எஸ்.பி.பி உடல்நிலை: 3 நாட்களில் வரும் தகவலுக்காக காத்திருக்கும் எஸ்.பி. சரண்

எஸ்பிபி

பட மூலாதாரம், SPB/ FACEBOOK

கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மருத்துவ ரீதியாக மேம்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அந்த மருத்துவமனை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், தொடர்ந்து எஸ்.பி.பி நினைவுடனும், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பதாகவும் மருத்துவ ரீதியாக உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜிஎம்

பட மூலாதாரம், எம்ஜிஎம் மருத்துவமனை

இதற்கிடையே, எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளியில், "நான்காவது நாளாக என் தந்தையின் உடல்நிலை ஏற்றஇறக்கமின்றி இருக்கிறது. கடவுளின் அருளால் இவ்வார இறுதியில், வரும் திங்கட்கிழமையன்று நல்ல செய்தி கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சேர்க்கப்பட்டார். அப்போது தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு காணொளியை அவர் வெளியிட்டார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டது.

செப்டம்பர் 3ஆம் தேதி, அவரது உடல்நலம் குறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில், அவர் நினைவுடன் இருப்பதாகவும் மருத்துவ ரீதியாக அவரது உடல்நலம் மேம்பட்டுவருவதாகவும் கூறப்பட்டது. அவரது உடல்நிலை தொடர்பான விவரங்களை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண் அவ்வப்போது காணொளியாக வெளியிட்டு வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: