கருணாநிதி உடல் நலம்: பிரதமர், குடியரசுத் தலைவர் விசாரிப்பு

கருணாநிதி உடல்நிலம்: பிரதமர், குடியரசுத் தலைவர் நலம் விசாரிப்பு

பட மூலாதாரம், FACEBOOK@KALAIGNAR KARUNANIDHI

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே சிகிச்சைபெற்று வருகிறார். நேற்று அவரது உடல் நிலை மேலும் ஒரு சிறு பின்னடைவைச் சந்தித்ததாகவும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு சிகிச்சையளித்துவரும் காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் நேற்று மாலையில் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

யூ-டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர் கைது - பலியான மனைவி
யூ-டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர் கைது - பலியான மனைவி

இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் அவரது கோபாலபுரம் இல்லத்தின் முன்பாக குவிந்தனர்.

வியாழக்கிழமை இரவு பத்து மணியளவில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலு மணி உள்ளிட்டவர்கள் கோபாலபுரம் இல்லத்தின் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்தனர். இது பரபரப்பை மேலும் அதிகரித்தது.

தென்னாப்பிரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோதி, கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க. ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் விசாரித்ததாக தேவைப்படும் உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.

விசாரிப்பு

பட மூலாதாரம், Twitter

குடியரசுத் தலைவர் மாளிகை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் செய்தியில், குடியரசுத் தலைவர் கருணாநிதியின் குடும்பத்தை தொலைப்பேசியில் அழைத்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் அவர் விரைவில் நலம்பெற விரும்புவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

விசாரிப்பு

பட மூலாதாரம், Twitter

இதற்கிடையில், கருணாநிதியின் இல்லம் முன்பாக இரண்டாவது நாளாக இன்றும் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி நேற்று மதுரையில் இருந்து புறப்பட்டு, இன்று கோபாலாபுரம் இல்லத்தை வந்தடைந்தார். கட்சியின் பொதுச் செயலாளரும் கருணாநிதியின் நீண்ட கால நண்பருமான அன்பழகன் இன்று காலையில் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருணாநிதியின் இல்லத்திற்கு வந்து, அவரது உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலினிடம் விசாரித்துச் சென்றுள்ளனர்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் புதிதாக வெளியாகவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :