செளதியில் இந்தியர் பலி - பஹ்ரைன், அபுதாபி, கத்தாரில் என்ன நிலவரம்?

மார்ச் 1 அன்று கத்தாரில் நடந்த தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்ச் 1 அன்று கத்தாரில் நடந்த தாக்குதல்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஒரு தாக்குதலில் மிக அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக பஹ்ரைன் உள்ளது.

பஹ்ரைன் மீது நடத்தப்பட்ட ஒரு டிரோன் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 32 பேர் காயமடைந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 2 மாத குழந்தையும் அடங்கும்.

வளைகுடா முழுவதும் இதுவரை குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினர் அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகை

கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவும் புதிய தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ளன.

ஒரு முக்கிய எண்ணெய் வயலை நோக்கி இரண்டு அலைகளாக வந்த டிரோன்களை இடைமறித்து அழித்ததாக செளதி தெரிவித்துள்ளது.

முன்னதாக நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் ஒன்று செளதியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கியது. இதனைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தங்கள் கட்டமைப்புகள் மீதான இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்தால், பிராந்திய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தக்கூடும் என்று இரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம், இரான் நாட்டிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு காட்சிப்படுத்தியது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த வாரம், இரான் நாட்டிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு காட்சிப்படுத்தியது

12 ஏவுகணைகள் அழிப்பு - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

இன்று (மார்ச் 9) 15 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்ததாகவும், அதில் 12-ஐ அழித்ததாகவும், மூன்று கடலில் விழுந்ததாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

மேலும் 18 டிரோன்களைக் கண்டறிந்ததாகவும், அதில் 17-ஐ இடைமறித்ததாகவும், ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லைக்குள் விழுந்து நொறுங்கியதாகவும் அந்த அமைச்சகம் கூறுகிறது.

இரான் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 253 பாலிஸ்டிக் ஏவுகணைகள், எட்டு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,440 டிரோன்களைக் கண்டறிந்துள்ளதாக அமைச்சகம் கூறுகிறது.

இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 81 யுஏவி-கள் நாட்டின் மீது விழுந்து தாக்கின, மற்றவை இடைமறிக்கப்பட்டன அல்லது கடலில் விழுந்தன என்று அது கூறுகிறது.

இந்தத் தாக்குதல்களால் இதுவரை நான்கு இறப்புகளும் 117 பேருக்குக் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறுகிறது.

பஹ்ரைனில் தாக்கப்பட்ட கட்டடம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹ்ரைனில் தாக்கப்பட்ட கட்டடம்

இரண்டு இடங்களில் சிதறல்கள் விழுந்ததில் ஒருவர் லேசான காயமடைந்ததாகவும், மற்றொருவர் மிதமான காயமடைந்ததாகவும் அபுதாபி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வான் பாதுகாப்பு அமைப்புகள் வரவிருந்த அச்சுறுத்தல்களை இடைமறித்த பிறகு இது நடந்ததாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரான் தாக்குதலில் செளதியில் இந்தியர் பலி - பஹ்ரைன், அபுதாபி, கத்தாரில் என நிலவரம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகை

செளதி அரேபியாவில் ஏவுகணை தாக்கியதில் இருவர் பலி

செளதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை ஒன்று தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக செளதி சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பன்னிரண்டு பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த இருவரும் - ஒருவர் இந்தியர் மற்றும் ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர், ஒரு பராமரிப்பு மற்றும் துப்புரவு நிறுவனத்திற்குச் சொந்தமான வளாகத்திற்குள் இருந்ததாக சிவில் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பஹ்ரைன் எரிசக்தி நிறுவனத்தில் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட தீ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பஹ்ரைன் எரிசக்தி நிறுவனத்தில் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட தீ

17 பாலிஸ்டிக் ஏவுகணை ஆறு டிரோன்களை கத்தார் இடைமறித்தது

கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரான் நாட்டிலிருந்து 17 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆறு டிரோன்கள் மூலம் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

தனது ஆயுதப் படைகள் அனைத்துத் தாக்குதல்களையும் வெற்றிகரமாக இடைமறித்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அது கூறுகிறது.

மார்ச் 1 அன்று கத்தாரில் நடந்த தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்ச் 1 அன்று கத்தாரில் நடந்த தாக்குதல்

பஹ்ரைன் எரிசக்தி நிறுவனம் 'ஃபோர்ஸ் மெஜூர்' அறிவிப்பு

மத்திய கிழக்கில் நடக்கும் போர் மற்றும் அதன் சுத்திகரிப்பு நிலையம் மீதான சமீபத்திய தாக்குதலால் தனது செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதை அடுத்து, தான் 'ஃபோர்ஸ் மெஜூர்' (தவிர்க்க முடியாத சூழல்) அறிவித்துள்ளதாக பஹ்ரைனின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான பாப்கோ கூறுகிறது.

ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒர் அசாதாரண நிகழ்வு நடக்கும்போது, ஒப்பந்தக் கடமைகளிலிருந்து விலக்கு பெற 'ஃபோர்ஸ் மெஜூர்' அறிவிப்பு அனுமதிக்கிறது.

தமிழ்நாடு தேர்தல் 2026 - உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்

தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.

உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?

உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு