பாபர் மசூதி தீர்ப்பு: "நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி" - தமிழக தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 ஆண்டுகள் கழித்து இன்று சிபிஐ நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக கருதுகிறோம் என தெரித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா.
இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்து அளிக்கப்பட்ட சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு அத்வானி தலைமையில் பல ரத யாத்திரைகள் நடத்தப்பட்டன. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது எல்லாம் அப்போது செய்தித்தாள்களில் தெளிவாக வந்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
இடிப்பு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி லிபரஹான் கமிஷன் 8 கோடி ரூபாய் செலவில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் என்ன நடந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
"அந்த அறிக்கையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கர சேவகர்களிடம் கீழே இறங்கிவரும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், கட்டடத்தை இடிக்க வேண்டாம் என்றோ, அல்லது சேதப்படுத்த வேண்டாம் என்றோ அவர்கள் கூறவில்லை. கர சேவகர்கள் மசூதியை இடிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தலைவர்களின் விருப்பமாக இருந்தது என லிபரஹான் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக" ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
அன்று இருந்த ஊடகங்கள் எல்லாம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை பதிவு செய்தன.
உமா பாரதி போன்றோர் எல்லாம், கர சேவகர்களிடம் கட்டடத்தை இடிக்க சொன்னதெல்லாம் ஊடகங்களில் பதிவாகியிருக்கிறது.
இப்போது "பாபர் மசூதியை இடிக்க யாரும் சதித்திட்டம் தீட்டவில்லை, யாரும் இடிக்கவில்லை என்கிறார்கள். அது என்ன கடவுள் செயலா, இல்லை இடி விழுந்து தரைமட்டமாகிவிட்டதா?" என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இது கேலிக்கூத்தான தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் பாபர் மசூதியை சமூக விரோதிகள்தான் இடித்தார்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது யார் என்பது குறித்து பேசவில்லை. அவர்கள் எல்லாம் என்ன தானாக அங்கு வந்தார்களா? அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு கொடுக்கவில்லையா, விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுக்கவில்லையா? இடித்தவர்கள் சமூக விரோதிகள் என்றால், அதை செய்யச் சொன்னவர்கள் யார்? எனவும் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்புகிறார்.
'சிபிஐ கடமையை சரியாக செய்ய தவறிவிட்டது'
பாஜக தலைவர்கள் எல்லாம் இதில் சம்பத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஒலிநாடாக்கள் எல்லாம் தெளிவாக இல்லை என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் சிபிஐ தன் கடமையை செய்ய தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும் என ஜவஹிருல்லா தெரிவித்தார்.
சில உள்ளூர் காவல்நிலையங்களில் இருக்கக்கூடிய நீதியையும் நியாயத்தையும் கூட, இனி சிபிஐ-யிடம் மக்கள் எதிர்ப்பார்க்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
'நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லை'
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் கூறுகையில், இன்று தீர்ப்பு வரும் முன்னரே இந்த தீர்ப்புதான் வரும் என்று அனுமானிக்க முடிந்தது என்றார்.
இதனை நீதி, நியாயம், தர்மம் என்ற வரையறைக்கு எல்லாம் தாண்டிய தீர்ப்பாகவே மக்கள் கருதுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
"பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் இவர்கள்தான், குற்றவாளிகள் இவர்கள்தான், அவர்கள் திட்டமிட்டு செய்த சதிச்செயல் இது என ஓய்வுபெற்ற நீதிபதி லிபரஹான் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி ஏற்கனவே அறிக்கை சமர்பித்து இருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட 47 தலைவர்களும், ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின்போது அங்கு இருந்திருக்கிறார்கள் என லிபரஹான் கமிஷன் அறிக்கை கூறுகிறது
தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதை எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
"இது முன்கூட்டியே தீட்டப்பட்ட சதித்திட்டம் இல்லை என்று இன்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதியை அத்துமீறி சென்று சமூக விரோதிகள், குற்றவாளிகள் இடித்திருக்கிறார்கள் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது திட்டமிட்டு செய்தால் குற்றம், திட்டமிடாமல் செய்தால் குற்றம் இல்லை என்பது போன்ற வேடிக்கையான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.
மேலும் திட்டமிடாமலா குற்றஞ்சாட்டப்பட்ட இந்த 47 பேரும் ஒரே நாளில் அங்கு சென்றிருப்பார்கள்?" என அப்துல் ரஹ்மான் கேள்வி எழுப்புகிறார்.
நீதிமன்ற தீர்ப்பு என்று சொன்னாலே அதற்கு என்று ஒரு தனி கண்ணியமும் தனி மரியாதையும் இருந்த ஒரு பாரம்பரியாமான மரபை தாண்டிய ஒரு அசாதாரண சூழ்நிலை நடப்பதாக நாட்டு மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு லக்னௌ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
"ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்ப்ட்ட தீர்ப்பில் கூட, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், கோயில் இருந்தது என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை, எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. அதோடு, பாபர் மசூதியை அத்துமீறி சென்று இடித்தது மிகப்பெரிய குற்றச்செயல் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுவிட்டு, அந்த இடத்தை ராமஜென்ம பூமி கமிட்டியிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்துகொண்ட போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம், சட்டவிரோதம் என்றும் இந்த வழக்கில் சிபிஐ, பாஜக அரசின் கூண்டுக்கிளியாகி கடமை துறந்து தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், "ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் பட்டப் பகலில் இடித்து நொறுக்கினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அழிவுச் செயல் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது" என்று கூறியுள்ளார்.
"அந்தக் கொடூர சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்.நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- அயோத்தி பாபர் மசூதி சம்பவம்: களத்தில் இறங்கிய "வலிமை பெண்கள்" - சர்சசைகளுடன் போராடிய கதை தெரியுமா?
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்கள் விடுதலை
- கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்து இந்தியா மீது டிரம்ப் கடும் தாக்கு
- ஹத்ராஸ் கூட்டு பாலியல் வல்லுறவு: வலுக்கட்டாயமாக தலித் பெண் உடல் தகனம்
- தமிழ்நாடு சமூக முடக்கம் நீட்டிப்பு: தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் என்ன?
- 50 பெண்களுக்கு மது கொடுத்து மருத்துவமனையில் பாலியல் வல்லுறவு என புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












