ஐபிஎல் 2020: கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனாவைவிட பெரிய சிக்கல் எது?

பட மூலாதாரம், NurPhoto/Getty Images
- எழுதியவர், பிரதீப் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியன் பிரீமியர் லீக்கின் பதின்மூன்றாவது பதிப்பு, மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸுக்கு இடையிலான பந்தயத்துடன் அபுதாபியில் துவங்குகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில், பிரம்மாண்டமான இந்த கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதில் வீரர்களை பாதுகாப்பான பயோ பபிள்-இல் (உயிர் குமிழி) வைப்பதில் இருந்து அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றுநோய் அபாயம் காரணமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையே வீரர்கள், எதிரணியின் சவாலை எதிர்கொள்வதோடு கூடவே, அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று நகரங்களின் வெப்பத்தையும், ஈரப்பதத்தையும் சமாளிக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வீரர்கள் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் விளையாட வேண்டியிருக்கும்.
இந்த சிரமம் குறித்து, ராயல் சேலஞ்சர்ஸ் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ், ஆர்.சி.பியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"உண்மையைச் சொல்வதானால், இதுபோன்ற சூழ்நிலைகளில் விளையாடும் பழக்கம் எனக்கு இல்லை. இங்கே மிகவும் சூடாக இருக்கிறது. ஜூலை மாதம் சென்னையில் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியை இந்த வானிலை எனக்கு நினைவூட்டுகிறது. அதில் வீரேந்தர் சேவாக் எங்களுக்கு எதிராக 300 ரன்கள் அடித்தார். என் வாழ்க்கையில் அதைவிட வெப்பமான வானிலையை நான் அனுபவித்ததில்லை," என்று அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு விளையாட்டு சேனலில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் நீரஜ் ஜா, அங்குள்ள சிரமங்களை விளக்குகிறார், "முதல் விஷயம் 40 டிகிரி வெப்பநிலை. ஆனால் இதைவிட கஷ்டம் என்னவென்றால் அரங்கத்திற்கு வெளியே உள்ள பகுதிகள். மணற்பாங்கானவை. மணலின் வெப்பம் காரணமாக, சுற்றி இருக்கும் பகுதிகள் மிகவும் சூடாகிவிடும். இதனுடன் ஒத்துப்போவது வீரர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். "என்று அவர் தெரிவிக்கிறார்.
வெப்பத்தைத் தவிர, கடலுக்கு அருகில் இருப்பதால், ஈரப்பதத்தின் அளவும் இந்த மூன்று அரங்கங்களில் மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒரு தோராயமான மதிப்பீட்டின்படி, மூன்று நகரங்களிலும் ஈரப்பதத்தின் அளவு 70 சதவிகிதமாக இருக்கும். இது வீரர்களுக்கு நீரிழப்பு அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்திய வீரர்கள் மீது தாக்கம் இல்லை
இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சவால்கள், இந்திய சூழ்நிலையிலிருந்து அத்தனை வேறுபட்டதாக இருக்காது என்று மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் விஜய் லோக்பள்ளி கருதுகிறார்.

பட மூலாதாரம், KARIM SAHIB/Getty Images
" ஏப்ரல் மற்றும் மே கோடை காலத்தில் இந்தியாவில் ஐபிஎல் நடைபெற்றுள்ளது. அதன்படி பார்க்கும்போது, நிலைமைகள் ஓரளவு அதே போன்றுதான் இருக்கும்.. ஈரப்பத அளவைப் பொருத்தவரை, இந்தியாவில் கொல்கத்தா, சென்னை, மும்பை அல்லது கொச்சி போன்ற நகரங்களில் நடக்கும் போட்டிகளில் கூட வீரர்கள் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், "என்று அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரங்கம் கடந்த பத்தாண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சொந்த மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
2009ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வெளிநாட்டு அணிகளுக்கு எதிரான பந்தயங்களை, இந்த மைதானங்களில்தான் நடத்துகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இங்குள்ள நிலைமைகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
ஆனாலும், முந்தைய சீசன்களைப் போல இந்த சீசனிலும், எந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் விளையாடப்போவதில்லை.
ஐபிஎல் 2020இன் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை உன்னிப்பாகக் கவனிக்கும் நீரஜ் ஜா கூறுகிறார், "பாகிஸ்தான் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டத்தின் வீரர்களுக்கும், அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் மைதானங்களில் அதிக சிரமம் இருக்காது. ஆனால் வெளிநாட்டு வீரர்களுக்கு எப்போதுமே பிரச்சனை இருக்கும். இதைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம்," என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஐபிஎல் 2020இன் எல்லா அணிகளையும் சேர்த்தால் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் அணிகளில் இடம்பெற்றுள்ளனர். ஆகவே இந்த வீரர்கள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள ஏதாவது வழிகளை கட்டாயம் கண்டறிய வேண்டும்.
இதில் வீரர்கள் தங்களுக்கு ஏற்றவகையில் புதுமையான வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
இது எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தருடையது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானத்தில் விளையாடும்போது ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அவர் கழுத்தில் எப்போதும் ஐஸ் காலர் அணிந்திருந்தார். இதன் காரணமாக, அவரது உடலில் குளிர்ச்சி மற்றும் நீரின் தேவை பூர்த்தியாயின.
ஆர்.சி.பியின் ட்விட்டர் ஹேண்டிலில் வெளியிடப்பட்ட வீடியோவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஏபி டிவில்லியர்ஸ் ஈரப்பதம் குறித்தும் பேசியுள்ளார்.
"இரவு பத்து மணிக்கு கூட, இங்கு நிறைய ஈரப்பதம் இருக்கிறது. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது, ஆனால் போட்டியின் கடைசி தருணம் வரை உடலின் உள்ளே இருக்கும் சக்தியை பராமரிப்பது பெரிய சவாலாக இருக்கும், " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்நாட்டு போட்டிகளின் போது, வீரர்கள் வெப்பம், ஈரப்பதம் மற்றும் உயிரற்ற விக்கெட்டுகளுடன் கூடவே குறைந்தபட்ச வசதிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. ஆகவே, எந்தவொரு கடினமான சூழலையும் எதிர்த்து சமாளித்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனஉறுதியுடன் அவர்கள் களம் இறங்குகிறார்கள் என்று விஜய் லோக்பள்ளி குறிப்பிடுகிறார்.
நிவாரணம் என்னவாக இருக்கும்?
ஐ.பி.எல். இல் பங்கேற்கும் வீரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் என்னவென்றால், பெரும்பாலான பந்தயங்கள் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளன. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில் மாலை நேரங்களில் வெப்பநிலை சற்று குறையத் தொடங்குகிறது, இது வீரர்களுக்கு ஒரு நிவாரணம் தரும் விஷயமாகும். இது தவிர, ஐ.பி.எல் போட்டிகள், 20-20 ஓவர்கள் கொண்டவை. ஆகவே வீரர்கள் சில மணிநேரங்கள் மட்டுமே விளையாட வேண்டியிருக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முழு நாள் விளையாடப்பட்ட சர்வதேச போட்டிகளை நீரஜ் ஜா நினைவு கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
" இந்த மைதானத்தில், டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன, ஒருநாள் போட்டிகள் வழக்கமாக 10 மணிக்குத் தொடங்கும். மேலும் வீரர்கள் 12 மணிக்கு சுட்டெரிக்கும் வெயிலில் கூட களத்தில் இருந்தனர். பொதுவாக , மார்ச் முதல் அக்டோபர் வரை , 11 மணிக்குப் பிறகு மாலை ஏழு மணி வரை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரமாட்டார்கள். இதையெல்லாம் ஒப்பிடும்போது, இப்போது ஐ.பி.எல் போட்டியில் வீரர்கள் சில மணிநேரங்களே தங்கள் வலுவை தக்கவைக்கவேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.
சச்சின் டெண்டுல்கரின் 'பாலைவன புயல்'
ஐபிஎல் போட்டிகளில் பாதிக்கும் மேற்பட்ட பந்தயங்கள் அக்டோபரில் விளையாடப்படும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெப்பநிலை செப்டெம்பர் மாதத்திற்குப் பிறகு குறையும். இது வீரர்களுக்கு நிவாரணம் தரும்.
முன்னதாக ஐபிஎல் 7 வது பதிப்பின்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏப்ரல் மாதத்தில் சில பந்தயங்கள் நடத்தப்பட்டன. அவை இந்த நேரத்தை விட அதிகமான வெப்பம் இருந்த சமயத்தில் விளையாடப்பட்டன..
வெப்பம் மற்றும் ஈரப்பதம் தவிர வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் மற்றொரு அம்சமும் உள்ளது. 1998 இல் ஷார்ஜாவில் நடந்த இரண்டு போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு அதிரடி சதங்களை நினைவில் வைத்திருக்கும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு, இந்த அம்சம் குறித்து ஓரளவு தெரிந்திருக்கும்.
சச்சின் டெண்டுல்கரின் இந்த சதங்களை 'டெசர்ட் ஸ்டார்ம் (பாலைவன புயல்) என்று அழைக்கின்றனர். ஏனெனில் அவரது ஒரு சதத்தின் இன்னிங்ஸின் போது, மைதானத்தில் மணல் புயல் ஏற்பட்டது, இதனால் போட்டியின் சிறிது நேரம் வீணானது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை ஆய்வுத் துறையின் கணிப்பின்படி, செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மணல் புயல் ஏற்படக்கூடும்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நீண்ட இடைவெளிக்குப்பிறகு வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர். தங்களை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே, சிறப்பாக விளையாடுவதிலிருந்து எந்த ஒரு சவாலும், அவர்களை தடுக்காது என்று மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் விஜய் லோக்பள்ளி தெரிவிக்கிறார்.
"கொரோனா தொற்று பயத்தில் பல முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு போல, ஆங்காங்கே செல்லவும், உட்காரவும், சந்தித்துப்பேசவும் சுதந்திரம் இருக்காது. விருந்துகள், கொண்டாட்டங்களுக்கான சூழல் இருக்காது. பார்வையாளர்களின் கரவொலியும் இருக்காது. கிரிக்கெட்டின் சிலிர்ப்பு மட்டுமே இருக்கும், "என்று விஜய் லோக்பள்ளி விளக்குகிறார்.
உலகளாவிய பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களுக்கு, தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளில் இந்த பரபரப்பான பந்தயங்களை கண்டுகளிக்க நேரம் கிடைக்கும். ஆகவே,. அரங்கத்தில் பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும்கூட தொலைக்காட்சி மூலம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












