16 இரான் 'கண்ணிவெடி' கப்பல்கள் மீது தாக்குதல் - ஹோர்முஸ் நீரிணையில் நடப்பது என்ன?

இரான் கண்ணி வெடி வைக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா வெளியிட்ட காட்சி

பட மூலாதாரம், US Central Command

படக்குறிப்பு, அமெரிக்கா வெளியிட்ட காட்சிகள்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்க மத்திய ராணுவ தலைமை (சென்ட்காம்), அமெரிக்கத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல இரான் கடற்படைக் கப்பல்களின் காட்சிகளை இரவில் வெளியிட்டது.

செவ்வாய்க்கிழமை "அழிக்கப்பட்ட" இலக்குகளில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இருந்த 16 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் அடங்கும் என்று சென்ட்காம் கூறுகிறது.

'ஆபரேஷன் எபிக் ஃபியூரி'யின் மூன்று முக்கிய நோக்கங்களில் இரான் கடற்படையை அழிப்பதும் ஒன்று என்று அமெரிக்க கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் திங்களன்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கின் முக்கிய சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்க முயற்சிக்கும் எந்தவொரு இரான் கப்பலும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.

எக்ஸ் தளத்தில் சென்ட்காம் வெளியிட்ட காட்சிகளில், பல்வேறு அளவிலான கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட பிறகு வெடிப்பதைக் காண முடிகிறது.

அமெரிக்கா தாக்கியதாகக் கூறப்படும் இரான் கப்பல்

பட மூலாதாரம், US Central Command

அமெரிக்கா தாக்கியதாக கூறப்படும் இரானிய கப்பல்

பட மூலாதாரம், US Central Command

ஹோர்முஸ் நீரிணையில் மூன்றாவது கப்பல் தாக்கப்பட்டது

UKMTO-விலிருந்து கிடைத்துள்ள இந்த வரைபடம், இடதுபுறத்தில் மஞ்சள் குறியீட்டினால் குறிக்கப்பட்டுள்ள சமீபத்திய தாக்குதலைக் காட்டுகிறது. முன்னதாகத் தெரிவிக்கப்பட்ட இரண்டு தாக்குதல்களும் இதில் குறிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், UKMTO

படக்குறிப்பு, UKMTO-விலிருந்து கிடைத்துள்ள இந்த வரைபடம் சமீபத்திய தாக்குதலைக் காட்டுகிறது.

இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணையில் மூன்றாவது சரக்குக் கப்பல் ஒன்று "அறியப்படாத ஏவுகணை" மூலம் தாக்கப்பட்டதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.

துபைக்கு வடமேற்கே 93 கிமீ (50 கடல் மைல்) தொலைவில் அந்தக் கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதில் உள்ள ஊழியர்கள் "பாதுகாப்பாகவும் நலமாகவும்" இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் தாக்கப்பட்டதாகவும், ஓமனுக்கு வடக்கே மற்றொரு கப்பலில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு புதன்கிழமை தெரிவித்திருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு