2ஜி: சிபிஐ, அமலாக்கத்துறை மனுக்கள் மீது இன்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty images
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
2ஜி அலைக்கற்றை வழக்கில் இந்திய புலனாய்வுத்துறை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 17 பேரை சிபிஐ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் விடுதலை செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ, மத்திய அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தினமும் விசாரிக்க இரு துறைகளும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தன.
3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்த இந்த வழக்கு, 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை நடைபெற்றது. அதன் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
இதை எதிர்த்து 2018, மார்ச் மாதம் 19ஆம் தேதி, மத்திய அமலாக்கத்துறையும், மறுதினம் சிபிஐயும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன.
2 ஆண்டுகளாக நிலுவை
இந்த மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டு நீதிபதி பிரஜேஷ் சேத்தி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தாலும், இன்னும் இறுதி வாதங்களை எட்டவில்லை.
இந்த நிலையில், கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இந்த வழக்கின் விசாரணையில் தடங்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தபோது, முன்னர் குற்றம்சாட்டப்பட்டிருந்த கான்வுட் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற நிறுவனம், பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ள தங்களின் சொத்துகளை விடுவிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை சமீபத்தில் நீதிபதி அனூப் ஜெய்ராம் பம்பானி பரிசீலித்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி பிரஜேஷ் சேத்தி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஆனால், கோவிட் தொற்று காரணமாக வழக்கு விசாரணையில் தேக்கம் நிலவுகிறது என்று முறையிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நீதிபதி ஓய்வால் தாமதமாகுமா?
மேலும், "சம்பந்தப்பட்ட நீதிபதி வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே கணிசமான காலத்துக்கு இந்த வழக்கை அவரது அமர்வு விசாரித்து விட்டதால், அவரது அமர்வே இந்த வழக்கை விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க ஏதுவாக தினமும் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்பட வேண்டும்" என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் முறையிட்டார்.
ஆனால், தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால், நீதிபதி ஓய்வு பெறுகிறார் என்ற காரணத்துக்காக தற்போதைய கோவிட் சூழலில் வழக்கை தினமும் விசாரிக்க கோருவது ஏற்புடையதல்ல என்று வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி, ஒருவேளை, தினமும் விசாரணை அவசியம் என அரசு தரப்பு எழுத்துப்பூர்வமாக கோருமானால், அதற்குரிய மனுக்களை தாக்கல் செய்தால், அவற்றை பரிசீலித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்று நீதிபதி அனூப் ஜெய்ராம் பம்பானி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்ற மரபுகளின்படி ஒரு வழக்கில் குறிப்பிட்ட அளவைக் கடந்து வாதங்கள் நிறைவடைந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, தனது ஓய்வுபெறும் நாளுக்கு முன்னதாக, தனது அமர்வு விசாரித்து வந்த வழக்குகளில் அவரே தீர்ப்பு அளித்து விட்டுச் செல்வது வழக்கம். அந்த மரபு, தற்போதைய மேல்முறையீட்டு வழக்குகளில் கடைப்பிடிக்கபடுமானால், 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் வரும் நவம்பர் மாத இறுதிக்குள்ளாக எதிர்பார்க்கலாம் என்று சட்ட நிபணர்கள் கருதுகிறார்கள்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆரம்பம் முதலே தனி கவனம் செலுத்தி அதை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தன்னை ஒரு மனுதாரராகவும் இணைத்துக் கொண்டு வாதிட்டவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
டெல்லி உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய அறிவிப்பை நற்செய்தி என்று குறிப்பிட்டு அவரும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அரசியல் தாக்கம் ஏன்?
13 ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை அளவில் இருந்தபோது 2007ஆம் ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. அந்த கூட்டணியில் வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் சார்ந்த திமுக, ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

பட மூலாதாரம், Getty Images
2004-2009 ஆண்டுகளில் நடந்த கூட்டணி ஆட்சியில் தொடங்கிய வழக்கு, பதவிக்காலத்தின் நிறைவு மாதங்களில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது. ஆ. ராசா மத்திய அமைச்சர் பதவியை இழக்கவும் இந்த வழக்கு தூண்டியது.
அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் 2ஜி வழக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், மீண்டும் 2009இல் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், அப்போது நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக முடிந்த ஆ. ராசாவால் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் மத்திய அமைச்சராக முடியவில்லை.
எதிர்கட்சி வரிசையில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தின்போதும், மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைத்த பிறகும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயேும் கடுமையாக எழுப்பின. காங்கிரஸ் கூட்டணி அரசு 2009-2014 பதவிக்காலத்தை நிறைவு செய்யும்வரை இந்த முழக்கத்தை பாஜக கைவிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
மாற்றம் கண்ட தேர்தல் முடிவுகள்
2014இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. முன்னதாக, அந்த தேர்தலில் தமிழகத்தில் ஆளும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
அப்போது பாஜக, தேமுதிக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே), கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தல் பிரசாரத்தின்போதும், பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளும் 2ஜி விவகாரத்தை கடுமையாக முன்வைத்து பிரசாரம் செய்தன.
தேர்தல் முடிவில், அதிமுகவுக்கு 37 இடங்களும், பாமக, பாஜகவுக்கு தலா ஒரு இடம் கிடைத்தன. திமுக, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதற்கு மத்தியில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016, டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக தலைமையிலும் ஆட்சித் தலைமையிலும் மாற்றம் ஏற்பட்டு, சிறிது காலம் ஓ.பன்னீர்செல்வமும் அவருக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் தொடர்கிறது.
இதற்கிடையே, 2017இல் நிறைவுக்கு வந்த 2ஜி வழக்கு விசாரணையின் தீர்ப்பு அதே ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

பட மூலாதாரம், DMK
மோதியின் அரசியல் சந்திப்புகள்
அந்த தீர்ப்பு வெளிவர சில நாட்களுக்கு முன்பு, சென்னைக்கு அரசுமுறைப் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோதி, உடல்நலமின்றி இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதியை அவரது இல்லத்திற்கே சென்று நலம் விசாரித்தார்.
தமிழ்நாட்டில் எதிர்கால கூட்டணிக்கு அந்த சந்திப்பு அச்சாரமாகலாம் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், 2019இல் நடந்த மக்களவை தேர்தலின்போது, அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தது.
2016இல் 37 தொகுதிகளில் வென்ற அதிமுக, தலா ஒரு தொகுதியில் வென்ற பாஜக, பாமக ஆகியவை, இம்முறை தேனி தொகுதியில் அதிமுக நீங்கலாக மற்ற அனைத்து இடங்களையும் பறிகொடுத்தன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மறுபுறம் எதிரணியில் திமுக 24, அதன் அணியில் இருந்த காங்கிரஸ் 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு இடத்தில் என மொத்தம் 38 இடங்களில் வென்றன.
இந்த தேர்தலில் 2ஜி அலைக்கற்றை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி ஆகியோருக்கு சாதகமாக வந்த தீர்ப்பு, அக்கட்சி தலைமையிலான அணிக்கு தேர்தலில் சாதகமான ஒரு வாய்ப்பை வழங்கியதாக பேசப்பட்டது.
அந்த அளவுக்கு சுமார் 13 ஆண்டுகளில் இரண்டு நேரெதிர் அரசியல் களம் கண்டு வரும் மிகப்பெரிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தலைமை தாங்கிய அணிகளின் வெற்றியை மாற்றியமைக்கவும், தீர்மானிக்கவும் கூடிய வாய்ப்புகளில் ஒன்றாக 2ஜி அலைக்கற்றை வழக்கு மாறியிருந்தது.
அந்த நிலையில், அந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணை, தற்போது மீண்டும் அரசியல் பார்வையாளர்களின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமாக, இந்த வழக்கின் ஆரம்பகால சிபிஐ விசாரணையின்போது, மத்திய அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் அவரது கூடுதல் தனிச்செயலாளராக இருந்தவர் ஆசீர்வாதம் ஆச்சாரி.
ஆ. ராசாவை 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற சில தனியார் நிறுவன நிர்வாகிகள் தனியாக சந்தித்துப் பேசிய நிகழ்வுகளை சிபிஐக்கு வெளிப்படுத்தியதால் வழக்கின் முக்கிய சிபிஐ தரப்பு சாட்சியாக ஆசிர்வாதம் ஆச்சாரி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
இவர், வழக்கு விசாரணையின்போதே ரயில்வே அமைச்சக பணியில் இருந்து விலகினார். சிறிது காலத்துக்குப் பிறகு, பாஜகவில் சேர்ந்த அவர், அந்த கட்சியின் உத்திகள் வகுப்புக்குழு உறுப்பினராகவும் தேசிய தலைமைக்கு நெருக்கமானவராகவும் இப்போது இருக்கிறார். இவர் பாஜக தலைவரான சுப்பிரமணியன் சுவாமியின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கு என்ன?
இந்திய அளவில் பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் இரண்டாம் தலைமுறை எனப்படும் 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கும் நடைமுறையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை உரிய விதிகளை பின்பற்றாததால் அரசுக்கு ரூபாய் 1.76 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் தமது அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால், வழக்கை விசாரித்த சிபிஐ 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ரூ. 30,894 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு இருப்பதாக மதிப்பிடப்படுவதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ. ராசா செயல்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

பட மூலாதாரம், Getty Images
குற்றச்சாட்டுகளும் விடுதலையும்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகக் கூறி மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்ததாக கூறப்பட்ட ஊழல் விவகாரங்களில் மிகப்பெரிய முறைகேடாக இந்த வழக்கு பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், சிபிஐ தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திருந்தது.

பிற செய்திகள்:
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: இறுதி தீர்ப்பு வழங்கும் நீதிபதி சுரேந்திர குமார் யார் தெரியுமா?
- ஐபிஎல் 2020: பஞ்சாப் அணியின் கனவை தகர்த்த ராகுல் டேவாட்டியாவின் பின்னணி என்ன?
- எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு "பாரத ரத்னா" விருது வழங்க ஆந்திர அரசு கோரிக்கை - விருதுக்கான தகுதிகள் என்ன?
- டிரம்ப் வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா? ரூ. 55 ஆயிரம் மட்டுமே செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியால் சர்ச்சை
- விவசாய சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் டிராக்டருக்கு தீ வைப்பு, தமிழக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் - விரிவான தகவல்கள்
- அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்
- மூளையை திண்ணும் நுண்ணுயிரி `நெக்லீரியா ஃபோலெரி` குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
- அரபு உலகின் வலிமைமிக்க நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்தது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












