தமிழ்நாடு சமூக முடக்கம் நீட்டிப்பு: அக்டோபர் 1 முதல் தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் என்ன?

tamil nadu lockdown unlock update

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: தமிழகத்தில் தமிழ்நாடு சமூக முடக்கம் நீட்டிப்பு

கொரோனா பரவலை தொடர்ந்து 9ஆவது முறையாக சமூக முடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 8-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். சமூக முடக்கத்தை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 9-வது கட்டமாக அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30-9-2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31-10-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

“திரைப்பட தொழிலுக் கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“29-8-2020 மற்றும் 8-9-2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1-10-2020 முதல், அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24-9-2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

tamil nadu lockdown unlock update

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்திவைக்கப்படுகின்றது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: “கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு”

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழக வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை (செப். 30) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை (செப். 30) மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா. புவியரசன் கூறியதாக தெரிவிக்கிறது தினமணி நாளிதழ்.

இந்து தமிழ் திசை: “கல்விக் கொள்கை தொடர்பாக மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில்”

தேசிய கல்விக் கொள்கை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளிக்க உள்ளார். அவரின் ட்விட்டர் மற்றும் அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நேரலைக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

ரமேஷ் பொக்ரியால்

பட மூலாதாரம், Getty Images

34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செப்டம்பர் 1-ம் தேதி நாள் முழுவதும் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அந்நிகழ்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அக்டோபர் 1-ம் தேதி அன்று ட்விட்டர் மற்றும் அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நேரலைக் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் #NEPTransformingIndia என்ற ஹேஷ்டேகுடன் அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை முன்வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :