நட்பு நாடுகளுக்கு மறக்க முடியாத நெருக்கடியைக் கொடுத்த டிரம்ப்: பதற்றத்தை தணித்தது யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பால் ஆடம்ஸ்
- பதவி, ராஜ்ஜீய செய்தியாளர்
கடந்த பதினைந்து நாட்களாக உலகில் என்ன நடந்தது?
இந்த மாத தொடக்கத்தில் வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையால் உற்சாகமடைந்த டொனால்ட் டிரம்ப் , கிரீன்லாந்து விவகாரத்தில் தனது ஆக்ரோஷமான பேச்சைத் தொடங்கினார்.
கிரீன்லாந்து மீதான உரிமை கோரல்கள், ராணுவ நடவடிக்கை குறித்த எச்சரிக்கைகள் மற்றும் ஐரோப்பாவின் பாரம்பரிய நட்பு நாடுகளுக்கு எதிரான வர்த்தக வரிகள் என உலகம் தினமும் ஒரு செய்தியை எதிர்கொண்டது.
ஆனால் இப்போது, இவை அனைத்தும் ஒரு புகையைப் போல மறைந்துவிட்டதாகத் தெரிகிறது.
டிரம்பை கையாள்வதில் வல்லவர் என்று கருதப்படும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, அதிபரின் இந்த ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிகிறது.
கடந்த வாரம் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கலாம்.
அந்தப் பயணத்தின் முடிவில், கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு "செயற்குழு" அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
வடக்கு அட்லான்டிக் கூட்டணியையே சிதைக்கக்கூடிய ஒரு சிக்கலை ரூட்டே மிக நுட்பமாக கையாண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த நிலையை அடைய ஏன் இரண்டு வார கால கடுமையான நெருக்கடி தேவைப்பட்டது என்று பலர் வியக்கிறார்கள்.
கிரீன்லாந்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு அதிகரிப்பதை தான் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக டென்மார்க் நீண்டகாலமாகவே கூறி வந்தது.
தற்போது நேட்டோ அந்தத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனது பாதுகாப்பை பலப்படுத்த உறுதி அளித்திருந்தால், அது நேட்டோ கூட்டணி இறுதியாக கிரீன்லாந்து மீது தகுந்த கவனம் செலுத்துகிறது என்று டொனால்ட் டிரம்பிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையும்.
நியூயார்க் டைம்ஸ் இதழ் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு புதிய திட்டம் விவாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.
அதன்படி, சைப்ரஸில் பிரிட்டன் வைத்திருக்கும் இறையாண்மை கொண்ட ராணுவத் தளங்களைப் போலவே, கிரீன்லாந்தின் சில சிறிய பகுதிகளை அமெரிக்க ராணுவத் தளங்களை அமைப்பதற்காக டென்மார்க் விட்டுக் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிரீன்லாந்தின் கனிம வளங்களை அணுகுவதற்கான வாய்ப்புகளும் ஒப்பந்தத்தில் அடங்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், டென்மார்க்கோ அல்லது நேட்டோ அமைப்போ இந்தத் தகவலையோ அல்லது பிற செய்திகளையோ உறுதிப்படுத்தவில்லை.

நேட்டோ அமைப்பு இது குறித்து கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் "ஏழு ஆர்க்டிக் நட்பு நாடுகளின் (அமெரிக்கா, கனடா, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து) கூட்டு முயற்சிகளின் மூலம் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும்" என்றும், கிரீன்லாந்தில் ரஷ்யா மற்றும் சீனா பொருளாதார ரீதியாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ கால்பதிப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும்.
ஆனால், இந்த நிலையை எட்டுவதற்கு டொனால்ட் டிரம்ப் பதினைந்து நாட்கள் நீடித்த நாடகத்தையும், நேட்டோவிற்குள் ஒரு இருத்தலியல் நெருக்கடியையும் தூண்டினார் என்பதை எளிதில் மறந்துவிட முடியாது.
கனடா பிரதமர் மார்க் கார்னி இதை ஒரு "பிளவு" என்று அழைத்ததுடன், பழைய ஒழுங்குமுறை "மீண்டும் வராது" என்றும் கூறினார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இது ஒரு "நில அதிர்வு போன்ற மாற்றம்" என்று குறிப்பிட்டதுடன், ஐரோப்பா அதிக சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வழக்கம் போல அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்புவது என்பது தற்போது கடினமாகவே தெரிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












