இறந்தவர்களுடன் 'பேச' உதவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

டெத் பாட், ஏஐ, மரணம்

பட மூலாதாரம், Dr Jenny Kidd

படக்குறிப்பு,
    • எழுதியவர், ஏமி மாக்ரில்
    • பதவி, பிபிசி வேல்ஸ்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உங்கள் அன்புக்குரியவர் இறந்துவிட்டால், அவர்களுடன் தொடர்ந்து பேச விரும்புவீர்களா?

நினைவுகள் அல்லது சேமித்த செய்திகள் மூலம் அல்ல, மாறாக செயற்கை நுண்ணறிவு மூலம் - அவர்களின் உரைகள், மின்னஞ்சல்கள் மற்றும் குரல் குறிப்புகளைப் பயன்படுத்தி, அவர்களின் தொனியிலும் பாணியிலும் பதிலளிக்கும் ஒரு சாட்பாட்.

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் "டிஜிட்டல் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை" துறையின் ஒரு பகுதியாக இத்தகைய சேவைகளை வழங்குகின்றன, இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடையது, சிலர் தங்கள் துக்கத்தைச் சமாளிக்க இதை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர்.

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜென்னி கிட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பத்திரிகை இதழான மெமரி, மைண்ட் அண்ட் மீடியாவில் வெளியிடப்பட்ட டெத்பாட்கள் என்று அழைக்கப்படுபவை பற்றிய ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். அதன் முடிவுகளை "கவர்ச்சிகரமான மற்றும் தொந்தரவான" என்று அவர் விவரித்தார்.

இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் புதியவை அல்ல.

மதங்கள் முதல் ஆன்மிக நடைமுறைகள் வரை, இதற்கான முயற்சிகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன.

ஆனால் தொழில்நுட்பம் முன்னேறும்போது, ​​செயற்கை நுண்ணறிவு அவற்றை மேலும் நம்பத்தகுந்ததாகவும், மிகவும் அளவிடக் கூடியதாகவும் மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

டெத் பாட், ஏஐ, மரணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2024 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் விளாஹோஸ் தனது தந்தை புற்றுநோயால் இறந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்து கொண்ட பிறகு, தந்தையின் குரலை பதிவு செய்து, ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை எவ்வாறு உருவாக்கினார் என்பதை பிபிசியிடம் கூறினார்.

தனது தந்தையின் நினைவை உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எவ்வளவு அற்புதமானது என்பதை அவர் விவரித்தார். அது தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட வலியைப் போக்கவில்லை என்றாலும், "நான் பயன்படுத்தக் கூடிய இந்த அற்புதமான உரையாடும் தொகுப்பு என்னிடம் உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

'டெத்பாட்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதை காணவில்லை, மாறாக மக்களிடமிருந்து அதிக ஆர்வத்தைக் காண்கிறோம்' என்று பணியிட துக்க ஆதரவு குழு (Workplace Bereavement support group) கூறியது.

"இந்த டெத்பாட்களும் ஏஐ கருவிகளும் அவற்றுக்கு வழங்கப்படும் தகவல்களைப் பொறுத்து சிறந்தவை" என்று நிறுவனர் ஜாக்குலின் கன் கூறினார்.

"அவை துக்கம் போல் நாளுக்கு நாள் அதிகரிக்கவோ அல்லது அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதோ ​​இல்லை. சிலருக்கு அவை ஒரு படிக்கல்லாக இருக்கலாம். துக்கம் என்பது மரணத்திற்கு ஒரு ஆழமான தனிப்பட்ட மனித எதிர்வினை, அதற்கு நேரம், புரிதல் மற்றும் மனித தொடர்பு தேவை." என்கிறார் ஜாக்குலின்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஈவா நீட்டோ மெக்காவோய் மற்றும் கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெதன் ஜோன்ஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய கிட், இந்த தொழில்நுட்பங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்தார்.

இறந்தவர்களின் குரல்கள், பேச்சு முறைகள் மற்றும் ஆளுமைகளை அவர்களின் டிஜிட்டல் தடயங்களைப் பயன்படுத்தி பின்பற்ற ஏஐ அமைப்புகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் ஆராய்ந்தனர்.

அவை பெரும்பாலும் ஆறுதல் மற்றும் இணைப்பின் ஆதாரங்களாக சந்தைப்படுத்தப்பட்டாலும், நினைவுகள், அடையாளம் மற்றும் உறவுகள் பற்றிய எளிமையான புரிதலை ஏஐ அமைப்புகள் நம்பியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டெத் பாட், ஏஐ, மரணம்

பட மூலாதாரம், Dr Jenny Kidd

படக்குறிப்பு,

கோவிட் பேரிடர் காலத்தில், சமூக ஊடகங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அனிமேஷன் புகைப்படங்கள் திடீரென அதிகரித்த சூழலில், கிட் இந்த தலைப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

மக்கள் மூதாதையர்களின் பழைய புகைப்படங்களைப் பதிவேற்றினர், பின்னர் அவர்கள் கண் சிமிட்டுவதையும், சிரிப்பதையும், தலையை அசைப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தனர், ஏனெனில் மென்பொருள் அவர்களின் அன்புக்குரியவர்களை "புத்துயிர் பெறச் செய்தது".

"இந்த விஷயங்கள் உண்மையில் பயமுறுத்துவதாக இருந்தன, ஆனால் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன," கிட் கூறினார்.

"திடீரென்று அவை எல்லா இடங்களிலும் இருந்தன, லட்சக்கணக்கான மக்கள் அவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.இந்த வகையான செயற்கை நுண்ணறிவு மறுமலர்ச்சி திகைப்பூட்டியது" என்கிறார் அவர்.

"என்னைப் போல உணரவில்லை"

ஆய்வுக் குழு, சில டெத்பாட்களை தங்கள் மீது சோதித்துப் பார்க்க முடிவு செய்து, நான்கு வணிக தளங்களை ஆராய்ந்தது.

"அந்த வகையில் எங்களுடன் நாங்களே தொடர்புகொள்வது விசித்திரமாக இருந்தது, ஆனால் தற்போது இந்த தளங்களின் தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக பெரும்பாலும் திருப்திகரமாக இல்லை," என்று கிட் கூறினார்.

ஒரு பரிசோதனையில், கிட் தனது சொந்த குரல் தரவைப் பயன்படுத்தி ஒரு சாட்பாட்டை உருவாக்கினார்.

"இது என்னைப் போல் ஒலிக்கவில்லை, உண்மையில் அது மிகவும் ஆஸ்திரேலிய தொனியுடன் ஒலித்தது," என்று அவர் மேலும் கூறினார்.

தொழில்நுட்பம் மேம்படும் என்று கிட் நம்புகிறார், ஆனால் ஒரு பெரிய சந்தை உருவாகுமா என்பது குறித்து அவர் சந்தேகிக்கிறார்.

"மரணத்தைச் சுற்றி ஏற்கனவே நிறைய நிறுவப்பட்ட சடங்குகள் மற்றும் மரபுகள் உள்ளன," என்று அவர் கூறினார்.

"இந்த துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், தொழில்நுட்பம் இல்லை என்பது அதற்கு அதிக சந்தை இல்லை என்பதைக் குறிக்கிறது." என்கிறார் கிட்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இறந்த பிறகு தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள், அவர்களை டிஜிட்டல் முறையில் மீண்டும் உருவாக்க விரும்புவார்களா என்று கேட்டபோது, ​​ஆராய்ச்சியாளர்கள் கலவையான உணர்வுகளைக் கொண்டிருந்தனர்.

"எனது ஆரம்ப உள்ளுணர்வு என்னவென்றால், அவர்கள் அதைச் செய்ய விரும்பினால், அது ஒருவித விளையாட்டுத்தனமாக இருந்தால், அது பரவாயில்லை," என்று கிட் கூறினார்.

"ஆனால் எதிர்காலத்தில், அந்த ஆளுமை தொடர்ந்து உருவாகி வருவது அல்லது நான் ஒருபோதும் சொல்லாத விஷயங்களைச் சொல்வது, அல்லது எனக்கு ஒருபோதும் இல்லாத சார்புகள் இருப்பது போன்ற உணர்வு இருந்தால், அது மக்களின் உண்மையான என்னைப் பற்றிய நினைவுகளையும் என் மதிப்புகளையும் சிதைக்கத் தொடங்கினால், எனக்கு ஒரு பெரிய பிரச்னை இருக்கும் என்று நினைக்கிறேன்."

டாக்டர் நீட்டோ மெக்காவாய், அவர் "கவலைப்படவில்லை" என்று கூறினார்.

"நான் மிகவும் நம்பிக்கை கொண்டவர் அல்ல, மறுமை வாழ்க்கையைப் பற்றிய வலுவான எண்ணங்கள் எனக்கு இல்லை, நான் இறந்த பிறகு யார் கவலைப்படப் போகிறார்கள்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

"ஆனால் அது நிச்சயமாக தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். மேலும் எனது குடும்பத்தினர் ஒரு சேவைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேனா?... எனக்குத் தெரியாது, அது சிக்கலானது." என்கிறார் நீட்டோ.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 'சாதிய பாகுபாடு' நிலையில் மாற்றம் உள்ளதா? உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு