ஐபிஎல் 2020: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் போட்டிகள் – 2009, 2014 போல் வரவேற்பை பெறுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான கால அட்டவணை செப்டம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டிகள் இந்தியாவை விட்டு வெளியே நடப்பது இது முதல் முறையல்ல. 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முழு ஐபிஎல் தொடரும் நடந்தது. அதன்பின் 2014ஆம் ஆண்டு முதல் கட்ட போட்டிகள் அங்கு நடைபெற்றன.
தேர்தல் காலத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது கடினம் என்பதாலும், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த போட்டிகள், வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டன.
2009ஆம் ஆண்டில், குறைந்த காலத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டின் துணையுடன் போட்டிகளுக்கான தயாரிப்புகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டன. 2008ஆம் ஆண்டுதான் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டிருந்தன. எனவே அடுத்த ஆண்டே வெளிநாட்டில் போட்டியை வைத்தால் அது வெற்றியளிக்குமா என பல சந்தேகங்கள் இருந்தன.
ஆனால் ஒரு சில ஆரம்ப போட்டிகளில் அந்த சந்தேகங்கள் தெளிவாகின. நாடு கடந்து நடத்தப்பட்டாலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பை பெற்றன. மீண்டும் ஐபிஎல் போட்டிகள் 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றப்போது அதைக்காட்டிலும் சிறப்பான வரவேற்பே கிடைத்தது.
ஆனால் 2020ஆம் ஆண்டு கொரோனவை மனதில் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன.
போட்டிகள் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறுமா? குறைந்த அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என பல கேள்விகள் எழுந்தன.
ஆனால் இது குறித்த எந்த அறிவுப்பும் வரவில்லை. இது முந்தைய போட்டிகளை போலவே சுவாரஸ்யமானதாக இருக்குமா என்பதும் தெரியவில்லை.
ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் புதியது.
2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நேரில் கண்ட கிரிக்கெட் ரசிகர் ரகுராமனிடம் இதுகுறித்து பேசினோம்.

பட மூலாதாரம், CHENNAI SUPER KINGS / TWITTER
"ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் என்று அறிவித்தவுடன், அங்கு சென்று சில போட்டிகளை காண நானும் எனது நண்பர்களும் முடிவு செய்தோம்,"
"முதலில் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் குறித்து யாரும் அதிகமாக பேசவில்லை. ஆனால் போட்டி தொடங்கியவுடன் வரவேற்பு அதிகரித்தது,"
கில் கிறிஸ்டுக்கு ரசிகரான "சிஎஸ்கே ஆதரவாளர்"
மேலும் டர்பனில் விளையாடிய பல போட்டிகளை காண இந்தியர்கள் கணிசமாக வந்தனர். அந்த போட்டித் தொடர் முழுவதும் மேத்யூ ஹேடன் மற்றும் சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடினர். அவர்கள் எப்போது விளையாட வந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்ல பிற அணியின் ரசிகர்களும் கோஷம் எழுப்பினர்," என நினைவு கூர்கிறார் ரகுராமன்.
2009இல் நடைபெற்ற ஐபிஎல் போட்டி ஒரு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. கடந்த போட்டியில் கடைசி இரு இடத்தை பிடித்த அணிகள் இந்த போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. டெக்கன் சார்ஜர்ஸ் அணி வெற்றி பெற்றது. அதன் கேப்டன் ஆடம் கில் கிறிஸ்ட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அந்த அணியின் பந்து வீச்சாளரான ஆர்பி சிங் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டினார். தென் ஆப்ரிக்காவில் அவருக்கு ரசிகர்கள் சேர்ந்தனர்.
போட்டிகள் செல்ல செல்ல விடுதிகள், பார்கள், மற்றும் பிற இடங்களில் கூடும் ரசிகர்களின் கூட்டம் கிரிக்கெட் பற்றி பேசினர். அது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து அணியின் ரசிகர்களையும் நீங்கள் அங்கு காணலாம். நான் தென் ஆப்ரிக்காவுக்கு சிஎஸ்கே அணிக்கு ஆதரவளிக்க சென்றாலும், எப்போதேல்லாம் கில்கிறிஸ்ட் பேட் செய்கிறாரோ அப்போதெல்லாம் ஆரவாரம் செய்தேன்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள போட்டியை பொருத்தவரை, ஆரவார கோஷங்களையும், நடனங்களையும் நாம் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை. போட்டி மற்றும் வீரர்கள் குறித்த பரபரப்பான பேச்சு, இதுவும் முந்தையை போட்டிகளை போல இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த போட்டி பல வருடங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளப்படும். இது ஓர் அமைதியான கிரிக்கெட் போட்டியாக இருக்கும். இருப்பினும் இந்த பொதுமுடக்கத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு மிகப்பெரிய போட்டியாக இருக்கும். கோஷங்கள் இல்லாமல் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள நேரம் எடுத்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து இதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று வரவிருக்கும் ஐபிஎல் போட்டி குறித்த தனது வரவேற்பை சொல்லி முடித்தார் ரகுராமன்.
2014 ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டி
2009ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வெளிநாட்டில் நடைபெற்றது. காரணம் அதேதான். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். புவியியல் ரீதியாக அருகே இருப்பதாலும், அங்குள்ள உள்ள வசதிகள் காரணமாகவும் இந்த தொடரை காண பல ரசிகர்கள் இந்தியாவில் இருந்து வந்தனர்.
2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்ற கிரிக்கெட் ரசிகர் முகேஷ் சுப்ரமணியன் பிபிசியிடம் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், ROYAL CHALLENGERS BANGLAORE / TWITTER
"ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிரிக்கெட் போட்டி நடப்பது, இந்திய வீரர்களுக்கு வரவேற்பு கிடைப்பது புதியதல்ல. ஷார்ஜா கிரிக்கெட் அரங்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான போட்டிகளை கண்டுள்ளது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெளுத்துக்கட்டிய சச்சினின் ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது."
ஆனால் வெளிநாட்டு மண்ணில் இந்திய ரசிகர்களின் ஆதரவு எட்டு அணிகளுக்கானதாக பிரிவது முற்றிலும் புதியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டியில் க்லென் மேக்ஸ்வெல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் அசர வைக்கும் சிக்ஸர்களை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை ஒவ்வொரு போட்டியிலும் உறுதி செய்தது சுனில் நரைன்தான். அவரின் நிதானமான சுபாவமும், துல்லியமான பந்து வீச்சும் அவருக்கு பெரும் ரசிகர்களை பெற்று தந்தது," என நினைவு கூர்கிறார் முகேஷ்.
2020யில் நடைபெறும் போட்டிகள் குறித்து பேசிய அவர்," இந்த முறை வீரர்களுக்கு பெரும் சவாலாக போட்டிகள் இருக்கும். ஐபிஎல் என்றால் சுவாரஸ்யம், ஆராவாரம், அதிகளவிலான கூச்சல்கள். இது எதுவும் இல்லாமல் வீரர்கள் எப்படி விளையாடப்போகிறார்கள் என்பது வரும் நாட்களில்தான் தெரியும். தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்களை பொருத்தவரை ஒரு மெளனமான திரைப்படத்தை பார்ப்பது போன்றுதான் உணர்வார்கள். திடீரென கிரிக்கெட் என்பது மாறிவிட்டது என்று தோன்றலாம். இருப்பினும் இந்திய வீரர்கள் பல நாட்களாக லைவ் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் இது நிச்சயம் வரவேற்பை பெறும் என்றே சொல்லலாம்."
வர்ணனையாளர்களின் பங்கு சிரமமாகதான் இருக்கும். ரசிகர்கள் அற்ற அரங்கத்தை குறித்து பேசுவது சிரமம்தான். போட்டியில் கேட்கும் ஒரே குரல் அவர்களுடைய குரலாகதான் இருக்கும். இது அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், எந்த ஒரு கிரிக்கெட் ரசிகரும் நீண்டகாலத்துக்கு பிறகு நடைபெறும் இந்த போட்டியை காண மிக ஆர்வத்துடன் காத்திருப்பார். அதன்படி பார்த்தால் டிவி ரசிகர்கள் மத்தியில் இது வரவேற்பை பெறும் என்று சொல்லலாம் என முடிக்கிறார் முகேஷ் சுப்ரமணியன்.
பிற செய்திகள்:
- கொரோனா காலத்தில் பள்ளியை கைவிட்டவர்களுக்கு நடிகர் சூர்யா அழைப்பு - புதிய காணொளி
- 'பிரதமர் மயில்களுடன் பிசியாக இருக்கிறார்' - மோதியை விமர்சிக்கும் ராகுல் காந்தி
- டிக்டாக்கை வாங்கும் முயற்சி: கடைசி நேரத்தில் மைக்ரோசாஃப்ட் தோல்வி
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: கேள்வி நேரம் என்றால் என்ன?
- ஜப்பான் மக்களின் வெற்றியின் ரகசியம்: 'இக்கிகை' தத்துவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












