்தத் தீவிரமான முகபாவனையும் புன்னகையும் ஒரு 'கில்லர் காம்பினேஷன்'. மிகச் சிறப்பு. நண்பர்களே, கொண்டாடுங்கள்"
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரைப் பற்றி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 256 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்தது. ஆனால் நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட்டில் கம்பீர் மற்றும் தோனி இடையிலான உறவு எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வந்தது.
கம்பீர் பலமுறை தோனியைப் பாராட்டியிருந்தாலும், சில நேரங்களில் தோனிக்கு எதிரானதாகக் கருதப்படும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அணியின் வெற்றிக்கான பெருமை யாருக்குச் சேர வேண்டும் என்ற விஷயத்தில் அவர் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் கம்பீர் ஓர் அங்கமாக இருந்தார். தோனி அந்த அணியின் கேப்டனாக இருந்து, இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 'வின்னிங் சிக்ஸர்' அடித்து வெற்றியைத் தேடித் தந்தார். அந்தப் போட்டியில் கம்பீர் 97 ரன்கள் குவித்திருந்தார்.

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images
வெற்றிக்கு பின் கூறியது என்ன?
"இந்தியாவில் ஹீரோ-கல்ச்சர் அதிகம் உள்ளது. எந்தவொரு வெற்றியின் பெருமையும் ஒரு வீரருக்கு மட்டுமே வழங்கப்படக்கூடாது. 2011 உலகக்கோப்பை வெற்றி என்பது ஒட்டுமொத்த அணியின் வெற்றி," என்று கம்பீர் பலமுறை கூறியுள்ளார்.
தனிநபர் சாதனைகளை விட அணி செயல்பாடுகளுக்கே கம்பீர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்ற ரீதியில் இக்கருத்து பார்க்கப்பட்டது.
நேற்றைய வெற்றிக்குப் பிறகு கௌதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், "இது கடவுளின் திட்டம் மட்டுமல்ல, 140 கோடி மக்களின் திட்டம். ஒவ்வொரு வீரரும் உலக சாம்பியன் தான்" என்று பதிவிட்டிருந்தார்.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், "இந்திய அணியைப் பொறுத்தவரை எனது தத்துவம் மிகவும் எளிமையானது - தனிநபர் இலக்குகள் (Milestones) முக்கியமல்ல, கோப்பைதான் முக்கியம்.
இந்திய அணியில் நீண்ட காலமாக தனிநபர் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். நான் இருக்கும் வரை தனிநபர் சாதனைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க முயற்சிப்பேன்," என்றார்.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு கம்பீரின் இந்த சிந்தனையே காரணமாக நிபுணர்கள் கருதுகின்றனர். வீரர்களுக்கு நம்பிக்கை அளித்தது, தோல்விகளுக்கு மத்தியிலும் திறமையான வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தது மற்றும் அணியின் வியூகத்தில் நிலையான தன்மையைப் பேணியது ஆகியவற்றுக்காக நிபுணர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.
'போராடி அணியில் சேர்த்தார்'

பட மூலாதாரம், Punit PARANJPE/AFP via Getty Images
முன்பு விமர்சிக்கப்பட்ட கம்பீரின் வியூகங்கள் இப்போது 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்று புகழப்படுகின்றன.
ஆல்-ரவுண்டர்கள் மற்றும் பார்ட்-டைம் பந்துவீச்சாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பது, இடது-வலது கை பேட்டிங் காம்பினேஷனுக்காக அவர் செய்த மாற்றங்கள் ஆகியவை முன்பு விமர்சனத்துக்குள்ளாகின. ஆனால் அதே வியூகங்கள் இப்போது வெற்றிக்கு வழிவகுத்துள்ளன.
ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல் போன்ற வீரர்கள் முக்கிய நேரங்களில் பங்களித்தனர். அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் அணியில் நிறைந்திருந்தனர். சஞ்சு சாம்சன் மீது கம்பீர் வைத்த நம்பிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், "அவரது கொள்கை ஜெயித்துவிட்டது, அவரது சிஸ்டம் ஜெயித்துவிட்டது. தோல்விகளுக்குப் பிறகும் அவர் யாரையும் நீக்கவில்லை. தகுதியின் அடிப்படையில் ரிஸ்க் எடுத்தார். சஞ்சு சாம்சன் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அபிஷேக் சர்மா இன்னும் முதிர்ச்சியற்ற சிறுவன்தான், ஆனால் அவரையும் கம்பீர் கைவிடவில்லை," என்றார்.
அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு அக்தர் கூறுகையில், "சஞ்சு சாம்சனை கௌதம் கம்பீர் போராடித்தான் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தார்," என்றார்.
இந்தத் தொடரின் தொடக்கத்தில் தொடர்ந்து மூன்று முறை பூஜ்ஜிய ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், அபிஷேக் சர்மாவின் பழைய சாதனைகளை நம்பி கம்பீர் அவருக்கு வாய்ப்பளித்தார். அபிஷேக் இறுதிப்போட்டியில் 21 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார்.
அபிஷேக் சர்மா கூறுகையில், "என் மீதான நம்பிக்கை எனக்கே குறையத் தொடங்கியபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என் மீது நம்பிக்கை வைத்தனர்," என்றார்.
விமர்சனங்களும் சவால்களும்

பட மூலாதாரம், Santanu Banik/Speed Media/Icon Sportswire via Getty Images
இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீரின் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. 2024 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு ராகுல் டிராவிடமிருந்து அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
டிராவிட் உருவாக்கிய அந்த வெற்றிகரமான பாதையைத் தொடர வேண்டிய அழுத்தம் அவருக்கு இருந்தது.
இருப்பினும், கம்பீரின் ஆரம்பகால சாதனைகள் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.
2024-ல் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 எனத் தோற்றது.
அதே ஆண்டில் பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 எனத் தோல்வி.
2024 ஆம் ஆண்டில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா இழந்தது, மேலும் டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு சற்று முன்பு, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.

2025 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் இழந்தது.
ஆனால் டி-20 போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன் சிறப்பாக இருந்தது, மேலும் சில இருதரப்பு தொடர்களை வென்றதோடு, இந்தியா ஆசியக் கோப்பையையும் வென்றது.
இந்தச் சராசரி சாதனைகளால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கம்பீரின் அணுகுமுறையை விமர்சித்தனர். 2026-க்குப் பிறகு அவர் பயிற்சியாளராக நீடிப்பது கடினம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் போன்றோர் கருதினர்.
ஆனால் தற்போதைய வெற்றி அனைத்து விமர்சனங்களையும் மறக்கச் செய்துள்ளது.
"தோல்வி என்ற பயத்தை நாம் கைவிட வேண்டும். துணிச்சல்தான் நமது மிகப்பெரிய அடையாளம்," என போட்டிக்கு பிறகு கூறினார் கம்பீர்.
தமிழ்நாடு தேர்தல் 2026 - உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












