எடப்பாடி ஒருமுகத் தேர்வு இல்லையா? அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்படுவது ஏன்?

எடப்பாடி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் பொதுவெளியில் பேசியிருப்பது அக்கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியிருக்கிறது.

திங்கட்கிழமையன்று மதுரை மாவட்டம் பரவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முதல்வரைத் தேர்வுசெய்வார்கள் எனப் பதிலளித்தார். ஆனால், அ.தி.மு.க., எடப்பாடி கே. பழனிச்சாமி - ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறினார்.

செல்லூர் ராஜுவின் பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021ம் நமதே!" என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசியல் களத்தில் 60களுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளிலுமே முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெளிவாகவே இருந்துள்ளது. "கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருக்கும்போது அந்தந்தக் கட்சிகள் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்ற கேள்வியே எழவில்லை. 1980 தேர்தலில் மட்டும் காங்கிரசும் தி.மு.கவும் சம இடங்களில் போட்டியிட்டதால் யார் முதல்வர் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், விரைவிலேயே அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் இந்திரா காந்தி. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால் கருணாநிதிதான் முதல்வர் என அறிவித்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் அப்படி ஒரு பேச்சு எழுகிறது" என்று நினைவுகூர்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.

2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா மறைந்த பிறகு, சிறிதுகாலம் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அதற்குப் பிறகு ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராக விரும்பிய நிலையில், அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி கே. பழனிசாமி தற்போது மூன்றாண்டுகளை முதல்வராகக் கழித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

"ஒரு முதல்வராக அவர் நன்றாக செயல்படுகிறார்; திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார் என்ற பெயர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு வந்துவிட்டது. ஆட்சிக் களத்தில் அவர் அங்கீகரிக்கப்பட்டுவிட்டார். ஆனால், ஒரு தேர்தலில் வெற்றிபெற்று நிரூபித்தால்தான் அரசியல் ரீதியான தேர்தலில் ஜெயித்தால்தான் அவருக்கு அரசியல்ரீதியான அங்கீகாரம் கிடைக்கும். இந்தச் சூழலில் தற்போது ஆட்சியில் இருப்பவரை முன்னிறுத்தாமல், குழப்பமாக பதில் சொல்வது தாங்களே தோல்வியை ஒப்புக்கொள்வதைப் போல" என்கிறார் ராமகிருஷ்ணன்.

தவிர, இந்தத் தருணத்தில் யாரை மனதில் வைத்து செல்லூர் ராஜு இந்தப் பதிலைச் சொன்னார் என்பதும் குழப்பமான விஷயம்தான். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனைக் காலம் விரைவில் முடியவிருக்கும் நிலையில், அவர் அ.தி.மு.கவில் மீண்டும் செல்வாக்கு செலுத்த முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் முன்னிறுத்த விரும்பும் முதல்வர் வேட்பாளரை மனதில் வைத்து செல்லூர் ராஜு இந்த பதிலைச் சொன்னாரா அல்லது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தை மனதில் வைத்து இந்த பதிலைச் சொன்னாரா என்பதில் தெளிவில்லை.

"அப்படி நடந்தால் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கு சசிகலா அடையாளம் காட்டும் நபருக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழக மக்கள் புதியவர்களை உடனடியாக ஏற்க மாட்டார்கள். ரஜினிகாந்த் தயங்குவதற்கே இதுதான் முக்கியமான காரணம். ஆகவே, அ.தி.மு.கவில் புதிதாக யாரையும் முன்னிறுத்துவார்களா என்பது சந்தேகம்தான்" என்கிறார் ராமகிருஷ்ணன்.

இந்தத் தருணத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களிடமிருந்து முதல்வர் வேட்பாளர் குறித்து இம்மாதிரி கருத்துகள் வெளியாகியிருப்பது அ.தி.மு.கவினரை சங்கடத்திற்குள்ளாக்கியிருக்கிறது. இதனை இந்தத் தருணத்தில் பேசவே வேண்டியதில்லை என்கிறார் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன்.

"கட்சியையும் ஆட்சியையும் இக்கட்டான சூழலில் 3 ஆண்டுகளுக்கு நடத்திச் சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அடுத்தும் அவர்தான் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதை நாம் சொல்லக்கூடாது. கட்சிதான் சொல்ல வேண்டும். அதுவரை கட்சியையும் ஆட்சியையும் சேர்ந்தவர்கள் கட்சிப் பணிகளை, ஆட்சிப் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்" என்கிறார் வைகைச் செல்வன்.

இம்மாதிரி விவகாரங்களையெல்லாம் கட்சியின் பொதுக் குழு, செயற்குழுவில்தான் பேச வேண்டும். பொதுவெளியில் பேசக்கூடாது என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: