வெங்கய்ய நாயுடுக்கு கொரோனா வைரஸ்: அறிகுறியில்லாததால் வீட்டுத் தனிமையில் இருப்பதாக அறிவிப்பு

வெங்கய்ய நாயுடு

பட மூலாதாரம், Venkaiah Naidu FB

இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுக்கு (71) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் அவரது அதிகாரப்பூர்வ பதவிக்குரிய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அதில், குடியரசு துணைத் தலைவர் வழக்கமான கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு இன்று காலை உட்படுத்திக் கொண்டார். அதில் "அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், அவருக்கு வைரஸ் அறிகுறியேதும் இல்லாத நிலையில், நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் வீட்டுத் தனிமைக்கு உட்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி உஷா நாயுடுக்கு வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. அவரும் சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடு சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் தினமும் முதல் பகுதியை அவரே வழிநடத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற 25க்கும் அதிகமான எம்.பி.க்களுக்கு ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் நேற்றிரவு உறுதியானதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹரித்வார், ரிஷிகேஷ் இடையே உள்ள வந்தே மாதரம் குஞ்ச் என்ற இடத்தில் தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த நான்கு நாட்களுக்குப்பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நிலைமை சரியாகாமல் போனால் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவேன் என்றும் உமா பாரதி கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, செப்டம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி 61 லட்சத்து 45 ஆயிரத்து 291 ஆக உள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் அதிக வைரஸ் பாதிப்பை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதேபோல, உயிரிழப்பு அளவில் இந்தியாவில் வைரஸால் இதுவரை 96 ஆயிரத்து 318 பேர் இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: