ஐபிஎல் 2020: முழு பலத்தில் சிஎஸ்கே, மும்பை அணிகள் - மற்ற அணிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Chennai Super Kings / Twitter
- எழுதியவர், பராக் பதக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13 வது பதிப்பு தொடங்க உள்ளது. இந்த சீசன் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக, அதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. போட்டி நடைபெறும் இடமும் மாற்றப்பட்டது.
இந்த தொடர் முழுமையாக ரத்து செய்யப்படக்கூடும் என்ற அச்சம் ஒரு சமயத்தில் இருந்தது. ஆனால், பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள், செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது. அதன் இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொண்டு பார்த்தால், அரங்கத்தில் பார்வையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
முன்னதாக 2009ஆம் ஆண்டில், பொதுத்தேர்தல் காரணமாக , தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2014 ஆம் ஆண்டிலும் தேர்தல் காரணமாக, போட்டியின் முதல் பகுதி , ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது.
இந்த ஆண்டின் போட்டிகள் ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபையில் நடைபெறும். மொத்தம் 8 அணிகள் , இரண்டு முறை ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018)
இது மகேந்திர சிங் தோனியின் அணி. எம்.எஸ் தோனி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை அவர் வெளியிட்டார். கேப்டன் கூல், வெள்ளை பந்து கிரிக்கெட் என அழைக்கப்படும் டி20, ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த ஃபினிஷராக இவர் கருதப்படுகிறார். டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபியில், அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
எம்.எஸ்.தோனி ஆரம்பத்தில் இருந்தே சி.எஸ்.கே கேப்டனாக இருந்து அணிக்கு மூன்று முறை பட்டத்தை பெற்றுத் தந்துள்ளார். தோனியின் ஓய்வு அறிவிப்புடன், அவரது ஆற்றல் முழுவதும் இப்போது ஐபிஎல் பட்டத்தை வெல்வதில் இருக்கும்.
சிஎஸ்கே அணி, டேட்ஸ் ஆர்மி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதில் உள்ள வீரர்களின் சராசரி வயது 32 ஆண்டுகள் ஆகும்.
டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர், ஃபாஃப் டு பிளெசிஸ் போன்ற அதிரடி வீரர்கள் சிஎஸ்கே யில் உள்ளனர். ஆல் ரவுண்டர் சாம் குரைன், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ஆகியோர் மீது இந்த அணி பணம் முதலீடு செய்துள்ளது.
மெதுவான ஆடுகளங்களில், சென்னை சுழல் பந்து வீச்சாளர்களின் தாக்குதல், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியதாக இருக்கலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான் அணி (யு19) வீரராக தனது பயணத்தை ஆரம்பித்து, உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆக விஸ்வரூபம் எடுத்துள்ள விராட் கோலி , ஆர்சிபி-க்காக 12 சீசன்களிலும் விளையாடியுள்ளார்.

பட மூலாதாரம், Royal Challengers Banglaore / Twitter
விராட் கோலி மற்றும் ஏ.பி .டிவில்லியர்ஸ், இந்த அணியின் இரண்டு தூண்கள். இது தவிர, வலுவான மட்டைவீச்சாளர் ஆரோன் பிஞ்ச் மற்றும் பந்து வீச்சாளர் கென் ரிச்சர்ட்சன் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மாரிஸ் மீதும் அணி, நம்பிக்கை வைத்துள்ளது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி, வேகப்பந்து வீச்சின் மும்மூர்த்திகள். யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் பவன் நேகி ஆகியோரும் சுழல் ஆடுகளங்களில் முக்கிய பங்கு வகிக்க முடியும். ஆர்சிபி, மற்ற பேட்ஸ்மேன்களிடமும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
ஒரு குழுவாக விளையாடி வெல்ல இயலாதது, ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பிரச்னையாக உள்ளது., இந்த அணியின் பிரச்னையாக உள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கே.எல்.ராகுல் ,கேப்டன், கீப்பர் மற்றும் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார். அவருக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. கிறிஸ் கெய்ல் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இந்த அணி மிகவும் ஆபத்தான ஜோடியைக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Kings XI Punjab / Twitter
இருவருக்கும் ஒரு சில ஓவர்களில் ஆட்டத்தை மாற்றக்கூடிய திறன் உள்ளது. தனது முதல் பட்டத்திற்காக போராடும் இந்த அணியில், ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டன் கோட்ரெல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி முன்னிலை வகிப்பார்.
மாயங்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங் ஆகியோரும் வலுவான ஆதரவை வழங்க முடியும். ரவி பிஷ்னோய், இஷான் பொரெல் போன்ற யு 19 நட்சத்திரங்களும் தங்கள் திறமையைக் காட்ட ஆர்வமாக இருப்பார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் சுழற்பந்து வீச்சை ஆதரிக்கும் பிட்ச்களில், முஜிப் உர் ரஹ்மான், தன் கூர்மையான திறமையை நிரூபிக்க முடியும்.
இந்த அணியின் புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளே உள்ளார். மேலும் இந்த அணி பட்டத்தை வெல்வதற்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவருபவராகவும் அவர் இருக்கக்கூடும்.
டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், Delhi capitals / Twitter
புதிய பெயர் மற்றும் புதிய சிந்தனையுடன், டெல்லி காபிடல்ஸ், கடந்த ஒரு வருடத்தில் அதிரடியாக முன்னேறியுள்ளது. அணி, பிளே ஆஃப் ஐ அடைந்துள்ளது. இந்த முறை டெல்லியின் பிரச்சனை வேறுவிதமானது.
ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ப்ரித்வி ஷா, ரிஷப் பந்த் போன்ற ஜாம்பவான்கள் அதனிடம் உள்ளனர். இப்போது அஜிங்க்யா ரஹானே, ஹெட்மயர் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் அணியில் வந்துள்ளனர்.
அத்தகைய சூழ்நிலையில், யாரை விளையாட வைக்க வேண்டும், யாரை வேண்டாம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ககிசோ ரபாடா ஒரு முக்கியமான காரணியாக இருப்பார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் முழு போட்டியின் தோற்றத்தையும் மாற்றும் திறனைக் கொண்டுள்ளனர்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி , தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இஷாந்த் சர்மா, மோஹித் சர்மா, அக்ஸர் பட்டேல் ஆகியோரும் இந்த அணியில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012, 2014)

பட மூலாதாரம், Kolkatta Knight Riders / Twitter
ஷாருக் கானின் அணியில் இந்த முறை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸும் இருப்பார். ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்த வேகப்பந்து வீச்சாளர். கொரோனா முடக்கத்துக்கு பிறகு, தனது விக்கெட் பசியைப் தீர்த்துக்கொள்ள ஆவலாக இருப்பார். இந்த அணியை தினேஷ் கார்த்திக் வழிநடத்துவார்.
ஆந்த்ரே ரஸல் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் மீது அனைவரின் கண்களும் இருக்கும். சுனில் நாராயண் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் யுஏஇ ஆடுகளங்களில் தங்கள் கைவரிசையைக்காட்ட முயற்சிப்பார்கள்.
உலகக் கோப்பை வென்ற கேப்டன் இயான் மோர்கன் மற்றும் இளைஞரான டாம் பான்டன் ஆகியோரை கேகேஆர் வாங்கியுள்ளது. கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, பிரசித்த கிருஷ்ணா ஆகியோரும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள். லோகி ஃபெர்குசனும் தனது தெறிக்கவைக்கும் பந்துவீச்சுத் திறமையை நிரூபிக்க முடியும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016)
இந்த ஆரஞ்சு அணி, போட்டியில் விளையாடும் மிகவும் சீரான அணிகளில் ஒன்றாகும். டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் அட்டகாசமான தொடக்க இணை. கேன் வில்லியம்சன் அணிக்கு ஆழம் தருகிறார்.

பட மூலாதாரம், Sunrisers Hyderabad / Twitter
மனீஷ் பாண்டே , சிக்கலான நேரத்தில் வெற்றியை தேடித்தரும் வீரராக இருக்கமுடியும். ஆப்கானிஸ்தானின் முகமது நபி, ரஷீத் கான் ஆகியோரும் எதிர் அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். அவருக்கு ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய அனுபவம் உண்டு.
புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு உத்வேகம் கொடுப்பார்கள்.
ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தனது திறமையால், டீம் இந்தியாவின் தேர்வாளர்களை ஈர்க்க முடியும். சன்ரைசர்ஸ் , யு 19 இல் சிறப்பாக விளையாடிய சில இளம் வீரர்களையும் ஏலத்தில் தேர்வு செய்துள்ளது.
மும்பை இண்டியன்ஸ் (2013, 2015, 2017, 2019)
ஐபிஎல்லின் அதிக பட்டங்களை வென்ற அணி இது. ரோஹித் சர்மா காயமடைந்த பிறகு மீண்டும் தனது ஆட்ட வலுவை நிரூபிப்பார்.

பட மூலாதாரம், Mumbai Indians / Twitter
சமீபத்தில் தந்தையான ஹார்திக் பாண்ட்யா, தனது சகோதரர் க்ருணால் பாண்ட்யாவுடன் இணைந்து , இந்த அணிக்கு பலம் சேர்ப்பார். கெரன் பொல்லார்ட் மும்பை இண்டியன்ஸின் வலுவான வீரர்.
மேலும், லசித் மலிங்கா, ட்ரெண்ட் போல்ட், மிட்செல் மெக்லிங்கன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மும்பை இண்டியன்ஸின் தாக்குதலுக்கு உத்வேகம் அளிப்பார்கள். மும்பை அணி, ஆஸ்திரேலியாவின் ஆபத்தான பேட்ஸ்மேன் கிறிஸ் லின் மற்றும் ஆல்ரவுண்டர் நைட்டன் குல்டர் நீல் ஆகியோரை தேர்வு செய்துள்ளது.
ராகுல் சஹர் கடந்த ஆண்டு தனது அற்புதமான ஆட்டத்தை காட்சிப்படுத்தினார். தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக், அணியில் தனது இருப்பை உறுதிப்படுத்துவார். உள்நாட்டு கிரிக்கெட்டில், சூர்ய குமார் யாதவ் பல ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசன் சூர்யாவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கக்கூடும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (2008)
பரிசோதனைகளுக்கு பெயர் பெற்ற இந்த அணியின் நிர்வாகம் , அவ்வளவாக பிரபலமாகாத வீரர்களை நாட தயங்கவில்லை.
உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த அணியின் மிகப்பெரிய ஆயுதம். சிறந்த பேட்டிங், விக்கெட் எடுக்கும் திறன் மற்றும் அபாரமான பீல்டிங் மூலம் அவர் எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர், எந்த பந்துவீச்சு தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டவர்கள்.
இந்த பதிப்பை, தனக்கு சாதகமாக பயன்படுத்த சஞ்சு சாம்சன் சிறந்த முயற்சியை மேற்கொள்வார். யு 19 உலகக் கோப்பை தொடரின் நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீதும் முக்கிய கவனம் இருக்கும். ரியான் பராக் தனது முக்கியத்துவத்தை நிரூபிக்க முடியும். டேவிட் மில்லரும் அணிக்கு உதவுவார். ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் சிறந்த வேகப்பந்து வீச்சும், ராஜஸ்தான் அணியிடம் உள்ளது.
பிற செய்திகள்:
- எஸ்.பி.பி உடல்நிலை: மகன் எஸ்.பி. சரண் வெளியிடும் நற்செய்தி
- பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்த தடை
- நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக எம்.பி.க்கள்
- "ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவத்துக்கு முன்பே போலீசால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்"
- நாடாளுமன்ற கேள்வி நேரம் என்றால் என்ன? அந்த முறை எப்போது தொடங்கியது?
- சாமிக்கண்ணு வின்சென்ட்: நீங்கள் இவரை அறிந்திருக்க வேண்டும் - ஏன் தெரியுமா?
- ”பி.எம்.கேர்ஸ் நிதியில் ஐந்தே நாளில் ரூ.3000 கோடிக்கும் மேல் குவிந்துள்ளது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












