ஐபிஎல் 2020 SRH Vs DC : டெல்லியை ஹைதராபாத் அணி வீழ்த்தியது இப்படித்தான் - மேட்ச் ஹைலைட்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை ஹைதராபாத் அணி வீழ்த்தியது.
டாஸில் வெற்றி, பந்து வீச்சு, சிறப்பான தொடக்கம்
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் இரண்டு போட்டிகளில் இவர்கள் சொதப்பி இருந்தாலும், இந்த மேட்சில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்களை அடித்தது. 9.3 ஓவரில் இந்த ரன்களை குவித்து இருந்தது.
டேவிட் வார்னர் 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்கள் அடித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்து இருந்தது.
டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ககிசோ ரபாடா.
குறைவான ஸ்கோர்தான், ஆனால்...
குறைவான ஸ்கோர்தான் சுலபமாக சேசிங் செய்யப்படலாம் என பார்வையாளர்கள் கருதிய நிலையில், ஹைதராபாத் அணி வேறொரு முகத்தை காட்டியது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர்.
5 பந்துகளை சந்தித்த பிரித்வி 2 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்குமார் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேஷ் ஐய்யர் 21 பந்தில் 17 ரன்கள் எடுத்து ரஷித்கான் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
மளமளவென சரிந்த விக்கெட்டுகள்
ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஆனால் இது நீடிக்கவில்லை.
31 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த தவானை ரஷித்கான் வெளியேற்றினார்.

பட மூலாதாரம், Bcci / ipl
ரன் ரேட் அழுத்தத்தில் மெல்ல டெல்லி அணி சிக்கிக் கொள்ள, ஹெட்மையர் 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து புவனேஷ் குமார் பந்து வீச்சில் கேட்ச் முறையில் அவுட் ஆக, 2 சிக்சர்கள் உள்பட 27 பந்தில் 28 ரன்கள் என அசத்திய ரிஷப் பந்த் அடுத்து வெளியேறினார்.
வீரர்கள் யாரும் நின்று விளையாடிதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் ரஷித் கான். அவர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












