கிரீன்லாந்து விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்: ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்த செய்தி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பெர்ண்ட் டெபுஸ்மன் ஜூனியர்
- பதவி, வெள்ளை மாளிகை செய்தியாளர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தொடர்பாக ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகக் கூறினார். இதற்கு முன், அந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்றும் அவரது திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிக்கத் திட்டமிட்டிருந்ததை அவர் கைவிட்டுள்ளார். இது நேட்டோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகான முடிவாகும்.
சமூக ஊடகங்களில், நேட்டோவுடன் நடைபெற்ற 'மிகவும் பயனுள்ள சந்திப்பு' கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பகுதிகளை உள்ளடக்கிய சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்புக்கு வழிவகுத்ததாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அவர் அதிக விவரங்களை வெளியிடவில்லை.
நேட்டோவும் அந்த சந்திப்பை மிகவும் பயனுள்ளது என்று கூறியிருக்கிறது. டிரம்ப் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பு குறித்த விவாதங்கள், ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதையே மையமாகக் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தது.
இதற்கு முன், உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) பேசிய டிரம்ப், ராணுவ வலிமையை பயன்படுத்தப்போவதில்லை என்றும், அந்தப் பகுதியின் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புவதாகவும் கூறினார்.
புதன்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர், "கிரீன்லாந்து மட்டுமல்ல, உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்தையும் பொருத்தவரை, எதிர்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம். இந்தத் தீர்வு நடைமுறைக்கு வந்தால், அது அமெரிக்க ஒன்றியத்திற்கும், நேட்டோவின் அனைத்து நாடுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறினார்.
இந்த முன்மொழிவில் தன்னாட்சி கொண்ட டென்மார்க்கின் சார்பு பிரதேசமான கிரீன்லாந்தின் உரிமை அமெரிக்காவுக்கு உட்படுமா என்பதை அவர் தெளிவாக கூறவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தில் கனிம வளங்களுக்கான உரிமைகள் இடம்பெறக்கூடும் என்று ஒரு அமெரிக்க கேபிள் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்தார்.
"பேச்சுவார்த்தைகள் முன்னேறும் போதெல்லாம் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும்" என்றும் டிரம்ப் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.
பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃபும் நேரடியாக எனக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசன் வெளியிட்ட அறிக்கையில், "இந்த நாள் தொடங்கியதை விட, முடியும்போது நல்ல நிலைப்பாட்டோடு முடிவடைகிறது" என்று கூறினார்.
மேலும், "இப்போது நாம் அமர்ந்து, டென்மார்க் அரசாட்சியின் (Kingdom of Denmark) சிவப்புக் கோடுகளை மதிக்கும் விதத்தில், ஆர்க்டிக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு கவலைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை கண்டறிவோம்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பின்னர் சில மணி நேரங்களில் கூடுதல் விவரங்கள் வெளிவந்தன.
சிஎன்பிசி தொலைக்காட்சியிடம் பேசிய டிரம்ப், இந்த சாத்தியமான ஒப்பந்தம் என்றென்றைக்கும்" நீடிக்கக்கூடும் என்றும், அதில் கனிம வளங்களுக்கான உரிமைகள் மற்றும் திட்டமிடப்பட்ட 'கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு' இடம்பெறக்கூடும் என்றும் கூறினார். இந்த அமைப்பு, நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க, நிலம், கடல் மற்றும் விண்வெளி முழுவதும் பரவிய தடுப்பு ஏவுகணைகள் மற்றும் கண்டறியும் அமைப்புகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு கவசமாக உருவாக்கப்பட உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் சிஎன்என்-க்கு பேசிய டிரம்ப், கிரீன்லாந்து தொடர்பான ஒப்பந்தத்தின் கட்டமைப்பு "மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது" என்றும், அது "நமக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத் தருகிறது" என்றும், குறிப்பாக "உண்மையான தேசிய பாதுகாப்பும் சர்வதேச பாதுகாப்பும்" கிடைக்கும் என்றும் கூறினார்.
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, டிரம்புடன் நடைபெற்ற சந்திப்பில் கிரீன்லாந்து மீது டென்மார்க்கின் இறையாண்மை தொடர்பான முக்கிய விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அவர், "இன்றிரவு அதிபருடன் நடைபெற்ற எனது உரையாடல்களில் அந்த விஷயம் இனி பேசப்படவில்லை" என்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.
இதற்கு முன், கிரீன்லாந்தை குத்தகைக்கு எடுக்கும் யோசனையை டிரம்ப் நிராகரித்திருந்தார். "நீங்கள் உரிமையையே பாதுகாப்பீர்கள். குத்தகைகளைப் பாதுகாப்பதில்லை" என்று அவர் கூறியிருந்தார்.
கிரீன்லாந்தின் மூலோபாய முக்கியத்துவம் மட்டுமல்லாமல், அங்குள்ள மிகப்பெரிய - இன்னும் பெரிதும் பயன்படுத்தப்படாத - அரிய நிலக்கனிம வளங்களையும் டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இவற்றில் பல, மொபைல் போன்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுக்கு மிக முக்கியமானவை.
அந்த சந்திப்பின் போது டிரம்பும் ருட்டேயும் அமெரிக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளுக்கும் ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை விவாதித்ததாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஆலிசன் ஹார்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் மேலும், "அதிபர் குறிப்பிட்டுள்ள அந்த கட்டமைப்பு தொடர்பான நேட்டோ நட்பு நாடுகளின் விவாதங்கள், குறிப்பாக ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஏழு நேட்டோ நாடுகளின் கூட்டு முயற்சிகளின் மூலம் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதையே மையமாகக் கொண்டிருக்கும்" என்றும் கூறினார்.
"டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள், ரஷ்யா மற்றும் சீனா பொருளாதார ரீதியாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ கிரீன்லாந்தில் ஒருபோதும் கால் வைக்காமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு தொடரும்" என்றும் தெரிவித்தார்.
நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் தகவலின்படி, இந்த சாத்தியமான திட்டத்தின் கீழ், அமெரிக்காவுக்கு அந்தப் பிரதேசத்தில் சில சிறிய நிலப்பகுதிகளின் உரிமை வழங்கப்படலாம். அங்கு அமெரிக்க ராணுவ தளங்கள் அமைக்கப்படக்கூடும்.

புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், இந்த முன்மொழியப்பட்ட ஏற்பாடு, பிரிட்டிஷ் வெளிநாட்டு பிரதேசங்களின் ஒரு பகுதியாக உள்ள சைப்ரஸில் அமைந்துள்ள ராணுவ தளங்களைப் போன்றதாக இருக்கும் என்று அந்தப் பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
டென்மார்க்குடன் உள்ள தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ், அமெரிக்கா விரும்பும் அளவிற்கு படைகளை கிரீன்லாந்துக்கு அனுப்ப முடியும். அந்தப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள தளத்தில், ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அமெரிக்கா நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு கிடைக்கும் வரை, பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் எந்தப் பொருளாக இருந்தாலும் அனைத்துக்கும் பிப்ரவரி 1 முதல் 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் முன்பு கூறியிருந்தார். இந்த வரி, ஜூன் 1 முதல் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதே விதிமுறை டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கும் பொருந்தும். இந்நாடுகள் அனைத்தும் 1949-ல் நிறுவப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவின் உறுப்பினர்கள் ஆகும்.
புதன்கிழமை டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்காக உடனடி பேச்சுவார்த்தைகளை நாடி வருவதாகக் கூறினார். ஆனால், அந்தப் பிரதேசத்தை ராணுவ வலிமையால் கைப்பற்ற மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"நான் வலிமையை பயன்படுத்த முடிவு செய்யாதபட்சத்தில், நமக்கு எதுவும் கிடைக்காமல் போகலாம். அப்படி செய்தால் நம்மை யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாம் அதை செய்ய மாட்டோம்," என்று டிரம்ப் கூறினார்.
மேலும், "எனக்கு வலிமையை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் அதை பயன்படுத்த விரும்பவில்லை. நான் வலிமையை பயன்படுத்த மாட்டேன்" என்றும் அவர் கூறினார்.
மேலும், உலகத் தலைவர்களிடம் டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவுக்கு ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். "நீங்கள் 'ஆம்' என்று சொன்னால், நாங்கள் மிகவும் நன்றியுடன் இருப்போம். அல்லது 'இல்லை' என்று சொன்னால், அதை நாங்கள் நினைவில் வைத்திருப்போம்" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு ஒரு நாள் முன்பு டாவோஸில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், இறக்குமதி வரிகள் விதிப்பது குறித்த டிரம்பின் முந்தைய அச்சுறுத்தலை விமர்சித்திருந்தார்.
அமெரிக்காவிலிருந்து "முடிவில்லாத புதிய வரிகள் சேர்க்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியவர்களில் மக்ரோங்-கும் ஒருவர்.
தன் உரையில், டிரம்ப் மக்ரோங்-ஐ கடுமையாக விமர்சித்து, பிரான்ஸ் பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது என்று கூறினார்.
அமெரிக்க அதிபர், கனடா பிரதமர் மார்க் கார்னியையும் விமர்சித்தார். ஒரு நாள் முன்பு டாவோஸில் உரையாற்றிய கார்னி, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் கனடா போன்ற "நடுத்தர சக்தி" நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த டிரம்ப், கார்னி அமெரிக்காவுக்கு நன்றியற்றவர் என்று குற்றம்சாட்டினார்.
"அமெரிக்கா இருப்பதால்தான் கனடா உயிர் வாழ்கிறது," என்று டிரம்ப் கூறினார்.
"மார்க், அடுத்த முறை இப்படிப் பேச்சு பேசும்போது இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












