'அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஏன்?' : ஓ.பன்னீர்செல்வத்திடம் பழனிசாமி கேள்வி - தமிழக அரசியல்

ops vs eps

பட மூலாதாரம், Aiadmk official facebook page

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: “அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஏன்?” - ஓ.பன்னீர்செல்வத்திடம் பழனிசாமி கேள்வி

"விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே?" என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

நேற்று நடந்த அதிமுக செயற்குழு குறித்து விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசிய விஷயங்களை சென்னை பதிப்பின் நான்காவது பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

எடப்பாடி பழனிசாமி, “நான் 1974-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கி, ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், மாவட்ட பிரதிநிதி, மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்-அமைச்சர் என இந்த நிலைக்கு நான் உயர்ந்துள்ளேன்.

இதற்கு காரணம் நான் தலைமை மீது கொண்டுள்ள பற்றும், விசுவாசமும் தான். கடந்த 45 ஆண்டு காலமாக இந்த கட்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் விசுவாசத்துடன் பணியாற்றியுள்ளேன். 2011-ம் ஆண்டு அம்மா (ஜெயலலிதா) என்னை நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக்கினார். என்னுடைய செயல்பாடுகளை பார்த்து கூடுதலாக 2016-ம் ஆண்டு பொதுப்பணித்துறையையும் வழங்கினார். அம்மாவின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு நான் சிறப்பாக பணியாற்றியதால் எனக்கு அந்த பொறுப்பை வழங்கினார். நான் ஒரே தொகுதியில் 9 முறை போட்டியிட்டுள்ளேன்.

விசுவாசம்... விசுவாசம்... என்று சிலர் இங்கே பேசினார்கள்.2017-ம் ஆண்டு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனக்கு எதிராக, இந்த ஆட்சிக்கு எதிராக 11 பேர் வாக்களித்தீர்களே?. தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டீர்களே?. அதை எதில் சேர்த்துக்கொள்வது?. அந்த சூழ்நிலையில் இந்த அரசு காப்பாற்றப்படாமல் இருந்திருந்தால் நம் அனைவருடைய நிலைமையும் என்ன ஆகியிருக்கும் என்பதை இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும். அம்மாவின் ஆட்சிதான் தொடர்ந்திருக்குமா?,” என்றார்.

தினமணி: கேரளத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு

கேரளத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவுவது திடீரென்று அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வா் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளாா் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

கேரளத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 41,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாவது 8 சதவீதமாக உள்ள நிலையில், கேரளத்தில் 12.59 சதவீதமாக உள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்து தமிழ் திசை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் அன் பழகன் நேற்று வெளியிட்டார். கலந் தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

இது குறித்து, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம், “பொறியியல் படிப்புக்காக 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்ததில், ஒரு லட்சத்து 15,088 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர். அவர்களுடைய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 1 லட்சத்து 12,406 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 71,469 மாணவர்களும் 40,922 மாணவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் உள்ளனர்.

தரவரிசை பட்டியலில் ஏதும் தவறு இருந்தால் மாணவர்கள் இயக்ககத்துக்கு தெரிவிக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பிரிவு (149 மாணவர்கள்), முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் (855), விளையாட்டுப்பிரிவில் (1,409) என சிறப்புப் பிரிவு கலந்தாய்வு வருகிற 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும். ரேண்டம் எண் 791 மாணவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.”

இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :