'உயிருடன் இருக்கிறீர்களா' என்பதை உறுதிப்படுத்தும் செயலி - இது எப்படி இயங்குகிறது?

சீனா, செயலி, வாழ்வியல், தொழில்நுட்பம், துணை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஸ்டீபன் மெக்டோனல்
    • பதவி, சீன செய்தியாளர்

சீனாவில் "ஆர் யூ டெட்?" என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள ஒரு புதிய செயலி அந்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் செயல்முறை மிகவும் எளிமையானது. நீங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்தச் செயலியிலுள்ள ஒரு பெரிய பொத்தானை அழுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், நீங்கள் ஏதோ ஆபத்தில் இருப்பதை உங்கள் அவசர காலத் தொடர்பு எண்களுக்கு தானாகவே தகவல் தெரிவித்துவிடும்.

கடந்த ஆண்டு மே மாதம் பெரிய ஆரவாரமின்றி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீன நகரங்களில் தனியாக வசிக்கும் ஏராளமான இளைஞர்கள் தற்போது இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

இது, அந்த நாட்டியிலேயே அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டணச் செயலியாக உருவெடுத்துள்ளது.

சீனாவின் அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' அறிக்கையில், ஆய்வு நிறுவனங்களின் கணிப்புப்படி 2030-ஆம் ஆண்டிற்குள் சீனாவில் தனியாக வசிப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியை எட்டக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, செயலி, வாழ்வியல், தொழில்நுட்பம், துணை

பட மூலாதாரம், Screenshot/Moonshot Technologies

படக்குறிப்பு, நீங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த, தினமும் ஒரு பெரிய பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும் என்று இந்த செயலி கோருகிறது.

'பாதுகாப்புத் துணை'

தன்னை ஒரு 'பாதுகாப்புத் துணையாக' வர்ணித்துக் கொள்ளும் இந்தச் செயலி, தனிமையில் பணிபுரியும் ஊழியர்கள், வீட்டை விட்டு வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அல்லது தனிமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தவர்களையே தனது இலக்காகக் கொண்டுள்ளது.

"வாழ்வின் எந்தக் கட்டத்திலும் தனியாக வசிப்பவர்கள், இன்ட்ரோவர்ட்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், வேலையில்லாதவர்கள் போன்ற ஒவ்வொருவருக்கும் இது மிகவும் அவசியமானது," என சீன சமூக வலைத்தளத்தில் ஒரு பயனர் தெரிவித்தார்.

"தனியாக வசிப்பவர்கள் யாராலும் கவனிக்கப்படாமல், உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் இறந்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. ஒருவேளை நான் தனிமையில் இறந்தால், எனது உடலை யார் எடுப்பார்கள்? என்றும் சில நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு" என்று மற்றொரு பயனர் தெரிவித்தார்.

தனது குடும்பம் வாழும் பகுதியிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் வசிக்கும் 38 வயதான வில்சன் ஹூ, இந்த காரணத்திற்காக தான் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்ததாகக் கூறுகிறார்.

தலைநகர் பெய்ஜிங்கில் பணிபுரியும் இவர், வாரத்திற்கு இரண்டு முறை தனது மனைவி மற்றும் குழந்தையைப் பார்க்க வீட்டிற்குச் செல்கிறார். ஆனால் தற்போது ஒரு திட்டப் பணிக்காக அவர்களை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியுள்ளதாகவும், பெரும்பாலும் வேலை செய்யும் இடத்திலேயே தங்கிக் கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

"எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், நான் வாடகைக்கு இருக்கும் இடத்திலேயே யாருக்கும் தெரியாமல் தனிமையில் இறந்துவிடுவேனோ என்று நான் கவலைப்படுகிறேன்," என்று அவர் கூறினார். "அதனால்தான் நான் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, எனது அம்மாவை அவசர காலத் தொடர்பு நபராக வைத்துள்ளேன்."

இந்தச் செயலியை பற்றி சில எதிர்மறையான கருத்துக்களும் பரவி வருவதால், இது தடை செய்யப்படலாம் என்று அஞ்சி, அது வெளியான உடனேயே தான் இதைப் பதிவிறக்கம் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் செயலியின் பெயரை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர் - இதில் பதிவு செய்வது துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மற்றவர்கள் இதன் பெயரை 'ஆர் யூ ஓகே?' அல்லது 'ஹவ் ஆர் யூ?' என்பது போன்ற நேர்மறையான அர்த்தம் தரும் வகையில் மாற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

இந்தச் செயலியின் வெற்றிக்கு அதன் பெயரும் ஒரு முக்கியக் காரணம் என்றாலும், இதன் பின்னணியில் உள்ள மூன்ஸ்கேப் டெக்னாலஜிஸ் நிறுவனம், தற்போது எழுந்துள்ள விமர்சனங்களைக் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், பெயரில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்துப் பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சீனா, செயலி, வாழ்வியல், தொழில்நுட்பம், துணை

பட மூலாதாரம், Screenshot/Moonshot Technologies

படக்குறிப்பு, நியமிக்கப்பட்ட அவசர தொடர்பு எண்ணுக்கு இது போன்ற எச்சரிக்கைகளை செயலி அனுப்புகிறது.

'சிறந்த கட்டண பயன்பாட்டுச் செயலிகளில் ஒன்று'

சர்வதேச அளவில் 'டிமுமு' என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தச் செயலி, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் முதல் இரண்டு இடங்களுக்குள்ளும், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினில் முதல் நான்கு இடங்களுக்குள்ளும் சிறந்த 'கட்டண பயன்பாட்டுச் செயலிகளில்' தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் சீனப் பயனர்களே இதன் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

'ஆர் யூ டெட்?' செயலியின் நிறுவனர்களைப் பற்றி மிகக் குறைந்த தகவல்களே அறியப்படுகின்றன. ஆனால், அவர்கள் 1995-ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்த மூன்று பேர் என்றும், ஹெனான் மாகாணத்திலுள்ள செங்ஜோ நகரிலிருந்து ஒரு சிறிய குழுவுடன் இணைந்து இந்தச் செயலியை உருவாக்கியதாகவும் கூறுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தச் செயலியின் மதிப்பு தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இதன் நிறுவனர்களில் ஒருவரான குவோ என்பவர் சீன ஊடகத்திடம் கூறுகையில், நிறுவனத்தின் 10% பங்குகளை பத்து லட்சம் யுவானுக்கு விற்று நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் செயலியை உருவாக்க அவர்கள் செலவிட்டதாகக் கூறும் 1,000 யுவானை விட இது பலமடங்கு அதிகம்.

அவர்கள் தங்களின் பயனாளர்களை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பதால், முதியவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய தயாரிப்பு ஒன்றைக் கொண்டுவரும் யோசனையை அவர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை அவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதன் அறிகுறியாக, கடந்த வார இறுதியில் ஒரு பதிவை வெளியிட்டனர். அதில், "வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும், அவர்களுக்கு அதிக அக்கறையளிக்கவும் நாங்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்கும் கனவுகள் உண்டு, வாழ்வதற்குப் போராடுகிறார்கள்; அவர்கள் கவனிக்கப்படவும், மதிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் தகுதியானவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பிபிசியின் கேள்விகளுக்கு அந்நிறுவனம் இதுவரை எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு