அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்

எடப்பாடி

பட மூலாதாரம், Getty Images

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும், இந்த கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. அதே சமயம், முதல்வர் வேட்பாளரை இறுதி செய்ய கூட்டத்தில் பங்கேற்ற சில மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தியதாகவும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்பது குறித்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

முன்னதாக, தேர்தலை எதிர்கொள்ளும் முன்பாக, கட்சியில் அமைப்பு ரீதியாகவும் மாவட்ட, வட்டார, வார்டு அளவில் வலுப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

தமிழகத்தில் பள்ளிகளில் இருமொழி கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட அரசுக்கு நன்றி உள்ளிட்ட 15 தீர்மானங்கள் சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இது தவிர, கொரோனா காலத்தில் தமிழக அரசு மேற்கொண்ட பணிகள் குறித்தும், பொதுவான அரசின் செயல்பாடுகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டம் தொடங்கும் வேளையில், கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் தனி தனியாக பதாகைகளை தாங்கி அவர்களை வரவேற்றனர்.

செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கை தமிழர் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தைச் சரிசெய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை, அரசு விரைந்து நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பை வேண்டுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரண்டு தீர்மானங்கள் நீட் தேர்வு எதிர்ப்பு தொடர்பாக நிறைவேற்றப்பட்டன.

அதில், ``நீட்'' என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வை அதிமுக ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையில் ``நீட்'' தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், ``நீட்'' தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது,'' என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்வதோடு நிறுத்துக்கொள்கிறார் என்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார் என விமர்சித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: