பாபர் மசூதி இடிப்பு வழக்கு: இறுதி தீர்ப்பு வழங்கும் நீதிபதி சுரேந்திர குமார் யார் தெரியுமா?

பட மூலாதாரம், SANJEEV PANDE
- எழுதியவர், விபூராஜ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சிறப்பு நீதிபதி சுரேந்திர குமாரின் முதல் நியமனம் உத்தர பிரதேசத்தின் ஃபைசாபாத்தில் நடந்தது. ஏடிஜே எனப்படும் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆகவும் அங்கேயே அவருக்கு முதல் பதவி உயர்வு கிடைத்தது. அதே ஃபைசாபாத்தில் (இப்போது அயோத்தி மாவட்டம் என அழைக்கப்படுகிறது) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வரவிருக்கிறது.
28 ஆண்டுகள் பழமையான இந்த குற்றவியல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் வாழ்க்கையில், ஃபைசாபாத் மீண்டும், மீண்டும் அவரிடமே திரும்பி வருவது போலத்தெரிகிறது.
லக்னெளவில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தின் (அயோத்தி வழக்கு) தலைமை நீதி அதிகாரியாக செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த வழக்கில் சுரேந்திர குமார் தீர்ப்பளிக்க உள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்த வழக்கில் சிறப்பு நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.
தினசரி வழக்கை நடத்தி இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்குமாறு உச்ச நீதிமன்றம், 2017 ஏப்ரல் 19 ஆம் தேதி அவருக்கு உத்தரவிட்டது.
பாஜகவின் வழிகாட்டுதல் குழுவின் முக்கிய தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும், நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளதால், அதை வைத்தே இந்த வழக்கின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் யார்?
கிழக்கு உத்தர பிரதேசத்தின் ஜோன்பூர் மாவட்டத்தில் உள்ள பகான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்கிருஷ்ண யாதவின் வீட்டில் பிறந்த சுரேந்திர குமார் யாதவ், தனது 31 வயதில் மாநில நீதித்துறை சேவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஃபைசாபாத்தில் கூடுதல் முன்சிஃப் (நீதிபதி) பதவிக்கு முதன்முதலில் அவர் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் அவரது நீதித்துறை வாழ்க்கை தொடங்கியது. பிறகு, காஸிபூர், ஹார்தோய், சுல்தான்பூர், இட்டாவா, கோரக்பூர் வழியாக தலைநகர் லக்னெள மாவட்ட நீதிபதி பதவிகளை தனது பயணத்தில் அவர் வகித்தார்.
அவருக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி (அயோத்தி வழக்கு) பொறுப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றிருப்பார்.
நீதிமன்ற பணியில் அவர் இருப்பது குறித்து வழக்கறிஞர் சங்கத்தினர் நினைப்பது என்ன?
"அவர் கடமையில் கண்ணாக இருக்கும், மிகவும் மென்மையான மனிதர். எந்தவிதமான அழுத்தமும் தன் மீது ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிப்பதில்லை. சிறந்த மற்றும் நேர்மையான நீதிபதிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார், " என்று லக்னெள மத்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச்செயலர் வழக்கறிஞர் சஞ்சீவ் பாண்டே கூறுகிறார்.

பட மூலாதாரம், SANJEEV PANDEY
கடந்த ஆண்டு, அவர் லக்னெள மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, வழக்கறிஞர் சங்கம் அவருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியை நடத்தியது.
ஆனால், உச்சநீதிமன்றம் ஏற்கனவே அவருடைய பதவிக்காலத்தை நீட்டித்து, சிறப்பு நீதிமன்றத்தின் (அயோத்தி வழக்கு) தலைமை நீதி அதிகாரியாக தொடர்ந்து செயல்பட்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை முடிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டது.
அதாவது, அவர் மாவட்ட நீதிபதியாக ஓய்வு பெற்றார். ஆனால் சிறப்பு நீதிபதியாக தொடர்கிறார்.
"வரலாற்றின் ஏடுகளில் எழுதப்படும் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை அவர் தருவார் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் அவருக்கு விடைகொடுத்தோம். அவர் எந்த நெருக்குதலும் இல்லாமல் தனது தீர்ப்பை அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம், " என்று வழக்கறிஞர் சஞ்சீவ் பாண்டே குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் பிரிவு 142
அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ், உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தியதன் மூலம், ஓய்வு பெறப் போகும் ஒரு நீதிபதியின் பதவிக்காலம் அதே வழக்கில் நீடிக்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இந்தப்பிரிவின் கீழ், 'முழுமையான நீதிக்காக', நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கிலும் தேவையான எந்த ஒரு முடிவையும் எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு உரிமை உண்டு.
உச்சநீதிமன்றம் 142 வது பிரிவை பொது நலனுக்காக பலமுறை பயன்படுத்தியிருந்தாலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை நீதிபதி ஓய்வு பெறப் போவதை நிறுத்தி, வழக்குவிசாரணை முழுமையடையும்வரை தொடர்ந்து பதவியில் இருக்குமாறு அவரை கேட்டுக்கொண்டிருப்பது, இதுவே முதல் தடவையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாநில நீதித்துறை சேவையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான வழிவகை இல்லை என்று உத்தர பிரதேச அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இது மட்டுமல்லாமல், அயோத்தி வழக்கில் 'முழுமையான நீதிக்காக' உச்சநீதிமன்றம் மேலும் இவ்வாறு கூறியது.
"முழு வழக்கு விசாரணை முடிவடையும் வரை புதிய விசாரணை இருக்காது. விசாரணை செய்யும் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட மாட்டார். ஒரு குறிப்பிட்ட தேதியில் விசாரணை நடத்த முடியாது என்பதை நீதிமன்றம் உறுதியாக உணரும் வரை விசாரணை ஒத்திவைக்கப்படாது. இந்த நிலையில் விசாரணையை அடுத்த நாள் அல்லது அருகிலுள்ள ஒரு தேதியில் நடத்தலாம், ஆனால் பதிவில் அவ்வாறு செய்வதற்கான காரணம் எழுதப்பட்டிருக்கவேண்டும். "

பட மூலாதாரம், SANJEEV PANDEY
வழக்கு எண்கள் 197 மற்றும் 198
உண்மையில், நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு அளிக்கவேண்டிய பாபர் மசூதி இடிப்பு வழக்கின் பின்னணி, 1992 டிசம்பர் 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர்களுடன் தொடர்புடையது.
வழக்கு எண் 197 இல் பெரும் எண்ணிக்கையிலான கர சேவகர்களின் மீது , கொள்ளை, சூறையாடல், காயம் ஏற்படுத்தல், பொது வழிபாட்டுத்தலத்தை சேதப்படுத்தியது மற்றும் மதத்தின் பெயரில் இரு சமூகங்களிடையே பகையை தூண்டியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எல்.கே. அத்வானி, அசோக் சிங்கல், வினய் கட்டியார், உமா பாரதி, சாத்வி ரித்தாம்பரா, முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர் மற்றும் விஷ்ணு ஹரி டால்மியா போன்றவர்கள் வழக்கு எண் 198 இல் பெயரிடப்பட்டனர்.
அவர்கள் மீது சமய வெறுப்புணர்வு மற்றும் மக்களை தூண்டிவிடுவதான உரைகளை நிகழ்த்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இரண்டு எஃப்.ஐ.ஆர்களைத் தவிர, மேலும் 47 வழக்குகளும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மொத்தம் 49 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக நடந்து வரும் விசாரணையின் போது 17 பேர் இறந்துள்ளனர்.
பால் தாக்கரே, அசோக் சிங்கல், கிரிராஜ் கிஷோர், விஷ்ணுஹரி டால்மியா ஆகியோர் இந்த 17 பேரில் அடங்குவர்.
விசாரணையின் போது எதிர்கொள்ளப்பட்ட சவால்கள்
•'குற்றம்சாட்டப்பட்டவர் தனிப்பட்ட முறையில் ஆஜராகியுள்ளார். ஆனால் சாட்சி இல்லை. ஏனெனில் அவர் மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலத்தில் அளித்த முகவரியில் அவர் வாழவில்லை.'
•'குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் ஆஜராகவில்லை, சாட்சிகளும் இல்லை.'
•'சாட்சியம் அளிக்க சாட்சி அழைக்கப்பட்டார், ஆனால் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. அவர் நாளை ஆஜராகப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது'.
•'சாட்சி, வி.எச்.எஸ் வீடியோ கேசட்டைப் பார்த்து அதை நிரூபிக்க வேண்டும். சிபிஐ-யிடம் நீதிமன்றத்தில் கேசட்டைக் காண்பிப்பதற்கான உபகரணங்கள் இல்லை. தூர்தர்ஷனின் டெல்லி மையத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் மட்டுமே இங்கு வந்து இந்த கேசட்டை இயக்க முடியும் என்று சிபிஐ கூறுகிறது.'
•'தான் டெல்லியில் இருப்பதாகவும், 69 வயதாகிவிட்டதாகவும், ஆகவே பயணம் செய்ய இயலாது என்றும் சாட்சி, மின்னஞ்சல் மூலம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'
விசாரணையின் போது, நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சில சாக்குபோக்கு அறிவிப்புகள் இவை. இது தவிர, நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கோரும் டஜன் கணக்கான முறையீடுகளையும் அவர் தீர்க்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், SANJEEV PANDEY
விசாரணை நீதிபதிக்கு இது எவ்வளவு சவாலானது?
"சாட்சியமளிக்க விரும்பாதவர்கள், சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எந்தவொரு விசாரணையின்போதும் இதுபோன்ற சூழ்நிலைகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் சாட்சியை வரவழைக்க நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு. சாட்சி வரவில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவருக்கு எதிராக ஒரு கைது ஆணை பிறப்பிக்கப்படலாம். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம். நீதிமன்றத்திற்கு அத்தகைய அதிகாரங்கள் உள்ளன, "என்று ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்சி பாடக் கூறுகிறார்.
செப்டம்பர் 30 என்ற தேதி
முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி, 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், நீதிபதி கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பிரிவு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் உரிமையை இந்து தரப்புக்கு அளித்தது. 450 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியில் முஸ்லிம்கள் வழிபடுவது 70 ஆண்டுகளுக்கு முன்பு தவறான முறையில் தடுக்கப்பட்டதாகவும், 27 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி சட்டத்திற்கு புறம்பான விதத்தில் இடிக்கப்பட்டதாகவும் . அந்தப்பிரிவு மேலும் தெரிவித்தது.
இரண்டாவது வழக்கு, சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட செப்டம்பர் 30 தேதி தீர்ப்பிற்காக காத்திருக்கிறது.
சட்டத்திற்கு புறம்பான வகையில் மசூதியை இடித்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது ஒரு நெருக்குதல் தரும் பொறுப்பல்லவா?
"மக்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி எந்த ஒரு நீதிபதியும் கவலைப்படமாட்டார். அவரது தீர்ப்பு பாராட்டப்படுமா விமர்சிக்கப்படுமா என்பதைக் கூட அவர் பொருட்படுத்தமாட்டார். முக்கிய விஷயம் என்னவென்றால் , ஒரு நீதிபதியாக தனக்கு முன் எந்தவிதமான சான்றுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதையும், அந்த ஆதாரங்களின் நம்பகத்தன்மையையும் பொருத்து ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கவேண்டும்," என்று ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்சி பாடக் கூறுகிறார்.
செப்டம்பர் 1 ம் தேதி, நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை முடித்து, செப்டம்பர் 2 முதல் தீர்ப்பை எழுதத் தொடங்கியது.
இந்த வழக்கில் சிபிஐ தனது தரப்பில் 351 சாட்சிகளையும் 600 ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு "பாரத ரத்னா" விருது வழங்க ஆந்திர அரசு கோரிக்கை - விருதுக்கான தகுதிகள் என்ன?
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிர் எதனால் பிரிந்தது? நிலுவை கட்டண சர்ச்சையின் உண்மை என்ன?
- டிரம்ப் வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா? ரூ. 55 ஆயிரம் மட்டுமே செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியால் சர்ச்சை
- விவசாய சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் டிராக்டருக்கு தீ வைப்பு, தமிழக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் - விரிவான தகவல்கள்
- அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்
- மூளையை திண்ணும் நுண்ணுயிரி `நெக்லீரியா ஃபோலெரி` குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












