கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு குறைந்த விலை கருவிகள் - உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற பிபிசி செய்திகள்

An Indian health worker takes swab samples for coronavirus and COVID-19 disease

பட மூலாதாரம், EPA

கோவிட் -19ஐ ஒரு சில நிமிடங்களில் பரிசோதனை செய்யும் ஒரு முறை ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

இந்த பரிசோதனைக்கு ஐந்து டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 380 ரூபாய்) மட்டுமே ஆகும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் அற்ற ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பரிசோதனை கருவியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த ஆறு மாதங்களில் 12 கோடி பேருக்கு இந்த அதிவேக கொரோனா பரிசோதனையைச் செய்யலாம்.

உலக சுகாதார நிறுவனம் இதனை முக்கிய மைல்கல் என்கிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

பரிசோதனை மற்றும் அதன் முடிவுகள் வரும் நேரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கால இடைவெளிதான் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல நாடுகளில் பெரும் சவாலாக இருக்கிறது.

இந்த புதிய கருவி குறித்துப் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், “இது மிகவும் சிறியது மற்றும் பயன்படுத்த எளிதானது. பரிசோதனை முடிவுகள் 15 முதல் 30 நிமிடங்களில் வந்துவிடும்,” என்றார்.

மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் மற்றும் எஸ்.டி பயோசென்சார், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் 12 கோடி கருவிகளை உற்பத்தி செய்ய ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறினார் டெட்ரோஸ்.

சென்னைஉள்பட 3 இடங்களில் என்ஐஏ கிளை

என்ஐஏ

பட மூலாதாரம், MHA

இந்தியாவில் தீவிரவாதம் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தீவிரவாதம், தேசப்பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களில், உடனுக்குடன் செயலாற்றும் என்ஐஏ திறனை இந்த நடவடிக்கை மேம்படுத்தும் என்று அந்தத்துறையின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது என்ஐஏவின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அதன் கிளைகள் குவாஹட்டி, மும்பை, ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னெள, ராய்ப்பூர், சண்டீகர் ஆகிய இடங்களில் உள்ளன.

உங்கள் இதயத்தை பாதுகாக்க 6 முக்கிய கேள்வி பதில்கள்

உலக இதய தினம்

பட மூலாதாரம், SPENCER PLATT

ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்த முக்கியக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது பிபிசி தமிழின் இந்தத் தொகுப்பு.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு "பாரத ரத்னா" விருது வழங்க கோரிக்கை

எஸ்.பி. பாசுப்ரமணியம்

பட மூலாதாரம், G VENKET RAM

படக்குறிப்பு, எஸ்.பி. பாலசுப்ரமணியம்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கட்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், "எஸ்.பி. பாசுப்ரமணியம் எங்களுடைய மாவட்டமான நெல்லூரில் பிறந்ததில் எங்களுடைய மாநிலம் அதிர்ஷ்டம் அடைகிறது. அவரது அகால மரணம், உலகளாவிய அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான திரை இசை பாரம்பரியத்தில் எஸ்.பி.பி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

2ஜி: சிபிஐ, அமலாக்கத்துறை மனுக்கள்

2017-இல் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு வெளியே வந்த ஆ. ராசா

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, 2017-இல் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு வெளியே வந்த ஆ. ராசா

2ஜி அலைக்கற்றை வழக்கில் இந்திய புலனாய்வுத்துறை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :