'சச்சினுக்கு நன்றிக்கடன்': இந்திய அணியில் இடம் பெறவே போராடிய சாம்சன் நாயகனான கதை

டி20 உலகக்கோப்பை, சஞ்சு சாம்சன், இந்தியா சாம்பியன்,

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மனமுடைந்து போனேன். என் கனவு மீண்டும் நொறுங்கிவிட்டது போல உணர்ந்தேன்."

ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் வென்ற பிறகு தொடர் நாயகன் விருதை சஞ்சு சாம்சன் வென்ற போது, அவர் மனமுடைந்து போயிருந்த நேரத்தின் நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றியிருக்கலாம்.

இந்திய அணியுடனான தனது பயணம் அத்துடன் முடிந்துவிட்டது என்று அந்த நேரத்தில் மனதளவில் அவர் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி நடைபெற்றது. டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா விளையாடிய கடைசி டி20 போட்டியும் அது தான்.

அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். டி20 போட்டிகளில் தொடர்ந்து அவர் 11வது முறையாக அரைசதம் அடிக்கவில்லை.

அதே போட்டியில் இஷான் கிஷன் சதம் அடித்திருந்தார். 271 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பிறகு இந்திய அணி மீண்டும் களத்துக்கு வந்தபோது நிகழ்ந்த மாற்றம் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடும் சாம்சனின் கனவு நிறைவேறாமல் போகும் என்பதை உணர்த்தியது.

களத்துக்குள் நுழைவதற்கு முன்பாக அணி நிர்வாகத்திடமிருந்து ஒரு தகவல் வந்தது. அன்றைய போட்டியில் சதமடித்த இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஏமாற்றமடைந்திருந்த சாம்சன் தனது கீப்பிங் கையுறைகளை எல்லைக் கோட்டுக்கு அருகில் நின்றிருந்த இரு இளம் ரசிகர்களிடம் கொடுத்தார்.

சாம்சன் கொடுத்த பரிசு அந்த சிறுவர்களின் நாளை திருப்திகரமாக்கி இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் சாம்சன் கடினமான சூழலை எதிர்கொண்டிருந்தார். இந்த உறைகளுக்கு இனிமேல் தேவை இருக்காது என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

மிகவும் வீரியமான மறுபிரவேசம்

டி20 உலகக்கோப்பை, சஞ்சு சாம்சன், இந்தியா சாம்பியன்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டி20 உலக கோப்பை தொடர் நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்படத் தொடங்கியதில் இருந்து உலகக்கோப்பை தொடருக்கு அவர் தான் முதல் தேர்வாக இருப்பார் என்பதும் இந்திய அணியின் ஆடும் லெவனில் சாம்சனுக்கு இடம் கிடைக்காது என்பதும் தெளிவானது.

ஆனால் ஒரு மாத காலத்தில், காட்சிகள் அனைத்தும் மாறின. அவரின் நிறைவேறாத கனவு நிறைவேறியது மட்டுமல்லாது, அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தையும் அடைந்துள்ளார்.

தொடரின் பாதி வரை விளையாடும் அணியில் நிலையான இடம் இல்லை என்று கருதப்பட்ட வீரர் தொடர் நாயகன் விருதை வென்றது உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் அரிதாகவே நிகழ்ந்துள்ளது.

ஆனால் கிரிக்கெட் உலகில் இது தற்போது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது கேப்டன் சூர்யகுமாரால், ஆடும் லெவனில் இடம் இல்லை எனக் கருதப்பட்ட சாம்சன் தற்போது இந்திய வெற்றிக்கு முக்கிய பங்களித்து மிகப்பெரிய ஹீரோவாக மாறியுள்ளார்.

மூன்று நாக்-அவுட் போட்டிகளிலுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் சாம்சன். கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மறுபிரவேசம் எனக் கருதப்படும் அளவிற்கு குறிப்பிடத்தக்க சாதனையை சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார்.

கிட்டத்தட்ட கால்-இறுதி போட்டி போல கருதப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம்சன் 97 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் அரை இறுதிப் போட்டியில் 89 ரன்கள் (42 பந்துகள்) எடுத்து இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார்.

ஆமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மீண்டும் 89 ரன்கள் எடுத்த போது, இந்தியா டி20 உலகக்கோப்பை மகுடத்தை தக்க வைக்கும் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

ஐந்து போட்டிகளில் 321 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மனதில் இருந்த வலி அனைத்தும் சரியானதைப் போன்ற ஓர் உணர்வு அது. ஏனெனில் 80.25 சராசரியில் 199 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை அவர் குவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் சாம்சன் தான். ஒரு வீரர் இந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவரிடம் சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இருக்காது.

நட்சத்திரமாக மாறிய சாம்சன்

டி20 உலகக்கோப்பை, சஞ்சு சாம்சன், இந்தியா சாம்பியன்,

பட மூலாதாரம், Getty Images

போட்டிக்குப் பிறகு பேசிய சஞ்சு சாம்சன், "கனவு நனவானதைப் போன்ற ஓர் உணர்வு. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, இந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்." எனத் தெரிவித்தார்.

"2024-இல் இது தொடங்கியது. நான் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தேன். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. நான் கனவு கண்டு கொண்டே இருந்தேன். எனக்கு இதைத்தான் செய்ய வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து தொடருக்குப் பிறகு தான் மனமுடைந்து போனதாகவும் தனது கனவு நொறுங்கிப்போன உணர்வில் இருந்ததாகவும் கூறிய சாம்சன், "நான் மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் கடவுள் வேறு சில திட்டங்களை வைத்திருந்தார். கனவு காண்பதற்கான தைரியம் இருந்ததில் மகிழ்ச்சி. கடந்த இரண்டு மாதங்களாக சச்சின் டெண்டுல்கர் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நேற்று இரவு கூட எனக்கு அழைத்துப் பேசினார்." எனத் தெரித்தார்.

டி20 உலகக்கோப்பை, சஞ்சு சாம்சன், இந்தியா சாம்பியன்,
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

உலகக்கோப்பையை குல்தீப் அவரிடம் கொண்டு வந்த போது கனவு நனவானதன் மகிழ்ச்சி வெளிபட்டது. முதலில் குல்தீப்புடன் இணைந்து கோப்பையை உயர்த்திப் பிடித்தார் சாம்சன். அதன் பிறகு கோப்பையுடன் குல்தீப் நகரத் தொடங்கிய போது எதுவும் கூறாமல் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு குல்தீப் கைகளிலிருந்த கோப்பையைப் பெற்று நீண்ட நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் அவர் வானத்தைப் பார்த்த போதெல்லாம், அவர் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்த்திருப்பார். ஆனால் உணர்ச்சிக் கடலில் உறைந்திருந்த அவர், கிரிக்கெட்டை உயிரென பார்க்கும் 140 கோடி ரசிகர்களுக்கு, எப்போதும் நினைவுகூரப்படும் ஒரு நட்சத்திரமாக தானே மாறியிருப்பதை அவர் உணர்ந்திருக்க மாட்டார்.

எதிர்காலத்தில் சாம்சன் பேட்டி அளிக்கிறபோது, "நான் 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் உள்ளேன், ஆனால் 40 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன்," என்கிற வருத்தம் அவருடைய மனதில் இருக்காது.

ஏனெனில் இந்த சில போட்டிகளில் அவர் சாதித்தவை, நூற்றுக்கணக்கான போட்டிகளில், ஆயிரக்கணக்கான ரன்களைக் குவித்து, சாதனைமேல் சாதனை படைந்த பல கிரிக்கெட் ஜாம்பவான்களால் கூட நிகழ்த்த முடியாதவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு