போர் முதல் காதல் வரை: வரலாற்றில் காற்றாடிகளின் பங்கு என்ன?

காத்தாடிகள் இப்போது ஒரு பொழுதுபோக்கு வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காத்தாடிகள் இப்போது ஒரு பொழுதுபோக்கு வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை ஒரு காலத்தில் போரிலும் பயன்படுத்தப்பட்டன.
    • எழுதியவர், ரௌனக் பைரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மகர சங்கராந்தி அல்லது உத்தராயணம் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றாடி விடுவது உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது, இதனால் வானமே வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.

காற்றாடிகள் சுதந்திரமாகப் பறப்பது முதல் அவற்றைக் கட்டுப்படுத்தும் நூல் வரை, கவிஞர்கள் காற்றாடிகள் குறித்து ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளனர்.

மகர சங்கராந்தி ஒரு மத ரீதியான பண்டிகையாக இருந்தாலும், காற்றாடி விடுவது என்பது ஒரு பொதுவான நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நடைமுறை இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.

உலகின் பல நாடுகளிலும் இது ஒரு வழக்கமாக உள்ளது. ஆமதாபாத்தில் ஜனவரி 10 முதல் 14 வரை சர்வதேச காற்றாடி திருவிழா 2026 நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா, யுக்ரேன், இஸ்ரேல், ஜோர்டான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த 135 பட்டம் விடும் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

சிலி, கொலம்பியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து தலா ஆறு வீரர்கள் வீதம் அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன் பொருள், இந்தியாவில் இருப்பதைப் போலவே உலகின் பல நாடுகளிலும் காற்றாடி விடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது என்பது தெளிவாகிறது.

உலகப் போர்கள் முதல் விமானங்களின் வளர்ச்சி வரை அனைத்திலும் பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ​​பட்டம் ஒரு பொழுதுபோக்கு வடிவமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் காற்றாடிகள் முக்கியமானவை என்றும், அதனால் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டது என்றும் அதன் வரலாறு நமக்குச் சொல்கிறது.

உலகப் போர்கள் முதல் விமானங்களின் வளர்ச்சி வரை அனைத்திலும் பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ​​பட்டம் ஒரு பொழுதுபோக்கு வடிவமாக பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்தில், ஆமதாபாத்தில் நடந்த சர்வதேச பட்டம் விடும் விழாவில் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸும் பிரதமர் மோதியும் பட்டம் பறக்கவிட்டனர்.

காற்றாடி எங்கே உருவானது?

இன்று காற்றாடி விடுவது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், இது இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் தான் தோன்றியது.

அமெரிக்க கைட் ஃபிளையர்ஸ் அஸோசியேஷன் கூற்றுப்படி, பல அறிஞர்கள் காற்றாடிகள் சீனாவில் உருவானதாக நம்புகிறார்கள்.

இருப்பினும், மலேசியா, இந்தோனீசியா மற்றும் தெற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள மக்கள் இலைகள் மற்றும் நாணல் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு காற்றாடிகளை உருவாக்கி, அவற்றை மீன்பிடிக்கப் பயன்படுத்தியதற்கான சில சான்றுகளும் உள்ளன.

கி.மு. 450-ல், புகழ்பெற்ற சீன தத்துவஞானி மோஸி, மூன்று ஆண்டுகள் உழைத்து மரத்தினால் ஒரு பறவை போன்ற பொருளை உருவாக்கினார்.

அது ஒரு நூலால் கட்டப்பட்டு பறக்கவிடப்பட்டது. இதுவே முதல் காற்றாடி என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் இக்கருத்து விவாதத்திற்குரியதாக உள்ளது.

காற்றாடிகள் பற்றிய பழமையான எழுத்துப்பூர்வ சான்றுகள் கிமு 200 க்கு முந்தையவை என்றும், இது சீனாவில் காணப்படுவதாகவும் அமெரிக்க கைட் ஃபிளையர்ஸ் அஸோசியேஷன் அறிக்கை கூறுகிறது.

ஹான் வம்சத்தைச் சேர்ந்த தளபதி ஹான் சின், ஒரு நகரத்தைத் தாக்கும் போது அதன் சுவர்களுக்கு மேலே காற்றாடியைப் பறக்கவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சுவருக்கு அடியில் தனது படைகள் எவ்வளவு நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்ட வேண்டும் என்பதை அளவிட இந்தக் காற்றாடி அவருக்கு உதவியது.

13-ஆம் நூற்றாண்டில், சீன வணிகர்களின் மூலம் காற்றாடிகள் கொரியா, இந்தியா மற்றும் ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டன.

இருப்பினும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள மக்கள் தங்களுக்கே உரித்தான மாறுபட்ட காற்றாடிகளை உருவாக்கி, பல்வேறு தருணங்களில் அவற்றைப் பறக்கவிடத் தொடங்கினர்.

ஹான் வம்சத்தைச் சேர்ந்த தளபதி ஹான் சின், ஒரு நகரத்தைத் தாக்கும் போது அதன் சுவர்களுக்கு மேலே காத்தாடியைப் பறக்கவிட்டதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில், குஜராத் உட்பட பல மாநிலங்களில் மகர சங்கராந்தியின் போது பட்டம் பறக்கவிடப்படுகிறது.

இந்தியாவிற்கு காற்றாடிகள் எப்படி வந்தன?

தேசிய கைட் மந்த் அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் காற்றாடி பறக்கவிடும் வரலாறு முகலாயர் காலத்திலிருந்தே தொடங்குகிறது. இதற்குச் சான்றாக கி.பி. 1500-ஆம் ஆண்டைச் சேர்ந்த சிறிய அளவிலான ஓவியங்கள் உள்ளன.

இந்த ஓவியங்கள், ஒரு இளைஞன் காற்றாடியைப் பயன்படுத்தி தனது காதலிக்கு செய்தி அனுப்புவதை சித்தரிக்கின்றன. அக்காலத்தில் காதலி பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்ததால், காற்றாடி மூலமாக அவர் செய்திகளைப் பெற்றுக்கொண்டார்.

குஜராத் சுற்றுலாத் துறையின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, காற்றாடி முதன்முதலில் இஸ்லாமிய வணிகர்கள் அல்லது சீன பௌத்த யாத்ரீகர்களால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சீன யாத்ரீகர்கள் பௌத்தம் தொடர்பான நூல்களைத் தேடி இந்தியாவுக்கு வருவது வழக்கம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சந்தானம்பே என்ற இசைக்கலைஞர் தனது படைப்புகளில் காற்றாடிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்காலத்தைச் சேர்ந்த பல பழங்கால நுண் ஓவியங்கள் மக்கள் காற்றாடி பறக்கவிடுவதைச் சித்தரிக்கின்றன.

இந்தியாவின் மேற்கு முனையில் அமைந்துள்ள குஜராத், இஸ்லாமிய மற்றும் இந்து கலாச்சாரங்கள் கலந்த ஒரு பகுதி.

இதனால் தான், இஸ்லாமியர்களால் கொண்டுவரப்பட்ட காற்றாடிகள், உத்தராயணம் போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மிராக்கிள் கைட்ஸ் படி , இந்தியாவில் ஒரு மத அடையாளமாக காற்றாடிகள் முதலில் செய்யப்பட்டன.

மக்கள் தங்கள் விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் கடவுளிடம் தெரிவிக்க பிரார்த்தனைகள் அல்லது சடங்குகளின் போது அவற்றை பறக்கவிட்டனர்.

காலப்போக்கில், காற்றாடி பறக்கவிடுதல் பிரபலமடைந்தது, மேலும் இறுதியில் காற்றாடி விழாக்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட தொடங்கின.

போரின் போது காற்றாடிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?

கேமரா பொருத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு போர் காத்தாடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேமரா பொருத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு போர் காத்தாடி, 1915

அமெரிக்க கைட் ஃபிளையர்ஸ் அஸோஸியேஷன் தகவல் படி, காத்தாடிகள் போர்க்காலங்களில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன.

முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ், பிரெஞ்சு, இத்தாலிய மற்றும் ரஷ்ய ராணுவங்கள் காத்தாடி பறக்கவிடுவதற்கெனத் தனிப் பிரிவுகளையே வைத்திருந்தன.

இவை எதிரிகளைக் கண்காணிக்கவும் செய்திகளை அனுப்பவும் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) அமெரிக்க கடற்படை வான்வழி மீட்புப் பணிகள் முதல் இலக்குகளைத் தாக்கும் பயிற்சி வரை பல்வேறு நோக்கங்களுக்காகக் காற்றாடிகளைப் பயன்படுத்தியது.

ஃபாக்ஸ் வெதர் அறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள உலகக் காற்றாடி அருங்காட்சியகத்தில் "போர் அறை" என்ற தனிப்பகுதி உள்ளது. இங்கு போர்களில் பயன்படுத்தப்பட்ட காற்றாடிகள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அருங்காட்சியக துணைத் தலைவர் ஜிம் சியூஸ், இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப நாட்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு "பேரேஜ் காற்றாடி" இங்கே இருப்பதாக விளக்குகிறார்.

வணிகக் கப்பல்களில் இருந்து இவை பறக்கவிடப்பட்டன. கப்பலில் இருந்து நீண்ட ஒரு மெல்லிய கம்பி அல்லது நூல் இந்தக் காற்றாடியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

எதிரி நாட்டு விமானங்கள் வணிகக் கப்பலைத் தாக்க வரும்போது, இந்த நூலில் மோதி அவற்றின் அலுமினிய இறக்கை சேதமடைந்துவிடும்.

ஜிம் சியூஸ் 1890 களில் இருந்து ஒரு காற்றாடியின் உதாரணத்தையும் மேற்கோள் காட்டினார்.

"ஒரு ஜெர்மன் சரக்கு விமானத்தின் படம் பொறிக்கப்பட்ட ஒரு முக்கோண வடிவ காற்றாடி இருந்தது. இந்தப் பட்டம் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது" என்று அவர் கூறினார்.

மேலும், "இந்தப் பட்டம் கப்பலில் இருந்து பல நூறு கெஜம் தொலைவில் பறக்கவிடப்பட்டது. கப்பலில் இயந்திரத் துப்பாக்கிகளை இயக்கும் வீரர்கள் பட்டத்தின் மீது குறி வைப்பார்கள். அவர்கள், அந்தக் காத்தாடியில் உள்ள விமானப் படத்தை ஒரு நிஜமான எதிரி விமானமாக நினைத்துச் சுட்டுப் பயிற்சி செய்வார்கள். இது அவர்கள் இலக்கைத் துல்லியமாகக் குறிவைக்க உதவியது" என்றும் அதனை ஜிம் சியூஸ் விளக்கினார்.

வணிகக் கப்பல்களில் இருந்து இவை பறக்கவிடப்பட்டன. கப்பலில் இருந்து வானம் வரை நீண்ட ஒரு மெல்லிய கம்பி அல்லது நூல் இந்தக் காத்தாடியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஆய்வாளர்கள் காற்றாடிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்.

விமானம் பற்றிய யோசனை ஒரு காற்றாடியிலிருந்து பிறந்தது

அமெரிக்க கைட் ஃபிளையர்ஸ் அசோசியேஷன் அறிக்கைப்படி, "விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் காற்றாடி பறக்கவிடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பல ஆண்டுகளாக அவர்கள் காற்றாடி பறக்கவிட்ட அனுபவமே, அவர்களுக்கு ஒரு விமானத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கொடுத்தது.

ஒருநாள் கிட்டி ஹாக் பகுதியில் காற்றாடி பறக்கவிட்டுக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதனைத் தரையிலிருந்து சற்று மேலே உயர்த்தும் அளவுக்குக் காற்றாடிக்கு அதிக விசை இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்".

1899ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவர்கள் ஒரு 'பைபிளேன்' (இரண்டு அடுக்கு இறக்கை) காற்றாடியை உருவாக்கினர். காற்றாடியின் நான்கு மூலைகளிலும் இணைக்கப்பட்ட நான்கு நூல்களை வெவ்வேறு வழிகளில் இழுப்பதன் மூலம், பறவைகள் பறப்பதைப் போலவே காற்றாடியின் இறக்கைகளை வளைக்க முடியும் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பின்னர், 1901-ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தனது முதல் 'டெட்ராஹெட்ரல்' காற்றாடியின் முன்மாதிரியை உருவாக்கினார்.

இது மிகவும் உறுதியான ஒரு காற்றாடியாகும். தடிமனான கம்புகள் தேவையில்லாமலேயே, பல சிறிய காத்தாடிகளை ஒன்றிணைத்து ஒரு பெரிய காத்தாடியை உருவாக்க இது வழிவகுத்தது.

கிரஹாம் பெல்லின் இந்த டெட்ராஹெட்ரல் காத்தாடி, பின்னாளில் 288 பவுண்டுகள் (சுமார் 130 கிலோ) எடையைத் தூக்கி சாதனை படைத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு