பாபர் மசூதி தகர்ப்பு: சம்பவத்தை நேரில் பார்த்த செய்தியாளர்கள் விவரிக்கும் அதிர்ச்சியூட்டும் அனுபவங்கள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதித்தீர்ப்பை லக்னெளவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 30) அளிக்கவிருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவத்தை ஏற்படுத்திய அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் வழங்கப்படும் இந்த தீர்ப்பு, இந்தியாவில் அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பான காட்சிளை நேரில் பதிவு செய்த பத்திரிகையாளர்கள், நீதிமன்ற சாட்சியாக இருந்த பத்திரிகையாளர்கள் தங்களின் அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
"கூட்டத்தின் அடி என்றால் என்ன, கொள்ளை என்றால் என்னஎன அன்றுதான் புரிந்தது. என் தாடை உடைந்திருந்தது"
"இந்த சம்பவம் குறித்து நான் நிறைய எழுதியிருக்கிறேன், ஆனால் அந்த நேரத்தில், நான் என்ன உணர்ந்தேன் என்பதை இன்று வரை சரியாக சொல்ல முடியவில்லை"
" என்னை கொல்லவும் முயற்சித்தார்கள், ஆனால் எப்படியோ ஒரு கார் டிக்கியில் ஒளிந்துகொண்டு தப்பிக்க முடிந்தது"
"இந்த வழக்கில் நான் 19 வது சாட்சியாக இருந்தேன், எனது கடைசி சாட்சியம் 7-8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது"
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தங்கள் கண்களால் பார்த்த அந்த பத்திரிகையாளர்கள் வெளியிட்ட வார்த்தைகள்தான் இவை.
1992, டிசம்பர் 6, என்பது அடையாள கர சேவைக்காக நிர்ணயிக்கப்பட்ட நாள்.
ஆனால் அதற்கு முன்,இந்த கர சேவையின் ஒத்திகை, டிசம்பர் 5ஆம் தேதி கீதா ஜெயந்தி அன்றும் நடைபெற்றது.
இந்த கர சேவை, ஒரு அடையாள பூஜையாக இருந்தது, அதில் உத்தேச கோயிலின் இடத்தை மணல் மற்றும் சராயு நதி நீரில் கழுவ முடிவு செய்யப்பட்டது.
இந்த தேதிக்குள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கர சேவகர்கள் அயோத்தியை அடைந்தனர். அதில் பெண்களும் இருந்தனர் .
அமைதியான கர சேவையை மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதித்திருந்தது, அதன்படி மக்கள் ஒன்று கூடி பாடல்களைப் பாடுவதற்கும் அடையாள வழிபாட்டைச் செய்வதற்கும் முடியும்.
மறைந்த பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பேயி ஒரு நாள் முன்பு லக்னெளவில் நடைபெற்ற பேரணியில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி சேவை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அவரது இந்த உரையில், "அங்கு உள்ள கூர்மையான கற்கள் மீது யாரும் உட்கார முடியாது, தரையை சமதளப்படுத்த வேண்டும், யாகம் ஏற்பாடு செய்யப்படும்" என்றும் கூறியிருந்தார்.
அந்த நாட்களில் அயோத்தியின் சூழ்நிலை என்ன?
பிபிசிக்காக, இந்த சம்பவத்தை பற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ராமதத் திரிபாதி, சில நாட்களுக்கு முன்பாகவே அயோத்தியில் சூழல் மோசமடையத் தொடங்கியதாகக் கூறினார்.
அவரைப் பொருத்தவரை, "நவம்பர் 30 முதலே அங்கு சூழல் மோசமாக இருந்தது. கர சேவகர்கள் கல்லறையை இடித்திருந்தனர். பாபர் மசூதி இருந்த இடத்திற்கு பின் முஸ்லிம்கள் வசித்து வந்தனர். அங்கு கல்லறைகளும், மசூதிகளும் இருந்தன.வெளியேயிருந்து வந்த அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டனர். அவர்கள் மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தனர்."

பட மூலாதாரம், Getty Images
தலைவர்களிடமிருந்து வெவ்வேறு அறிக்கைகள் வந்ததால், அங்கு இருந்த கர சேவகர்களிடையே ஒருவித குழப்பம் நிலவியது. சிலர் இது அடையாள வழிபாடாக இருக்கும் என்றும் இன்னும் சிலர் அறிகுறியாக சில அறிக்கைகளை அளித்துக் கொண்டிருந்தனர்.
பல கர சேவகர்கள், பெரியதாக ஏதாவது நடக்க வேண்டும் என்று விரும்பினர், வெறும் மணல் போன்றவற்றால் வழிபடுவது மட்டும் போதாது என நினைத்தனர்.
ராமதத் கூறுகையில், "நானும் சக பிபிசி பத்திரிகையாளர் மார்க் டல்லியும் டிசம்பர் 6 ஆம் தேதி கர சேவக பகுதிக்கு சென்றபோது, அசோக் சிங்கலை (விஎச்பி தலைவர்) முற்றுகையிட்டு சில கர சேவகர்கள் மோசமாக நடந்து கொண்டனர் .அவரை மோசமான வார்தைகளால் திட்டினார், "நீங்கள் இந்த இயக்கத்தை அரசியலாக்க விரும்புகிறீர்கள், நாங்கள் கட்டமைப்பை உடைப்போம்." என்றனர்.
அதே நேரத்தில், மர்கஸ் செய்தித்தாளுக்காக கர சேவை பகுதிக்குச் சென்ற ஹிசாம் சித்திகி, "லக்னெளவின் கர சேவகர்களை சந்தித்தபோது எல்லாம் சாதாரணமாகத் தோன்றியது, உற்சாகமாக சிரித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் அடையாள வழிபாடு மட்டுமே செய்யப்படும் என்று சொன்னார்கள்" என்றார்.
டிசம்பர் 6, காலையில் என்ன நடந்தது?

அயோத்தி-ஃபைசாபாத்தில் இருந்து வெளிவரும் ஜன் மோர்ச்சா என்ற செய்தித்தாள் இந்த சர்ச்சையை, பல ஆண்டுகளாக விரிவான செய்திகளாக வெளியிட்டு வந்தது.
அந்த செய்தித்தாளின் பத்திரிகையாளர் சுமன் குப்தா ஃபைசாபாத்தில் இருந்து அயோத்திக்குச் சென்றபோது, "வழியில், மக்கள் பல இடத்தில் முகாமிட்டிருந்தனர். ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கார்களை நிறுத்தி அவற்றில் ஏறிக் கொண்டனர். அங்கு, கர சேவகர்கள் சாதாரண மக்களைத் நிறுத்தி தடுப்பூசி போடுவதோடு, அவர்களுக்கு லட்டுக்களை அளித்து, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல சொன்னார்கள்".
பாபர் மசூதியின் கிழக்கே சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ராம் கதா குஞ்ச் பகுதியில் ஒரு பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அனைத்து தலைவர்கள், மகான்கள், சாதுக்கள் இருந்தனர்.
அருகிலுள்ள கட்டடங்கள் பிறப்பு இடம், சீதா ராசோய் மற்றும் மானஸ் பவன் - இங்கிருந்து மசூதியை காணலாம், அங்கும் இந்த 'அடையாள கர சேவையை' காண வந்தவர்கள் இருந்தனர் .
கர சேவை நிர்வாகம் சீதா ரசோய் கட்டடத்தை அதன் மையமாக வைத்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையாளரும் அங்கு இருந்தார். டி.எம்-எஸ்.பி எல்லோரும் அங்கு இருந்தனர் .

பட மூலாதாரம், Getty Images
மானஸ் பவனின் கூரையில் பத்திரிகையாளர்கள் கூட்டம் இருந்தது. காவல்துறையும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.)தொண்டர்கள், கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்ய தயாராக இருந்தனர்.
பின்னர் ராஷ்ட்ரிய சஹாராவின் பத்திரிகையாளர் ராஜேந்திர குமார், "நான் காலை ஏழு மணிக்கு ராம் ஜன்மபூமி வளாகத்தை அடைந்தேன். அங்குள்ள வளாகத்தில், வழிபாடு நடக்கும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தடைகளை அமைத்திருந்தனர், ஒரு பக்கம் பெண்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸ் கட்டுப்பாடு அறை நிறுவப்பட்டிருந்தது. கண்காணிக்கும் கேமிராக்களும் இருந்தன. "
"சர்ச்சைக்குரிய வளாகத்திற்கு வந்து, வழிபாடு செய்ய வேண்டிய இடத்தையும் , ஏற்பாடுகளையும் காண வந்த உமா பாரதி, எல்.கே. அத்வானி, கல்ராஜ் மிஸ்ரா, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சின்ஹால், வினய் கட்டியார் ஆகியோரை நான் புகைப்படம் எடுத்தேன்." ராம்சந்திர பரமஹம்சாவும் அவருடன் இருந்தார். அப்போது எம்.பி.யாக இருந்த லல்லு மகாராஜ் மானஸ் பவனில் பத்திரிகையாளர்களுக்கு தேநீர் கொடுத்து கொண்டிருந்தார்.
காலை 9 மணி முதல், கூட்டம் மேடையில் தொடங்கியது. உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். கர சேவகர்கள் அங்கு வந்து கொண்டிருந்தார்கள்.
11 மணியளவில், கணிசமான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
பத்திரிகையாளர் ஹிஸாம் சித்திகி, "காலையில் மசூதிக்குப் பின்னால் உள்ள மைதானத்தில், மண்வெட்டிகளையும், தோண்டும் கருவிகளை வைத்துக் கொண்டு, அமர்ந்திருந்த சிலரைக் கண்டேன்," என்று கூறினார்.
ஹிஸாமின் கூற்றுப்படி, "அவர்கள் மராத்தி மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சக பத்திரிகையாளர் ராஜீவ் சாப்லே யுடன் இருந்தோம், இதெல்லாம் எதற்கு என்று அவர் கேட்ட போது, சிறிது நேரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள்."

'இன்னும் ஒரு முறை தள்ளுங்கள், பாபர் மசூதியை உடைத்து விடுங்கள் '
பாஜக மற்றும் வி.எச்.பி தலைவர்கள், சாதுக்கள் மற்றும் பலர் என மேடையில் அனைத்து முக்கியமானவர்களும் இருந்தனர்.
சுமன் குப்தா, "சுமார் 11 மணியளவில் நான் அசோக் சிங்காலையும் அவருடன் சிலர் வருவதையும் பார்த்தேன். அந்த நபர்கள் மேடையின் அருகே செல்வதைக் காண முடிந்தது. அவர் அங்கு வந்தவுடன், கரசேவகர்கள் பாபரி மீது ஏறத் தொடங்கினர்.மசூதிக்கு பின்புறம் ஒரு சாய்வு இருந்தது. அந்த பக்கத்தில்,பாதுகாப்பிற்காக, இரும்புக் குழாய்களால் தடை போடப்பட்டிருந்தது.ஆனால் பலர் அதே இரும்புக் குழாய்களில் ஏறி உடைக்க தொடங்கினர். கரசேவைக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அவர்கள் மசூதி மீது ஏற தொடங்கினர்.
200-250 பேர் மசூதியை நோக்கி ஓடி முழு வளாகத்திலும் கோஷங்களை எழுப்பினர் என்று ராம்தத் திரிபாதி கூறினார். கர சேவகர்களுக்காக அங்கு முகாம்கள் அமைக்கப்பட்டன, எனவே மண்வெட்டி, கோடாரி போன்ற கருவிகள் இருந்தன. சிலர் இந்த கருவிகளுடன் ஓடினார்கள்.
இந்த நிகழ்வு செய்தி சேகரிப்புக்காக பிபிசியிலிருந்து வந்திருந்த கபார்ன் அலி, "சில ஆர்எஸ்எஸ் ஊழியர்களும், பாபரிக்குள் நுழைவோரைத் தடுக்க முயன்றனர்" என்று கூறினார்.
"ஆரம்பத்தில், லால் கிருஷ்ண அத்வானியும் அவர்களை தடுக்க முயற்சித்தார், ஆனால் உமா பாரதி ,சாத்வி ரித்தம்பாரா போன்ற சில தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்," என்று அவர் தெரிவித்தார்.
சரத் பிரதான் கூறுகையில், "இன்னும் ஒரு முறை தள்ளுங்கள், மசூதியை உடையுங்கள் " என்று சொல்லியவர்களும் அங்கு இருந்தனர் .
முதல் குவிமாடம் மதியம் இரண்டு மணியளவில் விழுந்தது, அதை உடைக்க அதிக நேரம் எடுத்தது. தடிமனான கயிறுகள் வழியாக குவிமாடங்கள் இழுக்கப்பட்டன . சிலர் கருவிகளுடன் அடித்தளங்களை தோண்டுவதில் மும்முரமாக இருந்தனர்.
முதல் குவிமாடம் விழுந்தபோது சிலர் அதன் கீழே புதைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.
ஹிஸாம் சித்திகி, "ஒரு கர சேவரின் கையில் இருந்து ரத்தம் பாய்வதை நான் கண்டேன், ஓருவர் கையை உடைந்திருந்தது, சிலர் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன, ஆனால் அதையும் மீறி அவர்கள் முழு ஆர்வத்துடன் மசூதியை உடைப்பதில் மும்முரமாக இருந்தனர்" என்று கூறினார்.
"ஒருபுறம், மக்கள் மசூதியில் ஏறத் தொடங்குகிறார்கள், உடைக்கத் தொடங்குகிறார்கள், அதே நேரத்தில் சில கார் சேவகர்கள் பத்திரிகையாளர்களைத் தேடத் தொடங்குகிறார்கள். எந்தவொரு செய்தியும் இங்கிருந்து வெளியேறக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்" என்று விளங்கியது.
அதுவும் குறிப்பாக கேமிராக்கள் வைத்திருந்த பத்திரிகையாளர்கள் அவர்களின் இலக்காக இருந்தது.

'ஊடகத்தினர் மோசமாக தாக்கப்பட்டனர்'
ராஜேந்திர குமார், கூட்டத்தினரின் அடி என்ன, கொள்ளை அடிப்பது என்றால் என்ன என்று அன்றுதான் நேரில் அனுபவித்தேன் என்று கூறுகிறார்.
"நான் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது, கர சேவகர்கள் என்னைப் பிடித்து அடிக்க தொடங்கினார்கள். மற்ற பத்திரிகையாளர் தோழர்களும் தாக்கப்படுவதை நான் கண்டேன். என் தாடை உடைந்து நான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டேன்."
பிபிசி அணியிலும் இதேதான் நடந்தது. பிபிசியின் மார்க் டல்லியுடன் இருந்த ராம்தத் திரிபாதி மற்றும் குர்பான் அலி இருவரும் இதை உறுதிப்படுத்தினர்.
குர்பான் அலி "நாங்கள் மார்க் டல்லியைக் காப்பாற்ற முயற்சித்தோம். பின்னர் கூட்டத்தில் இருந்த ஒருவர் கர சேவை நடக்கிறது , இப்போது அவர்களைக் அடிக்க வேண்டாம், இல்லையென்றால் கர சேவையில் இடையூறு ஏற்படும் என்று சொன்னார். எனவே எங்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். நாங்கள் 3-4 மணி நேரம் அங்கேயே இருந்தோம். அதாவது மதியம் 3 மணி முதல் சுமார் 7 மணி வரை," என்று தெரிவித்தார்.
ஜன் மோர்ச்சா பத்திரிகையாளர் சுமன் குப்தா அவருக்கு நடந்ததை பற்றி கூறுகிறார். அவர் தனது உடைகள் கிழிந்ததாகவும், அவரைக் குத்த முயன்றதாகவும் கூறினார்,
ஆனால் திடீரென்று இரண்டு பேர் கைகளை கட்டினர், அவரை பிடித்து வைத்திருந்த கரசேவகர்களுக்கு இடையே இருந்து பின் தப்பித்தார். இதற்குப் பிறகு,அவர்கள் கவனம் சிதறியது, அவர் எப்படியோ ஓடி, ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார்.
சமூக சேவகர் நிர்மலா தேஷ்பாண்டே, அவரை தனது கார் டிக்கியில் ஒளிந்து வைத்து, ஃபைசாபாத்துக்கு அழைத்து சென்றார்.
ஹிஸாம் சித்திகியின் வார்த்தைகளில், "இந்த சம்பவம் குறித்து நான் நிறைய எழுதியுள்ளேன், ஆனால் அங்கு நான் என்ன உணர்ந்தேன் என்பதை மட்டும் என்னால் இன்று வரை சொல்ல முடியவில்லை.
"பத்திரிகையாளர்களின் கேமிராக்கள் பறிக்கப்பட்டு, அவை உடைக்கப்பட்டன.
ஆனால் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தபோது, காவல்துறையும் நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருந்தன?
'இது ஒரு உள் விஷயம், காவல்துறை எங்களுடன் உள்ளது'

ராஜேந்திர குமார் கூறுகையில், கரசேவர்கள் கட்டமைப்பின் மீது ஏறத் தொடங்கியபோது, சிஆர்பிஎஃப் ஜவான்கள் காட்டிய வேகம் இரண்டு-மூன்று நிமிடங்கள் மட்டுமே .
அவர் கூறுகிறார், "அவர்கள் ஏறிக்கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், இது தொடர்ந்தகே கொண்டிருந்தது . அவர்களைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை ஏதும் பின்பற்றப்படவில்லை."
மசூதியின் பாதுகாப்பில் ஏற்கனவே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். சிஆர்பிஎஃப் வீரர்களும் அங்கிருந்தனர். ஆனால் அங்கே கர சேவகர்கள் அவர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர்,பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சில நிமிடங்களில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சாட்சியாக இருக்கும் பத்திரிகையாளர் ஷரத் பிரதான், ஒரு சிஆர்பிஎஃப் டிஐஜி மசூதியிலிருந்து வெளியே ஓடுவதை அவரே பார்த்ததாக கூறுகிறார்.
அங்குள்ள கூட்டத்தை கலைக்க எந்தவிதமான துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும் வேறு தீர்வு ஏதும் காணப்படவில்லை என்றும் அனைத்து பத்திரிகையாளர்களும் கூறினார்.
குர்பான் அலி கருத்துப்படி, "அங்கு இருந்த டி.எம் அல்லது எஸ்.எஸ்.பி-யும் 'மென்மையாகவே' இருந்தனர். பாபர் மசூதி இடிந்து கொண்டிருந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் தங்களது இடத்தில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தனர். பின்னர் இதே எஸ்.பி தான் மக்களவைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்."
அவர் கூறினார், "பிரபல புகைப்பட பத்திரிகையாளர் பிரவீண் ஜெயின் இரண்டு-மூன்று நாட்கள் அங்கு இருந்தார், டிசம்பர் 6 க்கு முன்பு நடந்த ஒத்திகையின் படங்களை அவர் எடுத்திருந்தார். இந்த முறை மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்திருந்தனர் . அவர்களுக்கு அரசின் மீது எதிர்பார்ப்பு இருந்ததால், எந்த அச்சமும் இருக்கவில்லை . மாறாக, ஒரு முழக்கம் இருந்தது - இது ஒரு உள் விஷயம், காவல்துறை எங்களுடன் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ,1990 ஆம் ஆண்டில் முலாயம் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல இப்போது எடுக்கப்படாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

மத்திய அரசு அனுப்பிய பாதுகாப்பு ஒரு முழு நாள் கூட இருக்கவில்லை
சிஆர்பிஎஃப் (மத்திய ரிசர்வ் காவல் படை) 200 படையணிகளை மத்திய அரசு அனுப்பியிருந்தது, ஆனால் அவை அயோத்திக்கு வெளியே ஃபைசாபாத் கன்டோன்மென்ட் பகுதியில் நிறுத்தப்பட்டன. அவர்கள் மாநில அரசின் அனுமதியின்படி மட்டுமே செல்ல வேண்டியிருந்தது.
ராமதத் திரிபாதி கூறுகையில், "வயர்லெஸிலிருந்து மத்தியப் படைக்கு செய்தி கிடைத்ததும், நீங்கள்தான் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் மாஜிஸ்திரேட்- யிடம் சொன்னார்கள், ஏனெனில் படை தானாகவே செல்ல முடியாது. ஆனால் மாநில அரசோ டி.எம் அவர்களோ உத்தரவிடவில்லை.தடியடி அல்லது துப்பாக்கி சூடு கூடாது, நீங்கள் வேறு வழியில் நிறுத்த முடிந்தால் நிறுத்துங்கள் என்று கூறப்பட்டது . இதை RAF (ரேபிட் ஆக்சன் ஃபோர்ஸ்) தளபதி பி.எம். சரஸ்வத் தெரிவித்தார்.
ராம்தத் ஒரு நிர்வாக ஐயத்தை எழுப்புகிறார், சட்டத்தின்படி, அமைதி காக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் உள்ளது, எனவே அவர்கள் யாரையும் கேட்க வேண்டியதில்லை. ஆனால், முதலமைச்சர் என்ன சொல்கிறார், பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அதனால் அவர்களுக்கு தனது முடிவை எடுக்க சுதந்திரம் இல்லை என்பதும் அவர்களுக்குள் விருப்பம் இல்லாததும் தெளிவாகிறது.
ராமதத்தின் கூற்றுப்படி, "டிசம்பர் 6 ஆம் தேதி காலை 11 மணி வரை எல்லாம் இயல்பாக உள்ளது என்று அறிக்கை அளிக்க வேண்டிய கடமை மொராதாபாத்தின் மாவட்ட நீதிபதி பிரேம் சங்கருக்கு இருந்தது."
மத்திய அரசால் அனுப்பப்பட்ட பாதுகாப்பு படைகள் நாள் முழுவதும் அங்கு செல்ல முடியவில்லை மற்றும் அனைத்து குவிமாடங்களும் நான்கு-ஐந்து மணியளவில் உடைக்கப்பட்டு விட்டன. உமா பாரதி, மகிழ்ச்சியை வெளிப்படுத்த முரளி மனோகர் ஜோஷியின் முதுகில் ஏறிய புகைப்படமும் அந்த நாட்களில செய்தித்தாள்களில் வெளியானது.
பத்திரிகையாளர்கள் கூறுகையில், இந்த வளாகம் இடிந்து விழுந்தபோது, மாலை வரை எந்த தலைவரும் அதை நோக்கி வரவில்லை. லல்லு ஜி மகாராஜைக் கூட பார்க்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
நிலம் தரை மட்டமானது
ராஜேந்திர குமார் கூறுகையில், "கட்டமைப்பை இடித்தபின், கரசேவகர்கள் அனைத்து கற்களையும் அகற்றத் தொடங்கியதை கண்டோம். நிலத்தை சமன் செய்யும் ஒரு வேலை தொடங்கியது. இது ராம்சந்திர பரமஹம்சாவின் மேற்பார்வையில் நடந்தது. மாலைக்குள்,அதை சமப்படுத்தி ஒரு எல்லை உருவாக்கப்படும். " அந்த மக்கள் ராமலல்லாவின் குழந்தை வடிவத்தின் சிலையையும் வெளியே எடுத்தாகவும், அதன் பிறகு கயிறு, மூங்கில், கூடாரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தற்காலிக கோயிலை உருவாக்கியதாகவும் ராமதத் கூறினார்.
குர்பான் அலி, "அரசு ஊடகங்கள், அதாவது அகில இந்திய வானொலி சர்ச்சைக்குரிய கட்டமைப்பிற்கு ஏதோ 'சேதம்' ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது, ஆனால் அவர், பிபிசி உருதுவில், அங்கே எதுவும் மிச்சமில்லை, இடிபாடுகளின் குவியல் மட்டுமே என்று அவர் அறிக்கை அளித்தார்.

பட மூலாதாரம், AFP
டிசம்பர் 7 அன்று என்ன நடந்தது?
பத்திரிகையாளர் ராஜேந்திர குமார், "அடுத்த நாள் நான் சென்றபோது, எல்லையை நிர்மாணிக்கும் பணிகள் நடந்து கொண்டிருப்பதைக் கண்டேன், அவர்கள் அந்த வேலையை மாலைக்குள் முடித்துவிட்டார்கள். ஆனால் பின்னர் இரவு 11 மணியளவில்,போலீஸ் வரலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டதால்,மக்கள் வெளியே வரத் தொடங்கினர். சில சாதுக்கள் கைது செய்யப்பட்டனர். 7ஆம் தேதிக்குள், அவர்கள் இதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர்."
ஏழாம் தேதி கரசேவகர்கள் வெளியேறத் தொடங்கியதாக ஹிசாம் சித்திகி கூறுகிறார். கல்யாண் சிங்கின் அரசு ரத்து செய்யப்பட்டது. இப்போது அந்த இடத்தை சிஆர்பிஎஃப் கையகப்படுத்தியது.
1992 டிசம்பர் 8 ஆம் தேதி அச்சிடப்பட்ட ஒரு படத்தைப் பற்றி குர்பான் அலி கூறினார், "இந்த படம் முதலில் அங்கு வந்த ஒரு சிஆர்பிஎஃப் ஜவானின் படம், அவர் கூடாரத்தில் இருந்த அந்த தற்காலிக கோவிலுக்கு முன்னால் காய் குவித்து வணங்கினார்."
கர சேவகர்களின் நம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images
ஷரத் பிரதான் விளக்குகிறார், "கரசேவகர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்தார்கள், ஏனென்றால் ஆந்திராவில் இருந்து கரசேவகர்களின் ஒரு குழு அப்போதுதான் வந்திருப்பதாக மைக் -ல் அறிவிக்கப்பட்டது , இப்போது மேற்கு வங்கத்திலிருந்து கார்சேவா குழு, இப்போது ஹரியாணாவிலிருந்து, ஒரிசாவிலிருந்து வருகிறது என அறிவிப்பு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமானோர் இருந்தனர். ஏராளமான சேனைக்காரர்கள் இருந்தனர். "
பத்திரிகையாளர்களின் கூற்றுப்படி, கர சேவகர்கள் மசூதியை உடைக்கும் பணியை மட்டுமல்லாமல், மசூதிக்கு பின்னால் உள்ள முஸ்லீம் சுற்றுப்புறங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர்.
மக்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது, மக்கள் தாக்கப்பட்டனர். சிலர் உயிரையும் இழந்தனர்.
ராமதத் திரிபாதி கூறுகையில், "இந்த வன்முறை வெளியூர்களிலிருந்து வந்தவர்களால் செய்யப்பட்டது என்று அங்குள்ள உள்ளூர் முஸ்லிம்கள் கூறினர். ஏனென்றால் உள்ளூர் இந்துக்களுடன் முஸ்லிம்களுக்கு நல்ல உறவு இருந்தது, கோயில் இயக்கத்தைச் செய்தவர்களுடனும் தான் . அவர்களே முஸ்லிம்களை காப்பாற்றினர். "
'மதசார்பின்மை இந்தியாவில் முடிவடைந்து விட்டதா?'
'எங்கள் முகத்தைக் காட்ட லாயக்கில்லாமல் போய் விட்டோம் என அழுதுகொண்டிருந்த ஏராளமான மக்களும் சில சாதுக்களும் காணப்பட்டதாக ஹிசாம் சித்திகி கூறுகிறார்.இது ஒரு, ஒருதலைபட்ச விஷயம் அல்ல.
ராஜேந்திர குமார் கூறுகையில், அவர் தாக்கப்பட்டபோது, ஒரு முதியவர் அவரைக் காப்பாற்றி கூட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர் யார் என்று தெரியாது என்றார் .
குர்பான் அலி கூறுகையில், பக்காவாஸ் வாத்தியம் வசிக்கும் ஒரு பாபா பாகல்தாஸ், இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் என்ன நல்ல காரியத்தை செய்தார்கள் என்றார். அவர் சொன்னார், "பன்முகத்தன்மை நிறைந்த இந்த நாடு இந்த அதிர்ச்சியைத் தாங்கும் என்று நான் நம்பினேன். அதுவும் சரி என்று நிரூபணமானது ஏனென்றால் மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்தியாகேட் வாயிலில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர், அவர்களில் முஸ்லிமல்லாதவர்கள் அதிகம் இருந்தனர். அவர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர், அப்போது எல்லாம் இன்னும் முடியவில்லை என்று உணர்ந்தோம்."
பிற செய்திகள்:
- ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: உயிருக்கு போராடிய 19 வயது பெண் டெல்லியில் உயிரிழப்பு
- திருவொற்றியூர், குடியாத்தம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணைய முடிவுக்கு என்ன காரணம்?
- அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?
- 'சூனிய வேட்டை' - இந்தியாவில் பணிகளை நிறுத்திய சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
- கொரோனா: விஜயகாந்த் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












