2ஜி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை

பட மூலாதாரம், Getty Images
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சிபிஐ, அமலாக்கத்துறை மனுக்களை விசாரித்த நீதிபதி ப்ரிஜேஷ் சேத்தி இன்று பிறப்பித்த உத்தரவில், விரைவாக விசாரிக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதன்படி வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பிற்பகல் 2.30 மணிக்கு தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த உத்தரவில், "இந்த வழக்கு தொடர்படைய ஆவணங்கள் 1,552 பக்கங்கள் கொண்டவையாக இருப்பதால், அதை மட்டுமே காரணமாகக் கூறி வழக்கின் வாதங்களை தொடராமல் இருக்க காரணம் கூறக்கூடாது. அதேபோல, வழக்கின் ஆவணங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறி ஒரு நீதிபதி தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. அதுவும், வழக்கை விசாரித்து முடிக்க கால வரம்பு உள்ளபோது அதை நான் விசாரிக்க மாட்டேன் என ஒரு நீதிபதி கூறக்கூடாது. எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சம்பந்தப்பட்ட மனுதாரர்களும், எதிர் மனுதாரர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக 2011ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2017ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிபிஐ, இந்திய அமலாக்கத்தறை இயக்குநரகம் மேல்முறையீடு செய்திருந்தன. அதில் வழக்கை விசாரிக்குமாறு இரு துறைகளும் கேட்டுக் கொண்டபோதும், ஆரம்ப கால விசாரணைக்குப் பிறகு பல காரணங்களுக்காக இந்த மனுக்கள் விசாரணைக்கு வராமல் தள்ளிப்போடப்பட்டு வந்தன.
இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரிஜேஷ் சேத்தி வரும் நவம்பர் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அவரது அமர்வு விசாரித்து வந்த மேல்முறையீட்டு மனுக்களை அவரது பதவிக்காலத்துக்குள்ளேயே விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறை கோரின.
இதையடுத்து கடந்த ஆண்டே தினமும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்ட இந்த மனுக்கள், கடந்த மார்ச் மாதம், கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்படோடப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் விசாரணையை அக்டோபர் 5 முதல் தினமும் நடத்த டெல்லி நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- பாபர் மசூதி தகர்ப்பு: சம்பவத்தை நேரில் பார்த்த செய்தியாளர்கள் விவரிக்கும் அதிர்ச்சியூட்டும் அனுபவங்கள்
- ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: உயிருக்கு போராடிய 19 வயது பெண் டெல்லியில் உயிரிழப்பு
- திருவொற்றியூர், குடியாத்தம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணைய முடிவுக்கு என்ன காரணம்?
- அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?
- 'சூனிய வேட்டை' - இந்தியாவில் பணிகளை நிறுத்திய சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
- கொரோனா: விஜயகாந்த் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












