எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு "பாரத ரத்னா" விருது வழங்க ஆந்திர அரசு கோரிக்கை - விருதுக்கான தகுதிகள் என்ன?

பட மூலாதாரம், G VENKET RAM
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கட்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், "எஸ்.பி. பாசுப்ரமணியம் எங்களுடைய மாவட்டமான நெல்லூரில் பிறந்ததில் எங்களுடைய மாநிலம் அதிர்ஷ்டம் அடைகிறது. அவரது அகால மரணம், உலகளாவிய அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான திரை இசை பாரம்பரியத்தில் எஸ்.பி.பி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
தனது தாய்மொழியான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதுகளை ஆறு முறை அவர் பெற்றிருக்கிறார். ஆந்திர பிரதேசத்தின் மாநில நந்தி விருதுகளை ஆறு முறையும், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிங்களில் எண்ணற்ற விருதுகளையும் அவர் அம்மாநில அரசுகளிடம் இருந்து பெற்றிருக்கிறார். இது தவிர ஃபிலிம்ஃபேர் விருது, தென் மாநிலத்தின் சிறந்த பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது ஆகியவற்றை பெற்றுள்ள எஸ்.பி.பி, 2016இல் சிறந்த திரைப்பிரபலங்களுக்கு வழங்கப்படும் வெள்ளி மயில் பதக்கத்தையும் பெற்றிருக்கிறார். 2001ஆம் ஆண்டில் அவர் பத்ம ஸ்ரீ விருதும், 2011ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன என்று தனது கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

இந்திய இசை உலகில் இதற்கு முன்பு லதா மங்கேஷ்கர், புபேன் ஹசாரிகா, எம்.எஸ். சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி ஆகியோருக்கு ஏற்கெனவே பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியுருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இசை மற்றும் கலை உலகில் எஸ்.பி.பி ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் ஐந்து தசாப்தத்துக்கும் மேலாக அவர் வழங்கிய பங்களிப்பை அங்கீகரித்து நமது நினைவில் அவர் என்னும் நிலைத்திருக்க இந்த உயரிய அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
யாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்?
இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு அரசு அங்கீகாரம் தரும் வகையில், மூன்று பிரிவுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, இனம், தொழில், பதவி, பாலினம் உள்ளிட்ட வேற்றுமையை பார்க்காமல், சமூகத்துக்கு வழங்கி வரும் சிறப்பான சேவையை வழங்குவோருக்கு பாரத ரத்னா என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
1954இல் இதற்கான விதிகள் முதல் முறையாக வகுக்கப்பட்டபோது, கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவைகள் ஆகியவற்றில் இருப்பவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர் கிடைக்காவிட்டால், அதை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவது கட்டாயமில்லை என்றும் அதே விதி கூறியது. மேலும், ஒரே ஆண்டில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி முதலாவது பாரத ரத்னா விரு, 1954ஆம் ஆண்டில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய விஞ்ஞானி சி.வி. ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழக்கப்பட்டது.

பட மூலாதாரம், Government of India
1997இல் இந்த விருது இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வழங்கப்பட்டது. பாரத ரத்னா விருதை இந்திய குடிமக்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று பிரத்யேக விதிமுறை ஏதுமில்லை. இதனால் வேறு நாட்டில் பிறந்து, இந்திய குடியுரிமையை பெற்ற சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

பட மூலாதாரம், Government of India
தனது கருணையால் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற அன்னை தெரசா (பூர்விக பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ) அதில் ஒருவர்.
இவர் தவிர, பாஷ்தூனிய இயக்கத்தை வழிநடத்திய இந்தியர் அல்லாத அப்துல் கஃபார் கான், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி அந்நாட்டின் முதலாவது குடியரசு தலைவராக இருந்த நெல்சன் மண்டேலா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
வாஜ்பேயி, பிரணாப் முகர்ஜிக்கும் பாரத ரத்னா
2009இல் இந்திய குரலிசைப் பாடகரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான பீம்சென் ஜோஷி, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச புகழ் பெற்ற வேதியியல் சி.என். ராவ் என்றழைக்கப்படுஞம் விஞ்ஞானி சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ், இந்திய கல்வியாளர் மதன் மோகன் மாளவியா, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, மறைந்த இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
2019இல் சமூக சீர்திருத்தவாதியும் அரசியல் தலைவராகவும் திகழ்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த நானாஜி தேஷ்முக், கல்வி, சுகாதாரம், கிராமப்புற தற்சார்பு ஆகியவற்றுக்கு வழங்கிய பங்களிப்புக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 48 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் பாரத ரத்னா விருது, இலை வடிவில் காணப்படும். இதன் முன்பக்கம், ஹிந்தி மொழியில் பாரத ரத்னா என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். பின்புறம், அசோக சின்னம் இடம்பெற்றிருக்கும். விதிகளின்படி இந்த விருதை வெள்ளை நிற ரிப்பனில் அணிய வேண்டும்.
இந்த விருதுடன் இந்திய குடியரசு தலைவர் கையொப்பமிட்ட ஒரு சான்றிதழ், வழங்கப்படும். இந்த விருதுடன் எந்தவொரு நிதி மானியம் வழங்கப்படாது.

பட மூலாதாரம், Government of India
அதேபோல, இந்திய அரசியலமைப்பின் விதியின் 18(1)-இல், பாரத ரத்னா விருது பெறுவோர் தனது அடைமொழியாக இந்த விருதை பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், விருது பெற்றவர் விரும்பினால், தனது லெட்டர்பேட், விசிட்டிங் கார்டு, தற்குறிப்பு ஆகியவற்றில் அவசியம் என கருதினால், "குடியரசு தலைவரால் பாரத ரத்னா விருது பெற்றவர்" அல்லது "பாரத ரத்னா விருது பெற்றவர்" என்ற வார்த்தைகளை அவர் போட்டுக் கொள்ளலாம் என்று அந்த விதிகள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
- விவசாய சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் டிராக்டருக்கு தீ வைப்பு, தமிழக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் - விரிவான தகவல்கள்
- அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்
- மூளையை திண்ணும் நுண்ணுயிரி `நெக்லீரியா ஃபோலெரி` குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
- அரபு உலகின் வலிமைமிக்க நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்தது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












