அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் வெளிநாட்டு நிதி முடக்கம் - இந்திய உள்துறை கட்டுப்பாடுகளுக்கு என்ன காரணம்?

டெல்லி கலவரங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பான சுயாதீன விசாரணை அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.

இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிவித்துள்ள நிலையில், அந்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது என்றும் நடந்த நிகழ்வுகளை அந்த அமைப்பு மிகைப்படுத்தியிருப்பதாகவும் இந்திய உள்துறை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் தனி கவனம் செலுத்தும் சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்திய அரசின் செயல்களால் தங்கள் பணிகளை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்திய அரசின் செயல்களை பழிவாங்கப்படும் நடவடிக்கை என்று கூறி, இந்த முடிவை அந்த அமைப்பு எடுத்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என அரசு கூறியது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறுவது என்ன?

இது தொடர்பாக அம்னெஸ்டி அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு தங்களைப் பழி வாங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் தங்கள் அமைப்பின் இந்திய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது செப்டம்பர் 10ஆம் தேதிதான் தெரியும் என்றும், இதன் காரணமாக அதன் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது.

இந்திய அரசின் இந்த செயலை சூனிய வேட்டை என்று கூறிய உள்ள அம்னெஸ்டி அமைப்பு, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களின் படியே தங்கள் செயல்பாடுகள் உள்ளதாக கூறி உள்ளது.

அம்னெஸ்டடி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரிவின் செயல் இயக்குநர் அவினாஷ் குமார், “அண்மையில் டெல்லி கலவரத்தின் காவல்துறையின் பங்கும் மற்றும் டெல்லி கலவரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டோம். நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தோம். அதனை அடுத்து தொடர்ந்து எங்களை பல்வேறு வழிகளில் அரசு துன்புறுத்தி வருகிறது,” என குற்றஞ்சாட்டி உள்ளார்.

காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பான சுயாதீன விசாரணை அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.

Amnesty international

பட மூலாதாரம், Amnesty international

இந்த அறிக்கையில், டெல்லி காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கலவரத்தைத் தடுக்கத் தவறியது, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளை அடையாமல் தடுத்தது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்று இருந்தன.

கலவரத்தைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டப்படுவது, அமைதி வழியில் போராடியவர்களை சிறையில் அடைத்தல் மற்றும் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அறிக்கையில் உள்ளன. இதில் ஒரு வழக்கு கூட மனித உரிமை மீறலில் டெல்லி காவல்துறை ஈடுபட்டதாக பதிவாகவில்லை என்று அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டு இருந்தது.

அம்னெஸ்டியின் அறிக்கையை டெல்லி காவல்துறை மறுத்தது.

இந்த நிலையில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் செயல்பாடு தொடர்பாக இந்திய உள்துறை நீண்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரேயொரு முறை மட்டுமே அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளிநாட்டு விதியை, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் பெற அனுமதி பெற்றிருந்தது. அத்தகைய அனுமதியை பெறுவதற்கான தகுதியை அந்த அமைப்பு பெறவில்லை என்பதால் அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த நிறுவனம் தொடர்ச்சியாக விண்ணப்பித்தபோதும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், எஃப்சிஆர்ஏ விதிகளை மீறும் வகையில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நான்கு நிறுவனங்களில் மிக அதிக அளவிலான தொகையை அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பிரிட்டன் அலுவலகம் வரவு வைத்தது. அந்த தொகை அன்னிய நேரடி முதலீட்டின் அங்கமாக வகைப்படுத்தி வரவு செலுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி குறிப்பிட்ட தொகையை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கணக்கிலும் இந்திய உள்துறை அனுமதியின்றி வரவு வைக்கப்பட்டது. இந்த செயல்பாடு சட்டத்தை மீறும் வகையில் இருப்பதால், முந்தைய அரசுகளும் அந்த அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற அனுமதியை வழங்கவில்லை.

எவ்வித சார்பின்றி மத்தியில் ஆட்சியில் இருந்த எல்லா அரசுகளாலும் அந்த அமைப்பின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் இருந்தே, அந்த அமைப்பு மீதான நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்பது தெளிவாகிறது. மோசடியான நடைமுறைகள் மூலம் தனது செயல்பாடுகளுக்காக நிதியைப் பெற அந்த அமைப்பு முயன்றுள்ளது.

மனிதாபிமானப் பணிகள் மற்றும் அரசாங்கத்திடம் உண்மையைப் பேசுவது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிடும் அறிக்கைகள் அனைத்தும் இந்திய சட்டங்களை மீறும் அதன் நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு சூழ்ச்சியே தவிர வேறில்லை. இப்போதும் இந்தியாவில் மனிதாபிமான பணிகளை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தொடர தடையில்லை. எனினும், வெளிநாட்டில் இருந்து வழங்கப்படும் நிதி நன்கொடைகளைக் கொண்டு உள்நாட்டு அரசியல் விவாதங்களில் தலையீடு செய்வதை இந்திய சட்டம் அனுமதிக்காது. அந்த சட்டம் எல்லோரையும் போல அம்னெஸ்டி இன்டர்நேஷனலுக்கும் பொருந்தும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: