இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இரான் யாரை ஆதரித்தது? இரு நாட்டு உறவு பற்றிய ஒரு பார்வை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அர்ஜவ் பரேக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
"இந்தியாவும் இரானும் புதிய நண்பர்கள் அல்ல. நமது நட்பு வரலாற்றைப் போன்றே பழமையானது. பல நூற்றாண்டுகளாக நமது சமூகங்கள் கலை மற்றும் கட்டடக்கலை, கருத்துகள் மற்றும் மரபுகள், கலாசாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன."
பிரதமர் நரேந்திர மோதி 2016-ஆம் ஆண்டு இரான் சென்றிருந்தபோது, இந்தியாவிற்கும் இரானுக்கும் இடையிலான உறவுகளின் ஆழத்தைப் பற்றிப் பேசுகையில் இந்தக் கருத்தை வெளியிட்டார் .
நாம் கவனித்துப் பார்க்கையில், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பல முக்கியமான மைல்கற்கள் உள்ளன என்பது தெரிய வருகிறது.
மத்திய கிழக்கில் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகள், பாகிஸ்தானுடனான உறவுகள், சர்வதேச வர்த்தகம், சர்வதேச அரசியல், அமெரிக்கா-ரஷ்யா-சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கு மற்றும் இரானின் உள்நாட்டுச் சூழல் போன்றவை அனைத்தும் கடந்த ஏழு-எட்டு தசாப்தங்களில் இந்தியா மற்றும் இரான் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இரான் மீது சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் மற்றும் ஆயத்துல்லா காமனெயியின் மரணத்தைத் தொடர்ந்து, இரான் மீதான தாக்குதல்களை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய-இரான் உறவுகளை மேற்கோள் காட்டி இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து நிபுணர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
வரலாற்றின் பக்கங்களில் இரான் இந்தியாவிற்கு பகிரங்கமாக ஆதரவளித்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே வேளையில் இரு நாடுகளும் தங்களது நலன்களுக்கு முன்னுரிமை அளித்த சில தருணங்களும் உள்ளன.
கடந்த தசாப்தங்களில் இந்தியா மற்றும் இரான் இடையிலான உறவுகள் எவ்வாறு மாறியுள்ளன, எந்தெந்த சந்தர்ப்பங்களில் இரான் இந்தியாவை ஆதரித்தது மற்றும் எப்போது அது இந்தியாவுடன் நிற்கவில்லை என்பதை இந்தச் செய்தி விவரிக்கிறது.
'இந்தியாவும் இரானும் பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்கள்'

பட மூலாதாரம், ANI
இந்தியா மற்றும் இரானுக்கு இடையிலான உறவுகளுக்கான சான்றுகள் இந்தோ-ஆரிய கலாசாரத்தின் தொடக்க காலத்திலிருந்தே காணப்படுகின்றன.
மதம், கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றின் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவும் இரானும் பிணைக்கப்பட்டுள்ளன என்பது நன்கு அறியப்பட்டதே.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' நூலில் இந்தியா-இரான் உறவுகள் குறித்து எழுதுகையில், "இந்தியர்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரம் உலகின் பல மனித இனங்கள் மற்றும் கலாசாரங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மிகவும் பழமையானதும் வலிமையானதுமானது இரானியர்களுடனான உறவு" என்று குறிப்பிட்டுள்ளார்.
1946-ஆம் ஆண்டு அலகாபாத்திற்கு (இன்றைய பிரயாக் ராஜ் நகரம்) வருகை தந்த இரானிய கலாசார தூதுக்குழுவின் தலைவர் கூறுகையில், "இரான் மக்களும் இந்திய மக்களும் ஒரு பாரசீக அறிஞரின் கூற்றுப்படி, ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து சென்ற சகோதரர்களைப் போன்றவர்கள். ஒரு சகோதரர் கிழக்கிற்கும், மற்றவர் மேற்கிற்கும் சென்றனர்"என்றார்.
"எங்கள் இரு குடும்பங்களும் எங்களைப் பற்றிய அனைத்தையும் மறந்துவிட்டன. அவர்களுக்கு இடையே பொதுவானதாக ஏதேனும் எஞ்சியிருந்தால், அது சில நேரங்களில் அவர்களின் புல்லாங்குழலில் இசைக்கப்படும் பழைய ராகங்கள் மட்டுமே. அதனால்தான், எங்கள் உறவினர்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்ளவும், நாங்கள் மீண்டும் அவர்களுடன் இணையவும் எங்களது பழைய ராகங்களை வாசிப்பதற்காக மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறோம்" என்றும் தெரிவித்தார்.
நேரு காலத்தில் இந்தியா-இரான் உறவுகள்

பட மூலாதாரம், Keystone-France/Gamma-Keystone via Getty Images
1946-இல் வெளியான 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' நூலில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, "உலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் ஆசிய நாடுகளை மீண்டும் ஒருவரையொருவர் நோக்கிப் பார்க்கத் தூண்டுகின்றன. வரும் காலங்களில் இரானுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று எழுதினார்.
இந்தியாவும் இரானும் 1950, மார்ச் 15 அன்று 'நட்புறவு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளின் முறையான தொடக்கத்தைக் குறித்தது. இரு நாடுகளும் அமைதி மற்றும் நட்பின் பாதையைப் பின்பற்றும் என்று அதில் கூறப்பட்டது.
உலகம் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் என இரு துருவங்களாகப் பிரிந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.
இந்தியா அப்போது அணிசேரா கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தது.
'இந்தியாவின் மேற்கு ஆசியக் கொள்கை: இருதரப்பு உறவுகளின் எல்லைகள்' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையில் பேராசிரியர் மும்தாஜ் அகமது ஷா எழுதுகையில், "அமெரிக்கா இரான், சௌதி அரேபியா மற்றும் இதர முடியாட்சி நாடுகளின் வல்லரசு கூட்டாளியாக இருந்தது. பாகிஸ்தானுக்கும் இந்த வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அது ஆதரித்தது.
இந்தியா இரான், சௌதி அரேபியா, எகிப்து, சிரியா மற்றும் இராக்குடன் ராஜ்ஜீய கூட்டாண்மைகளை நிறுவியிருந்தது, ஆனால் மத சார்பற்ற விழுமியங்களை நம்பும் ஒரு கூட்டாளியை இப்பிராந்தியத்தில் தேடிக் கொண்டிருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"பாக்தாத் ஒப்பந்தத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு, 1956-இல் இரானின் ஷா இந்தியாவுக்குப் பயணம் செய்தார். பாகிஸ்தானுடனான இரானின் நெருங்கிய உறவுகள் இந்தியாவிற்கு எதிரானது அல்ல என்றும், இந்தியா மற்றும் இரான் இடையிலான நட்பு உறவுகளில் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் இந்தியாவிற்கு உறுதியளித்தார்"எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு, 1959 செப்டம்பரில் நேருவும் இரான் சென்றார். அங்கிருந்து இந்தியாவின் 'அணிசேராக் கொள்கையை' உலகிற்கு விளக்க முயன்றார்.
குவைத் மற்றும் இராக் போன்ற நாடுகளில் இந்தியாவின் தூதராகப் பணியாற்றிய தல்மிஸ் அகமதுவிடம் இந்திய-இரான் உறவுகள் குறித்து பிபிசி பேசியது.
தல்மிஸ் அகமது கூறுகையில், "ஷா காலத்தில், அவர் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக வர விரும்பினார் என்று சொல்லலாம். நாம் 'இரான்-ஹிந்த் ஷிப்பிங் லைன்' மற்றும் 'மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை' நிறுவினோம். இந்தியாவிற்கு பெட்ரோலியம் வழங்குவதில் இரான் ஒரு பெரிய சக்தியாக மாறியது" என்று தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இரான் யாருக்கு உதவியது?

பட மூலாதாரம், Getty Images
நேரு மற்றும் இரானின் ஷா இடையேயான சந்திப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான 'நட்புறவு ஒப்பந்தம்' இருந்தபோதிலும், பாகிஸ்தானுடனான மோதல் காரணமாக இந்தியா மற்றும் இரான் இடையிலான உறவுகளில் மாற்றம் காணப்பட்ட காலம் இதுவாகும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்களில் இரான் யாருக்கு ஆதரவளித்தது என்பது குறித்த விவரங்கள், அமெரிக்க வெளியுறவுத்துறையின் 'வரலாற்று ஆய்வாளர் அலுவலக' ஆவணங்களில் காணப்படுகின்றன.
மே 1972-இல் வெளியிடப்பட்ட ஒரு உளவுத்துறை குறிப்பு பின்வருமாறு கூறுகிறது.
"1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான ஆயுதக் கொள்முதல் முகவராக இரான் செயல்பட்டது. அந்த நேரத்தில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதில் பாகிஸ்தான் சிரமத்தை எதிர்கொண்டது.
இரான் ஒரு மேற்கு ஜெர்மன் ஆயுத விற்பனையாளரிடமிருந்து 90 F-86 போர் விமானங்கள், வான்வழி ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் சில உதிரி பாகங்களை வாங்கியது. இந்த விமானங்கள் முதலில் இரானுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. எஞ்சிய ஆயுதங்கள் நேரடியாக கராச்சிக்கு அனுப்பப்பட்டன."
"1971-இல், மேற்கு பாகிஸ்தானில் பயன்படுத்துவதற்காக 12 ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை பாகிஸ்தானுக்கு இரான் கடனாக வழங்கியது. இவை கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் ஆயுத விநியோகத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்த போது, பீரங்கிகள் மற்றும் உதிரி பாகங்கள் போன்ற விநியோகங்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன" என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
ஆனால் இரான் பாகிஸ்தானை பகிரங்கமாக ஆதரிக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மேற்கு ஆசிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா, இந்திய-இரான் உறவுகள் குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
அவர் பிபிசியிடம் பேசுகையில், "வரலாற்றில் சில சமயங்களில் இரான் இந்தியாவுடன் நின்றது உறுதி. 1965 மற்றும் 1971 போர்களில் இரான் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை, அவ்விரு நாடுகளுக்கும் இடையே இஸ்லாமிய ஒற்றுமைக்கான எதிர்பார்ப்பு இருந்த போதிலும் இந்த நிலைமை தான் இருந்தது . இது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான ராஜ்ஜீய சமிக்ஞையாக இருந்தது" என்று கூறினார்.
இரானியப் புரட்சிக்குப் பிறகு உறவுகளில் ஏற்பட்ட மாற்றம்
1979-ஆம் ஆண்டின் இரானியப் புரட்சி முகமது ரேசா ஷா பஹ்லவியின் மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், ருஹொல்லா கொமேனி தலைமையில் இரான் இஸ்லாமியக் குடியரசு அமைய வழிவகுத்தது.
அதன்பிறகு இந்திய-இரான் உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா கூறுகையில், "1979-க்குப் பிந்தைய காலம் மிகவும் சிக்கலானதாக மாறியது. ஆனால் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் எழுச்சிக்கு எதிராக வடக்குக் கூட்டணியை இந்தியாவுடன் இணைந்து இரான் ஆதரித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு மிகவும் உறுதியான மற்றும் நடைமுறைச் சான்றாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
1979 புரட்சிக்குப் பிறகு, இரான் பிராந்தியத் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. அதற்கு ஒரு பெரிய, மேற்கத்திய சார்பற்ற மற்றும் அணிசேராக் கொள்கை கொண்ட இந்தியா தேவைப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தல்மிஸ் அகமது தொடர்ந்து பேசுகையில், "இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இந்தியா இராக்கை ஆதரிப்பதாக இரான் கருதியது. ஆனால் விரைவில் இந்திய-இரான் உறவுகள் மீண்டும் சீரடைந்தன. இதற்குப் பிறகு, முன்னாள் அதிபர் ரப்சஞ்சானி பதவிக்காலத்தில் இந்திய-இரான் நட்பு உறவுகள் தொடர்ந்து வளர்ந்தன. அவர் இந்தியாவுக்கு வந்தார், நரசிம்ம ராவ் இரானுக்குச் சென்றார். இரு நாடுகளின் மூலோபாயக் கூட்டாண்மை முன்னேற்றமடைந்தது" என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு இரான் ஆதரவு

பட மூலாதாரம், Raheb/Newsmakers via Getty Images
இந்தியா மற்றும் இரான் இடையிலான நல்லுறவு என்று வரும்போது, காஷ்மீர் விவகாரம் எப்போதும் ஒரு உதாரணமாகக் கூறப்படுகிறது.
அப்போது இந்தியாவின் பிரதமராக நரசிம்ம ராவ் பதவி வகித்தார்.
1994-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனிவா கூட்டத்தில், பாகிஸ்தானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர முயன்றன.
அதில் காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், இதற்குத் தேவையான ஆதரவு பாகிஸ்தானுக்குக் கிடைக்கவில்லை, அதற்கு முக்கியக் காரணம் இரானின் 'வீட்டோ' ஆகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அண்மையில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"1994-இல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர முயன்றபோது, அதைத் தடுப்பதில் இரான் முக்கியப் பங்கு வகித்தது"என அவர் அதில் எழுதியுள்ளார்.
மேலும், "இரானின் தலையீடு காரணமாக, இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் பலவீனமாக இருந்த ஒரு காலகட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க முடியாமல் போனது. இரானுடனான நமது உறவுகள் நாகரிக மற்றும் மூலோபாய ரீதியிலானவை" என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேராசிரியர் சுஜாதா கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானைப் போல இரான் ஒருபோதும் இந்தியாவை பகிரங்கமாக எதிர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதற்கு இஸ்லாமிய ஒற்றுமையை விட, இரான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியே முக்கியக் காரணமாக இருந்தது" என்று தெரிவித்தார்.
டெஹ்ரான் பிரகடனத்திலிருந்து சாபஹர் வரை
2001-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இரான் சென்றிருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையே 'டெஹ்ரான் பிரகடனம்' கையெழுத்தானது.
இந்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தின்படி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் இரான் பயணத்தின் போது வெளியிடப்பட்ட 'டெஹ்ரான் பிரகடனம்' மற்றும் அதனைத் தொடர்ந்து இரானிய அதிபர் முகமது கதாமி இந்தியா வந்திருந்தபோது வெளியிடப்பட்ட 'புது டெல்லி பிரகடனம்' ஆகியவை இந்திய-இரான் உறவுகளை மேலும் வலுப்படுத்தின.
'டெஹ்ரான் பிரகடனத்தில்' இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மை, எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், பிராந்திய நிலைத்தன்மை முதல் ஆப்கானிஸ்தானில் அமைதிக்காக ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவது வரையிலான முக்கிய விவகாரங்களில் ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருந்தன.
பாகிஸ்தானைத் தவிர்த்து, சாலை மற்றும் இரயில் திட்டமான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் வழியாக இந்தியப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவைச் சென்றடையும் வகையில், சாபஹர் துறைமுகத்தை மேம்படுத்த 2003-இல் இரானிடம் இந்தியா முன்மொழிந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2016-இல் இரான் சென்றார். அதே ஆண்டு அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர் 2024-இல், சாபஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இது தொடர்பாக அமெரிக்காவின் அழுத்தம் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பேராசிரியர் சுஜாதா கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்கள் இரு நாடுகளுக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருந்தனர், எனவே அங்கு ஒத்துழைப்பு என்பது இயல்பானதாக இருந்தது. சாபஹர் துறைமுக ஒப்பந்தம் பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை அணுக இந்தியாவிற்கு வழிவகை செய்தது" என்றார்.
தல்மிஸ் அகமது கூறுகையில், "நாம் டெஹ்ரான் பிரகடனத்தை எட்டினோம். ஆனால் மன்மோகன் சிங் காலத்தில், இரானுடன் தான் நல்லுறவு கொள்ளப் போவதில்லை என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியது. சாபஹர் திட்டம் முன்னுக்கு வந்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. பின்னர் இந்தியாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இரான் இரண்டாவது இடத்த ஒரு காலமும் வந்தது"என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "டிரம்ப் இரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார், இதனால் இந்தியா இரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. சாபஹரில் இந்தியாவின் செயல்பாடு குறைந்தது, இறுதியில் இந்தியா அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது"என்றும் "சாபஹர் போன்ற அனைத்து வாய்ப்புகளையும் நாம் இழந்துவிட்டோம். டிரம்ப் ஆட்சிக் காலத்தில், அவரது அழுத்தத்திற்குப் பணிந்து இரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது நாம் செய்த மிகப்பெரிய தவறாகும். அமெரிக்கா நம்முடன் நட்பாக இருக்க விரும்பினால், அவர்கள் நமது நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாம் சொல்லியிருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.
உண்மையான நட்புறவா அல்லது சூழலின் கட்டாயமா?

பட மூலாதாரம், Pool/Iranian Supreme Leader Press Office/Anadolu Agency/Getty Images
பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா கூறுகையில், இரான் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவை "ஆதரித்துள்ளது", ஆனால் அதை "நலன்களைப் பகிர்ந்து கொள்ளுதல்" என்று அழைப்பதே மிகவும் துல்லியமாக இருக்கும். ஏனெனில் தன்னுடைய நலன்களுடன் முரண்பட்ட போதெல்லாம் இரான் இந்தியாவிற்கு "முன்னுரிமை அளிக்கவில்லை" என்கிறார் அவர்.
இதனைக் குறித்து விளக்கிய அவர், "ஆராய்ச்சி மற்றும் படிப்பினைகளின் அடிப்படையில் நான் கூறுவது என்னவென்றால், இது பெரும்பாலும் கட்டாயம் மற்றும் மூலோபாய கணக்கீடுகளின் விளைவாகவே இருந்துள்ளது. இது இந்தியாவின் மீதான எந்தவொரு ஆழ்ந்த நட்பு அல்லது ஒற்றுமையின் வெளிப்பாடு அல்ல" என்கிறார்.
இந்தியாவிற்கும் இரானுக்கும் இடையிலான உறவில் மூன்று அடுக்குகள் இருப்பதாகவும், அது தான் இந்த உறவின் சிக்கலான தன்மை என்று பேராசிரியர் சுஜாதா கருதுகிறார்.
"முதல் அடுக்கு நாகரிக மற்றும் கலாசார ரீதியிலானது. பாரசீக இலக்கியம், மொழி, சூஃபி மரபுகள் மற்றும் வரலாற்றின் பொதுவான அடிப்படை உண்மையானது. இரு சமூகங்களுக்கும் இடையே ஒரு இயல்பான தொடர்பு உள்ளது"என்று அவர் விளக்குகிறார்.
"இரண்டாவது அடுக்கு நடைமுறை மற்றும் பரிவர்த்தனை சார்ந்தது. இதில் எண்ணெய், வர்த்தகம், இணைப்பு மற்றும் உலக அரசியல் நலன்கள் அடங்கும்.
மூன்றாவது மற்றும் மிக நேர்மையான அடுக்கு 'கட்டாயத்தின்' அடிப்படையிலானது. இரு நாடுகளுக்கும் சிறந்த தேர்வுகள் இல்லாதபோது அல்லது அப்போதைய சர்வதேச சூழல் அவர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கிய போது அவை ஒன்றிணைந்தன"என்று அவர் பட்டியலிடுகிறார்.
முன்னாள் தூதர் தல்மிஸ் அகமது கூறுகையில், "இரானுடனான இந்தியாவின் உறவை நாம் கவனித்தால், இரான் எப்போதும் இரண்டாம் நிலையிலேயே இருந்து வந்துள்ளது. நாம் எப்போதும் அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்கவே முயன்றோம். இந்தியா மற்றும் இரான் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையின் திறனை நம்மால் ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை"என்கிறார்.
"சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, இன்று இந்தியா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இருக்கிறதே தவிர இரானுடன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இரான் மீதான தாக்குதல் குறித்து இந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. காமனெயி மரணத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகே இரங்கல் தெரிவித்தது. வெளியுறவுக் கொள்கையில் இரானுடனான நமது உறவுகள் கணிசமாகக் குறைந்துவிட்டன என்பதை இந்தியாவே தெளிவுபடுத்தியுள்ளது"என்று கூறிய அவர்,
"தற்போது, நமக்கு எதுவும் தெரியாது. போர் நடந்து கொண்டிருக்கிறது, அது எங்கு முடியும் என்று நமக்குத் தெரியாது. அது முடியும் போது மத்திய கிழக்கில் என்ன நிலைமை இருக்கும் என்றும் நமக்குத் தெரியாது. இது இந்தியாவிற்கு என்ன புதிய சவால்களை முன்வைக்கும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்"என அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












