ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 போட்டிகள் தொடங்க இன்னும் நான்கு வாரங்களே எஞ்சிய நிலையில், சென்னை சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ஒரு வீரர் மற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் 2020 போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்த போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இந்தியாவில் உள்ள 8 ஐபிஎல் அணிகள், கடந்த 21ஆம் தேதி துபைக்கு சென்றன. அங்குள்ள விடுதியில் அந்த அணிகளின் வீரர்களும், ஊழியர்களும் தங்கியுள்ளனர்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு துபைக்கு வந்ததால் அந்த நாட்டு கொரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி அவர்கள் ஒரு வார காலத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீங்கலாக மற்ற ஐபிஎல் அணிகள் ஒரு வார தனிமைப்படுத்தல் நடைமுறையை முடித்துக் கொண்டு பயிற்சியை தொடங்கியுள்ளன.

ஆனால், சிஎஸ்கே அணி மட்டும் செப்டம்பர் 1ஆம் தேதிவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நீட்டித்துக் கொண்டது. இது தொடர்பான சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், அணியில் இருக்கும் ஒரு வேகப்பந்து வீச்சாளர், துணைக்குழுவினருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விளையாட்டு செய்திகளை வழங்கும் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் செய்தி வெளியானது.

மேலும், வைரஸ் கண்டறியப்பட்டவர்கள் வேறு விடுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளதாக அந்த இணையதளம் கூறுகிறது.

இதனாலேயே செப்டம்பர் 1ஆம் தேதிவரை துபையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்ட சிஎஸ்கே அணியின் பயிற்சி காலத்தை மேலும் தள்ளிவைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

துபையில் கொரோனா தடுப்பு விதிகளின்படி, வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்தவர்கள் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வைரஸ் அறிகுறியில்லாவிட்டால் பிசிஆர் மறுபரிசோதனைக்கு பிறகு நெகட்டிவ் சான்றிதழ் பெற்று, மற்ற அணியுடன் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அட்டவணைப்படி ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும். ஆனால், இறுதி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில், ஆர்சிபி அணியைச் சேர்ந்த விராட் கோஹ்லியும் அந்த அணி வீரர்களும் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு பிறகு பொழுதைக்கழிக்கும் படங்கள், அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபை, அபு தாபி, ஷார்ஷா ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2014இல் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடந்த மக்களவைத் தேர்தல் காரணமாக, பகுதியளவு மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, அந்த போட்டியை ஐசிசி கடந்த வாதம் தள்ளிவைத்து. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: