அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் சேருவாரா? பவன் கல்யாணை முன்வைத்து எழுந்த யூகத்தின் பின்னணி

பட மூலாதாரம், TVK
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போவதாக தமிழக அரசியல் அரங்கில் கடந்த சில நாட்களாக பேச்சுகள் வலம்வந்த நிலையில், தற்போது அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய், தே.ஜ.கூட்டணியில் இணைய வேண்டும் என அறிக்கைவிடுத்த பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?
பாஜக தலைவர்கள் கருத்தால் எழுந்த ஊகம்
கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பல ஊடகங்களில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா என்பது குறித்த யூகங்கள் வலம் வர ஆரம்பித்தன.
சனிக்கிழமை பா.ஜ.கவைச் சேர்ந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பதாக குறிப்பிட்டார்.
"விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வருவாரா போவாரா என்பது குறித்து தெளிவான முடிவு எதையும் என் அளவில் சொல்வதற்கில்லை. ஆனால் பவன் கல்யாண் இதுகுறித்து பேசி உள்ளது உண்மைதான். அவர்தான் இன்றைய சூழலைச் சொல்ல முடியுமே ஒழிய விஜய் கூட்டணிக்கு வருகிறார் வரமாட்டார் என்பதெல்லாம் சரியாகவே உறுதியாகவோ இதுவரை சொல்ல முடியவில்லை. ஆனால், காலம் மாறும் காட்சிகளும் மாறும்! வாய்ப்புகள் உள்ளன" என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், X/K.S.Radhakrishnan
இதற்குப் பிறகு, ஞாயிற்றுக் கிழமை தமிழக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "தி.மு.கவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் தனது லட்சியம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறி வருகிறார் இது உண்மையாக இருந்தால், அவர் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும். ஆட்சி, அதிகாரம், யாருக்கு எத்தனை சீட், யார் முதல்வர் என்பதை விட, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இருண்டு போய், சீர்குலைந்து கிடக்கும் தமிழகத்தை மீட்டு, தமிழக மக்களை காப்பாற்ற யார் முதல்வராக வரக்கூடாது என்பதுதான் நம் ஒவ்வொருவரின் சிந்தனையாக இருக்க வேண்டும்.
விஜய் தனித்து நின்று சக்தியை நிரூபிப்பேன் என்று கூறுவதைவிட, நடைமுறை அரசியலை புரிந்துகொண்டு ஐந்து ஆண்டு கால கொடுங்கோல் திமுக ஆட்சியின் துன்பத்தால் சோர்ந்துபோய் உள்ள தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீய சக்தி தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற தமிழக மக்களின் எண்ணத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். உங்களுக்கான தகுதியான இடத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும். தமிழ்நாட்டின் நலனுக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவது காலத்தின் கட்டாயம். எனவே, விஜய் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்" என்று அந்த அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை அடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 40 முதல் 50 இடங்கள் வழங்கப்படும் என்றும் அந்தக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும் சில ஊடகங்களிலும் சமூகவலை தளங்களிலும் பேசப்பட்டது.
பதவிநீக்கம் - பாஜக நடவடிக்கை
ஆனால், வெகு விரைவிலேயே காட்சிகள் மாறின. கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "அது ஒரு ரூமர் (வதந்தி)" என்று பதிலளித்தார். அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும் இந்தச் செய்தியை மறுத்தார். விரைவிலேயே, தே.ஜ.கூ - தவெக கூட்டணி இல்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில், விஜய் கூட்டணிக்கு வர வேண்டுமென அறிக்கை வெளியிட்ட ஏ.என்.எஸ். பிரசாத், தமிழக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்தும் சட்டமன்றத் தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ஊடகத் துறை பொறுப்பாளர் என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக திங்கட்கிழமை அறிவித்தார் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

பட மூலாதாரம், Nainar Nagenthran/Facebook
ஏ.என்.எஸ். பிரசாத் விளக்கம்
ஆனால், தன்னுடைய அறிக்கை விஜய்க்கான அழைப்பு அல்ல என்கிறார் ஏ.என்.எஸ். பிரசாத். "நான் அடிப்படையில் விஜய் ரசிகன். அவர் மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வந்ததாகச் சொல்கிறார். தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் எனத் தீவிரமாக இருப்பதாகச் சொல்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது இருக்கும் நிலையில் 175 இடங்களை வெல்லக்கூடிய நிலையில் இருக்கிறது. அவரும் இந்தக் கூட்டணியில் இணைந்தால் 234 இடங்களையும் வெல்ல முடியும்.
தி.மு.கவைப் பொறுத்தவரை பலமான கூட்டணி என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், விஜய் தனித்துப் போட்டியிடுவதுதான் தங்களுக்கு நல்லது எனக் கருதுகிறார்கள். அதன் மூலம்தான் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க முடியும் எனக் கருதுகிறார்கள். ஆகவே அதற்குப் பலியாகாமல் விஜய் முடிவெடுக்க வேண்டுமெனக் கருதினேன். அதனால்தான் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டேன். நான் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கும் இந்த அறிக்கைக்கும் தொடர்பில்லை. என்னுடைய நீக்கம் என்பது தேர்தல் நேரத்தில் நடக்கக்கூடிய ஒரு வழக்கமான நடவடிக்கைதான்" என்கிறார் ஏ.என்.எஸ். பிரசாத்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் விளக்கம்
கே.எஸ். ராதாகிருஷ்ணனிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, "பவன் கல்யாண் இதற்கு முன்பாக என்னிடம் சொன்ன தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன். கூட்டணி குறித்து அ.தி.மு.கவின் மேலிடமும் பா.ஜ.க. மேலிடமும்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று மட்டும் தெரிவித்தார்.
ஆனால், அப்படி நடக்க வேண்டுமென பா.ஜ.க. விரும்புவதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன். "அவர் தனித்து நின்று தி.மு.கவுக்கான எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை. ஒன்று தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் அல்லது ஒதுங்கியிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதே நேரத்தில் அவருக்கு மிகவும் குறைவான பங்கையே தரவும் விரும்புகிறார்கள். ஆனால், விஜய்யைப் பொறுத்தவரை, கொள்கை எதிரி என பா.ஜ.கவைச் சொல்லிவிட்ட பிறகு எப்படி கூட்டணி வைப்பது எனத் தயங்குகிறார். மேலும், இந்த விவகாரத்தில் இப்போது எந்த அளவுக்கு எடப்பாடி கே. பழனிசாமிக்கு விருப்பம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. அதனால்தான் ஏதும் முன்னேற்றமில்லை" என்கிறார் அய்யநாதன்.

பட மூலாதாரம், X/Edappadi K Palaniswami
தவெக கூறியது என்ன?
அப்படி ஒரு முயற்சி நடந்தாலும், அந்தக் கூட்டணிக்குச் செல்ல விஜய் விரும்பவில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "ஜனவரி மாதம் விஜய்யை விசாரணைக்கு அழைத்தார்கள். இப்போது மார்ச் மாதத்தில் மீண்டும் அழைக்கிறார்கள். இதெல்லாம் ஒரு நெருக்கடிதான். ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதைப் போலத் தெரிகிறது" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படி ஒரு முயற்சி நடக்கவேயில்லை என்கிறார்கள். இது குறித்து பிபிசியிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "இது முழுக்க முழுக்க வதந்தி" என்று மட்டும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












