ஐபிஎல் 2020 கிரிக்கெட்: ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆர்.சி.பி-யின் ஆட்டம் - கோப்பை கனவு பலிக்குமா?

ஐபிஎல் 2020: பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஐந்து வீரர்கள்

பட மூலாதாரம், BBCi / ipl

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 12 ஆண்டுகளாக கோப்பையை வெல்லும் தாகத்தை தீர்த்துக்கொள்ள முடியாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் இந்த ஆண்டு நடைபெற்று வரும் தொடரில் தங்களது கனவை நனவாக்குவார்களா?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள இன்னும் பல வாரங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான நேற்றைய (திங்கட்கிழமை) போட்டியில் விராத் கோலி தலைமையிலான அணியினரின் ஆட்டத்திறனை பார்த்தால் அதற்கான நம்பிக்கை ஏற்படுகிறது.

நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி அணி எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை அடிக்கவில்லை, பந்துவீச்சும் அந்தளவுக்கு எடுபடவில்லை. குறிப்பாக, பீல்டிங்கில் ஏகப்பட்ட சொதப்பல்கள். ஆனால், இவையெல்லாம் இரண்டாவது இன்னிங்சின் 16ஆவது ஓவர் வரை மட்டும்தான்.

ஆம், நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூரு வெல்வதற்கு போட்டியின் கடைசி 26 பந்துகளே காரணமாக அமைந்தன. அதாவது, அதன் பிறகு போட்டியின் போக்கையே விராத் கோலி தலைமையிலான அணியினர் மாற்றிவிட்டனர்.

இந்த நிலையில், பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்ட முக்கிய வீரர்கள் மற்றும் அவர்களது பங்களிப்பை பார்க்கலாம்.

IPL 2020

பட மூலாதாரம், BCCI / IPL

விராத் கோலி

சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு நேற்று, முதல் முறையாக களத்தில் இறங்கிய விராத் கோலியால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை. 14 பந்துகளை சந்தித்த அவர் 13 ரன்களை அடித்த நிலையில் பெவிலியனுக்கு நடையை கட்டினார். ஆனால், ஒரு கேப்டனாக தனக்கே உரித்தான ஸ்டைலில் அணியை திறம்பட வழிநடத்தினார் கோலி.

ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் - மனிஷ் பாண்டே இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு கொண்டிருந்த நிலையில், யஷ்வேந்திர சாஹலை களமிறக்கி அந்த கூட்டணியை உடைத்ததுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளும் சரிந்தன. பிறகு, தான் மூன்று விக்கெட்டுகள் குறிப்பாக விஜய் ஷங்கரின் விக்கெட்டை எடுத்ததற்கு கோலி வழங்கிய ஆலோசனையே காரணமென அவர் கூறினார்.

விராத் கோலி ipl 2020

பட மூலாதாரம், BCCI / IPL

யஷ்வேந்திர சாஹல்

இந்த போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்றதற்கு காரணம் சாஹல்தான் என்று போட்டிக்கு பிறகு பேசிய விராத் கோலி கூறினார். இதுமட்டுமின்றி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாஹல், நான்கு ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தேவதூத் பாடிக்கல்

இந்த போட்டியில் பெங்களூரு வெற்றிபெறுவதற்கு பந்துவீச்சாளர்களே காரணமென்று கூறப்பட்டாலும், தனது பேட்டிங்கின் மூலம் தேவதூத் பாடிக்கல் அனைவரது கவனத்தையும் பெற்றார். இவர் இக்கட்டான நேரத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தி, 42 பந்துகளில் 56 ரன்களை குவித்தார்.

ஏ.பி. டிவில்லியர்ஸ்

பெங்களூரு அணியில் ஏ.பி. டிவில்லியர்ஸூம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 51 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில், பழைய டிவில்லியர்சின் அதிரடியான ஆட்டத்தை காண முடிந்தது.

நவ்தீப் சைனி மற்றும் சிவம் துபே

ஒரு அணி பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அதன் மொத்த அழுத்தமும் பந்துவீச்சாளர்களின் மீதுதான் விழும். ஆனால், இதை சிறிதும் பொருட்படுத்தாது, சிறப்பான பந்துவீச்சை பெங்களூரு அணியின் நவ்தீப் சைனி மற்றும் சிவம் துபே ஆகியோர் வெளிப்படுத்தினர். அதிகளவு ரன்களை விட்டுக்கொடுக்காத இவர்கள் இருவரும் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ipl 2020 time table list

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: