ஐபிஎல் 2020 RCB vs MI : சூப்பர் ஓவரின் கடைசி பந்து வரை குறையாத பரபரப்பு

பட மூலாதாரம், Bcci /ipl
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றது.
இருபது ஓவர் மேட்ச் குறித்து எழுதும் போது பெங்களூரூ அணி வென்றது என ஒரு வரியில் சொல்லிவிட்டாலும் கடைசி பந்து வரை பரபரப்பு குறையாமல் இருந்தது நேற்றைய ஆட்டம்.
பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து நேற்று விளையாடியது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாட, ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் ஆறு ஓவரில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் விளாசியது.
8-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆரோன் பிஞ்ச் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 9-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆட்டமிழக்கும் போது அவர் 35 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் அடித்து இருந்தார்.
பெங்களூரூ ஆர்சிபி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
திணறிய விராட் கோலி

பட மூலாதாரம், BCCI/IPL
அடுத்து இறங்கிய விராட் கோலி பந்தை எதிர்கொள்ள மிகவும் திணறினார். அவர் 11 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
தேவ்தத் படிக்கல் - விராட் கோலி ஜோடி 20 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தது.
அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். படிக்கல் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்களுடனும், ஷிவம் துபே 10 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி ஓவரில் ஷவம் டுபே இரண்டு சிக்ஸ் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
மும்பை தரப்பில் டிரண்ட் போல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடினமான இலக்கும், மும்பையின் ஆட்டமும்
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறியது.
8 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 8 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மும்பை அணி மோசமான தோல்வியைச் சந்திக்கப் போகிறது என பார்வையாளர்கள் கருதிய சூழலில் பெரிய எதிர்பார்ப்பின்றி ஆட வந்தார் இஷான் கிஷன்.
இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உள்பட 99 ரன்கள் குவித்து உடானா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
பொல்லார்டின் ஆட்டம்
முதலில் திணறிய பொல்லார்டு பின்னர் வேகம் எடுத்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
4 ஓவர்களில் 80 ரன்கள் தேவை என்ற நிலையில் 17வது ஓவரில் அவரது அதிரடியால் மும்பை 27 ரன்கள் குவித்தது. அடுத்து 18வது ஓவரில் 22 ரன்களும் , 19வது ஓவரில் 12 ரன்களும் குவித்தது மும்பை இந்தொயன்ஸ் அணி.
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உடானா வீசிய பந்தை பொல்லார்ட் பவுண்டரிக்கு விளாசினார். இதனால், மும்பை அணி 201 ரன்களை எடுத்தது. இதனால் இரு அணிகளில் ஸ்கோரும் சமன் ஆனது.
திகு திகு சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் ஆர்சிபி அணியின் சைனி பந்து வீசினார். சூப்பர் ஓவரில் மும்பை அணி ரன் குவிக்கத் திணறியது.
பொல்லார்டு விக்கெட்டை இழந்த அந்த அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












