ஐபிஎல் 2020: பஞ்சாப் அணியின் கனவை தகர்த்த ராகுல் டேவாட்டியாவின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், BCCI/ IPL
- எழுதியவர், எம். செந்தில் குமார்
- பதவி, பிபிசி தமிழ்
''நெருப்பிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையை யாரும் நேரில் பார்த்ததில்லை. ஆனால் நேற்று ராகுல் டேவாட்டியா வடிவில் நான் பீனிக்ஸ் பறவையை பார்த்தேன்'' - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ராகுல் டேவாட்டியாவின்மறக்க முடியாத இன்னிங்ஸ் குறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்த கருத்து இது.
நேற்று இரண்டாவது இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி பேட்டிங், பூரனின் பூமராங் ஃபீல்டிங் என முக்கிய நிகழ்வுகளையெல்லாம் டேவாட்டியா விஸ்வரூபம் எடுத்த அந்த ஒரு ஓவர் ஓரங்கட்டி விட்டது.
பஞ்சாப் அணியின் இமாலய ஸ்கோரை துரத்த குறைந்தபட்சம் ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களாவது எடுக்க வேண்டிய சூழ்நிலையில்,அனுபவம் வாய்ந்த உத்தப்பாவை பேட்டிங் செய்ய அனுப்பாமல் டேவாட்டியாவை ராஜஸ்தான் அணி அனுப்பியதற்கு பல விமர்சனக்குரல்கள் எழுந்தன. ராஜஸ்தான் அணியை பொருத்தவரை, பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்கும் ஒரே இடது கை ஆட்டக்காரர் டேவாட்டியாதான். எனவே அவர் சஞ்சு சாம்னுக்கு பக்க பலமாக இருப்பார் என்று மட்டுமே ராஜஸ்தான் அணி நினைத்தது.
ஆனால் விமர்சனங்களுக்கு தீணி போடுவது போல, ஆரம்பத்தில் பந்துகளை சந்திக்கவே டேவாட்டியா திணறிக் கொண்டிருந்தார். குறிப்பாக சுழற்பந்து வீச்சில் கிரீஸை விட்டு வெளியேறாமல் தற்காப்பாக விளையாடியதை வர்ணனையாளர்கள் கூட விமர்சித்தனர். எதிர் பக்கம் இருந்த சஞ்சு சாம்சமோ, கிடைத்த பந்தையெல்லாம் சிதறடிக்க ரசிகர்களின் பார்வை டேவாட்டியாவின் பக்கம் திரும்பியது. 23 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த டேவாட்டியாவை குறி வைத்து, இனி வரும் போட்டிகளில் ''ரிட்டையட் அவுட்'' முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், BCCI/ IPL
இந்த நிலையில்தான் காட்ரெல்லின் ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றினார் டேவாட்டியா. உத்தப்பா இருக்கும் போது இவரை முன்னதாக களமிறக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலாக அந்த சிக்சர்கள் இருந்தன.
பேட்டிங்கில் நேற்று மற்றொரு முகத்தை காட்டி டேவாட்டியா, அடிப்படையில் ஒரு சுழற்பந்து வீச்சாளர். சிஎஸ்கே உடனான முந்தைய போட்டியில் தனது சிறப்பான லெக் ஸ்பின் மூலம் மூன்று விக்கெட்டை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார். ஆனால் நான் ஒரு நல்ல பேட்ஸ்மேனும் கூட என அவர் நிரூபிக்கும் வாய்ப்பு நேற்றுதான் கிடைத்தது. ஒரே ஓவரில் பிரபலமாகியிருக்கும் ராகுல் டேவாட்டியா 2014-ஆம் ஆண்டே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?
2014-ஆம் ஆண்டு இதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் அவரை ஐபிஎல்லில் அறிமுகப்படுத்தியது. அந்த தொடரில் வெறும் மூன்று போட்டிகளில் மட்டும்தான் விளையாடினார். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக பிரகாசிக்கவில்லை.
2015-ஆம் ஆண்டும் ராஜஸ்தான் அணியில் அவர் நீடித்தாலும், மிக மோசமான அனுபவத்தை அந்த தொடர் அவருக்கு அளித்தது. ஏனெனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.

பட மூலாதாரம், BBCI/ IPL
2016-ஆம் ஆண்டு அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. 2017-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஏலமெடுக்கப்பட்ட அவருக்கு 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. மீண்டும் ஏமாற்றம்.
ஆனால் 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டேவாட்டியாவின் அடிப்படை விலை 10 லட்ச ரூபாய்தான். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் 2.5 கோடி ரூபாய்க்கு அவரது விலை உயர்ந்தது. இறுதியில் 3 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் டேவாட்டியா ஏலமெடுக்கப்பட்டார். யார் இந்த நபர் என்று அப்போதுதான் கிரிக்கெட் உலகமே அவரை திரும்பிப் பார்த்தது.
அந்த தொடரில் டெல்லி அணி அவருக்கு 8 போட்டிகளில் விளையாட வாய்ப்பளித்தது.அதற்கு அவர் ஓரளவு நியாயமும் செய்தார். அடுத்த ஆண்டு தொடரிலும் டெல்லி அணியில் திவாத்யா தொடர்ந்தாலும், அதே அணியில் மற்றொரு லெக் ஸ்பின்னரான அமித் மிஸ்ராவும் இருந்ததால், டேவாட்டியாவின் பந்துவீச்சு பெரிய கவனம் பெறவில்லை.
ஆல் ரவுண்டர் என்ற ஒற்றை வார்த்தைதான் அவரை இத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் இடம்பெறச் செய்தாலும், பேட்டிங்கில் ஜொலிப்பதற்கான வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவே இல்லை. ஆனால் நேற்றைய போட்டியில் கிடைத்த அந்த தருணத்தை அவர் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
1993 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த ராகுல் டேவாட்டியா 2013-ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் தற்போது வரை அவர் வெறும் 7 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளூர் 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 91.

பட மூலாதாரம், BCCI/ IPL
''பயிற்சியின் மீது பந்தை நன்றாகத்தான் சந்தித்திருந்தேன். எனவே என் மீது முதலில் நான் நம்பிக்கை வைக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு சிக்ஸ் அடித்துவிட வேண்டும் என மட்டுமே நினைத்தேன். அது நிறைவேறியதும், அதுதான் அடுத்த தருணம் என காட்ரெல் ஓவரை சந்தித்தேன்.'' என தனது சிக்சர் மழைக்கான காரணத்தை டேவாட்டியா நேற்றைய பரிசளிப்பு விழாவின் போது தெரிவித்தார்.
இந்த ஒரு தருணத்திற்காக அவர் 7 ஆண்டுகள் காத்திருந்துள்ளார். ஆனால் தனக்குள் இருந்த கிரிக்கெட் ஆர்வத்தில் மட்டும் அவர் சலிப்படைந்து விடவே இல்லை. தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 2017-ஆம் ஆண்டு சர்ச்சிலின் பொன்மொழி ஒன்றை டிவீட் செய்திருந்தார் திவாத்யா. அதில் சொல்லப்பட்டிருந்த வார்த்தைகள் இதுதான். ''வெற்றி என்பது ஒரு தோல்வியிலிருந்து மற்றொரு தோல்விக்கு உற்சாகத்தை சற்றும் இழக்காமல் செல்வது''
உற்சாகம் இழக்காத அந்த வெற்றி 2020 ஆம் ஆண்டு டேவாட்டியாவுக்கு கைவசமாகியுள்ளது.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு "பாரத ரத்னா" விருது வழங்க ஆந்திர அரசு கோரிக்கை - விருதுக்கான தகுதிகள் என்ன?
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிர் எதனால் பிரிந்தது? நிலுவை கட்டண சர்ச்சையின் உண்மை என்ன?
- டிரம்ப் வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா? ரூ. 55 ஆயிரம் மட்டுமே செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியால் சர்ச்சை
- விவசாய சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் டிராக்டருக்கு தீ வைப்பு, தமிழக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் - விரிவான தகவல்கள்
- அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்
- மூளையை திண்ணும் நுண்ணுயிரி `நெக்லீரியா ஃபோலெரி` குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












