'இந்தியாவின் வைரமாக போற்றப்பட்ட ஏ.ஆர் ரஹ்மான் இன்று துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்' – ஒரு பார்வை

ஒரு நாள் இந்தியாவின் பெருமை என்றும் மறுநாள் துரோகி என்றும் முத்திரை குத்தப்படும் ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முகமது ஹனீஃப்
    • பதவி, மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்

ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியதற்காக இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக்கொள்வோம் என்று ஏ.ஆர். ரஹ்மான் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரு காலத்தில் அவர் இந்தியாவின் வைரமாக போற்றப்பட்டார். உலகம் முழுவதும் அவரைப் பற்றி பேசப்பட்டது.

பிலிம்பேர், தேசிய விருதுகள், கோல்டன் குளோப், ஆஸ்கார் என நீங்கள் எந்த விருதைப் பற்றிக் கூறினாலும், அவை எல்லாம் அவரைத் தேடி வந்த காலம் இருந்தது.

இந்தியாவின் அடையாளமாக ஏ.ஆர். ரஹ்மான் திகழ்ந்தார். உலகம் முழுவதும் தனது இசையை ஒலிக்கச் செய்து, மக்களை நடனமாட வைத்தார். பின்னர் 'தாய் மண்ணே வணக்கம்' பாடி உலகெங்கும் இந்தியாவின் கொடியை ஏற்றினார்.

அந்த நேர்காணலில், பாலிவுட்டின் அதிகாரப் போக்கு மாறிவிட்டதாகவும், தற்போது தன்னிடம் வரும் பணிகள் குறைந்துவிட்டதாகவும் ரஹ்மான் கூறினார். இதற்குக் காரணம் மதவாதமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்போது அனைவரும் அவரைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர். 'வளர்த்துவிட்ட கையை கடிக்கிறீர்கள்' எனக் கூறுகிறார்கள். அவருக்கு 'துரோகி' என்ற முத்திரையும் குத்தப்பட்டது.

ஏ.ஆர். ரஹ்மான் விளக்கமும் அளித்துவிட்டார். இருந்தும் 'இந்தியாவைப் பிடிக்கவில்லை என்றால், நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என்று சொல்லும் குரல்கள் அடங்கவில்லை.

காணொளிக் குறிப்பு, "வேலையைத் தேடி நான் போக மாட்டேன்" - பிபிசியிடம் மனம்விட்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்

'பலர் கவனிக்கவில்லை'

ஆனால் அந்த நேர்காணலில் அவர் கூறிய இன்னொரு விஷயத்தை பலர் கவனிக்கவோ நினைவில் வைத்துக்கொள்ளவோ இல்லை.

ரஹ்மான் மும்பைக்கு வந்த காலத்தைப் பற்றி அதில் பேசியிருந்தார்.

மும்பைக்கு முதன்முறையாக வந்தபோது தனக்கு ஹிந்தி தெரியாது என்றும், தமிழர்களுக்கு ஹிந்தி கற்றுக்கொள்வது கடினம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் சுபாஷ் காய் சாஹிப் அவரிடம், 'இங்கு வேலை செய்ய விரும்பினால், ஹிந்தி கற்க வேண்டும்' என்று விளக்கியுள்ளார்.

ரஹ்மான், தான் ஹிந்தி கற்றது மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று உருது மொழியையும் கற்றேன் என கூறுகிறார். அதன்பிறகு, உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கானின் மிகப்பெரிய ரசிகராக இருந்ததால் பஞ்சாபி மொழியையும் கற்றதாகக் கூறுகிறார்.

இதைக் கேட்டபோது, இதுதான் ஒரு உண்மையான கலைஞனின் பண்பு என்று எனக்குத் தோன்றியது.

நாடுகளை ஒன்றிணைக்க இதுவே சரியான வழி என்று எனக்குத் தோன்றியது.

ரஹ்மான், தான் இந்தி கற்பது மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று உருது மொழியையும் கற்பேன் என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏ.ஆர். ரஹ்மான்

ஒவ்வொரு மனநிலைக்கும், ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும், ஒவ்வொரு துக்கத்திற்கும், ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும், ஒவ்வொரு இரங்கலுக்கும், ஒவ்வொரு சோகத்திற்கும் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் பாடல் இருக்கிறது. அது எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது.

மேலும், முன்பெல்லாம் கலைத் திறமை மிக்கவர்களால் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன, ஆனால் இப்போது எந்தத் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவுகள் பெரும் செல்வந்தர்களின் அலுவலக அறைகளிலும், கணக்காளர்களாலும் எடுக்கப்படுகின்றன என்று பாலிவுட் இயக்குநர்களான அனுராக் காஷ்யப், சுபாஷ் காய் மற்றும் ராம் கோபால் வர்மா போன்றவர்கள் கூறிய ஒரு கருத்தையும் ரஹ்மான் குறிப்பிட்டார்.

ஏ.ஆர். ரஹ்மான்

பாலிவுட்டில் ஒருவேளை மதவாதம் நுழைந்திருக்கலாம் என்றும், அரசியல், சமூகம் மற்றும் சொத்துச் சந்தை ஆகியவற்றில் அது நுழைந்திருக்கும்போது, பாலிவுட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நுழைந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் ரஹ்மான் கூறினார்.

அவரை நன்றிகெட்டவர் என்றும் துரோகி என்றும் அழைப்பவர்கள், "உங்கள் பெயர் அல்லா ரக்கா ரஹ்மான் என்பது எங்களுக்குத் தெரியும். 'வந்தே மாதரம்' பாட அனுமதித்ததற்கே நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இசையமைப்பதோடு வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். இவற்றைப் பற்றி பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?" என்று சொல்ல நினைக்கிறார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மறுபுறம், ஏ.ஆர். ரஹ்மான் முன்பிருந்தது போல இப்போது இல்லை, அவரது இசை சலிப்பைத் தருகிறது, அவரது பாடல்கள் ஹிட் ஆவதில்லை என்று சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

ஆனால் ரஹ்மானின் உழைப்பு குறையவில்லை.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் மிகப்பெரிய திரைப்படத்திற்கும், பல சர்வதேசத் திரைப்படங்களுக்கும் அவர்தான் இசையமைக்கிறார்.

'சம்கிலா' திரைப்படம் வெளியாகி அதிக காலம் ஆகவில்லை, அதற்கு ரஹ்மான்தான் இசையமைத்தார். அப்போது பஞ்சாபில் இருந்த ஒவ்வொருவரும் "மே ஹூன் பஞ்சாப், மே ஹூன் பஞ்சாப்" என்றுதான் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் யாரும், "நீங்கள் ஒரு தமிழர் தானே, ஏன் பஞ்சாபி படத்திற்கு இசையமைக்கிறீர்கள்?" என்று கேட்கவில்லை.

உங்களுக்கு "துரோகி, துரோகி" என்று கூச்சலிட வேண்டுமென்றால், தாராளமாகச் செய்யுங்கள்.

ஆனால் முதலில் ஒரு ஐந்து நிமிடம் அமைதி காத்து, ஏ.ஆர். ரஹ்மானின் ஏதோ ஒரு பாடலைக் கேளுங்கள். ஒவ்வொருவருக்கும் அவரது பாடல்களில் குறைந்தது ஒன்றாவது பிடித்திருக்கும். உங்களுக்கு அவரது ஒரு பாடல் கூடப் பிடிக்கவில்லை என்றால், பிறகு தாராளமாக உங்கள் வசைச்சொற்களை வீசுங்கள்.

இறைவன், ஏ.ஆர். ரஹ்மானையும் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு