'அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் வேண்டும்' - இந்து அமைப்பு கோரிக்கை

மதுராவில் கிருஷ்ணர் கோயில் மற்றும் மசூதி ஆகியன அருகருகே அமைந்துள்ளன.

பட மூலாதாரம், ROB ELLIOTT / getty images

படக்குறிப்பு, மதுராவில் கிருஷ்ணர் கோயில் மற்றும் ஷாஹி இட்கா மசூதி ஆகியன அருகருகே அமைந்துள்ளன.

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையதளப் பக்கங்களில் வெளியான சில செய்திகளின் தொகுப்பு.

தி டெலிகிராப்: 'மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் வேண்டும்'

அயோத்தி 'ராம ஜென்மபூமி' இயக்கத்தைப் போலவே, மதுராவில் 'கிருஷ்ண ஜென்மபூமி' இயக்கமும் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந்து ஆர்மி எனும் அமைப்பின் 22 உறுப்பினர்கள் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என தி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள ஷாஹி இட்கா மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று சில சங்கப் பரிவார அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் தொடங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி மதுரா நகரம் முழுவதும் பதாகைகள் ஒட்டிய இந்து ஆர்மி அமைப்பு இந்துத்துவ ஆதரவாளர்கள் அனைவரும் திங்கள் காலை 11 மணிக்கு அந்த இடத்தில் கூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் தொடங்கப்பட்டால், 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது.

தினத்தந்தி: பெற்றோர் சம்மதம் இன்றி நடந்த திருமணம் தொடர்பான வழக்குகள் எத்தனை?

சென்னை உயர் நீதிமன்றத்தில்குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமான தனது 16 வயது மகளை மீட்டுத்தர கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொலி காட்சி மூலம், சிறுமியை காவல் துறையினர் முன்னிலைப்படுத்தினர். சிறுமி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றி வந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதை மறைத்து சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

காணொளிக் குறிப்பு, பெற்றோர் இல்லை. ஆனா கிராமமே பணம் சேர்த்து திருமணம் நடத்தி வைத்தது

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இதுபோன்ற பல வழக்குகளில், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?' என கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

இந்து தமிழ் திசை: 'அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பு இல்லை'

L murugan TN BJP

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என மாநில பாஜக தலைவர் முருகன் கூறினார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பு இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்தே அவரது நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: