அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை

பட மூலாதாரம், DIPR
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணி தலைமை தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக ஒரு நிலைப்பாட்டிலும், மாநிலத்தில் ஆளும் அதிமுக வேறொரு நிலைப்பாட்டிலும் இருப்பதால், அந்த கூட்டணி தொடருமா என்ற குழப்பம் மீண்டும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவ்வப்போது அதிமுகவினரும், பாஜகவினரும் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு, அதிமுகவில் அடுத்த முதல்வர் என்ற சர்ச்சை, சில அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தால் தீவிரமானது. இந்திய சுதந்திர தினம் சென்னையில் கொண்டாடப்பட்ட நிலையில், தேனியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக "தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்" என சுவரொட்டி ஒட்டப்பட்டது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும், 'தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்.', 'ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ்.', '2021-ல் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்.', 'ஏழை எளியோரின் எளிய முதல்வர் ஓ.பி.எஸ்.', 'என்றென்றும் மக்களின் முதல்வர் ஓ.பி.எஸ்.' என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.
பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள சுவர்களிலும் இவை ஒட்டப்பட்டு இருந்தன.

பட மூலாதாரம், Manoj
இதையடுத்து, அமைச்சர்கள் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துடனும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடனும் ஒரே நாளில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு ஒரு வாரம் கழித்து நடந்த தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கும். தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். தொண்டர்கள் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதே இல்லை. எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும். எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
முன்னதாக, சுதந்திர தின ஆண்டுக்கொண்டாட்டத்துக்கு மறுதினம் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உருவாகும் என்று கூறினார். இதேபோல, பாஜவினர் கைகாட்டுபவர்கள் தான் 2021ல் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
இதன் பிறகு, பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து சட்டசபைக்கு அனுப்பும் மாவட்ட தலைவருக்கு இனோவா கார் பரிசளிக்கப்படும் என்று மாநிலத்தலைவர் எல்.முருகன் அறிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முருகன் கூறினார்.

இதனால் பாஜக, அதிமுக இடையே கூட்டணி அடுத்த தேர்தலில் தொடருமா என்ற சர்ச்சை தீவிரமானது. இருப்பினும், செய்தியாளர்களிடம் பேசும்போது, இரு கட்சிகளின் கூட்டணியும் தொடருகிறது என்று முருகன் பதில் அளித்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி? என்பது குறித்து தஞ்சாவூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மற்றும் அரசு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

பட மூலாதாரம், DIPR
அப்போது, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதை விட அதிக வசூல் செய்வது தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.
மேலும், "தென் மாநிலங்களில் இருக்கின்ற முதலமைச்சர்கள் ஒன்றாக இணைந்து, இந்த கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வோம் இந்த திட்டம் தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையை மூன்று மாநில அரசுகளும் தொடங்கியுள்ளன" என அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் அதிமுக தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக தலைவர்கள் பரவலான கருத்தை முன்வைப்பது பற்றி கேட்டபோது, "எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை அனைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக தலைமையில்தான் தேர்தலைச் சந்தித்து இருக்கிறோம். அந்த நிலைப்பாடு தொடரும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் தேர்தல் நடைபெற்றது. ஆகவே, எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை அதிமுகதான் தலைமை வகிக்கும்," என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் மாநில அளவில் கட்சியை வலுப்படுத்தவும், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முக்கிய பிரபலங்களை கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையில் மாநில பாஜக தலைவர்கள் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன், திமுகவைச் சேர்ந்த துரைசாமி, கு.க. செல்வம், சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்டோர் பாஜகவில் சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகதான் ஆட்சியை தீர்மானிக்கும் என்று பல இடங்களில் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், கூட்டணி தொடர்பாகவும், முதல்வர் பதவி தொடர்பாகவும் இரு தரப்பிலும் தொடர்ந்து வெளியிட்டு வரும் கருத்துகள், இரு கட்சி தொண்டர்களிடையே சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருவதாக கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு பலியான முதல் எம்.பி
- வசந்தகுமார் எம்.பி மறைவு: பிரதமர் மோதி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
- எஸ்.பி. பாலசுப்ரமணியம்: தொடரும் வென்டிலேட்டர் சிகிச்சை - நிலவரம் என்ன?
- நீட், ஜேஇஇ தேர்வு: காங்கிரஸ் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா?
- கொரோனா: ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம் என்ன காரணம்?
- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக தகவல் - உடல்நலப் பிரச்சனை காரணமா?
- நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












