அயோத்தி ராமர் கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பத்ரி சேஷாத்ரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
(இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோதி நாட்டினார். உணர்ச்சிப்பூர்வமான ஓர் உரையை நிகழ்த்தினார். நாடெங்கிலும் ஓர் உணர்வெழுச்சி இருந்தது என்பது பல்வேறு செய்திகளின்மூலம் தெரிகிறது.
ராம ஜென்மபூமி போராட்டம் நிகழ்ந்து வந்த காலத்தில் இதற்கான எதிர்ப்பு இரு தரப்பிலிருந்து வந்தது. ஒன்று இஸ்லாமியர்கள் தரப்பு. இரண்டாவது, இடதுசாரி லிபரல் தரப்பு. இஸ்லாமிய தரப்பின் முதன்மை வாதம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்பது. இடதுசாரி லிபரல் தரப்பின் முதன்மை வாதம், மதச்சார்பின்மையின் அடிப்படையிலானது.
ராமர் கோயில் இருந்து அதனை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தாலுமேகூட, சுதந்தர இந்தியாவில் இவ்வாறு ஒவ்வொரு மத வழிபாட்டிடத்துக்கும் ஒரு குழு சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தால், மத நல்லிணக்கம் பாதிக்கப்படும். வரலாற்றில் பின்னோக்கிப் போய், நடந்த அனைத்தையும் மாற்ற முயலக்கூடாது. இருப்பதை அப்படியே விட்டுவிடவேண்டும்.
அரசியல் தளத்தில் விஸ்வ இந்து பரிஷத் ஆரம்பித்து வைத்த இந்தப் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்ஸும் பாரதிய ஜனதா கட்சியும் முன்னெடுத்தன. அதே நேரம் இந்திய நீதிமன்றங்களில் ஆமையைவிட மெதுவாக வழக்கு முன்னேறிக்கொண்டிருந்தது. அத்வானியின் ரத யாத்திரையும் இரண்டு ஆண்டுகள் கழித்து கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதும் நிச்சயமாக நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பை பாதித்தன.
பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால், அலகாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இதே தீர்ப்பை கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. அதாவது பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் இராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்ற தீர்ப்பை.
மத்தியில் பாஜக ஆட்சியை முதலில் பிடித்ததற்கும் இன்று மிக வலுவாக தன்னை நிலைநாட்டியிருப்பதற்கும் அயோத்தி ராமர் கோயில் விவகாரம், மிக முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவின் பெரும் பகுதியில் பாஜக இன்று பரவியிருப்பதற்கான விதை ராமஜன்மபூமி போராட்டம்தான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஆனால், இந்த விஷயத்தில் தென் மாநிலங்கள், வட மாநிலங்களுக்கு மாற்றாக இருக்கின்றன.
இன்றுவரை பாஜகவும் அதன் இந்துத்துவ அரசியலும் கர்நாடகம் தாண்டி முன்னேறவில்லை. முக்கியமாக தமிழகத்தில் பாஜகவும் இந்துத்துவமும் கால் பதிக்கவில்லை.
பெரியாரின் திராவிட இயக்கமும் அதன் கடுமையான நாத்திக பிரசாரமுமே இதற்கான ஒரு முக்கிய காரணம், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பெரியாரின் நாத்திக பிரசாரத்துக்கு இணையான ஓர் இயக்கம் இருந்திருக்கவில்லை.
பெரியாரின் நாத்திக பிரசாரம், இந்து மதத்தையே குறிவைத்துத் தாக்கியது. இந்து மதத்தின் நம்பிக்கைகள், இந்துப் புராணங்களின் அதீதமான கதைகள், இந்து சமூகத்தின் சாதி வருண அமைப்பு, தீண்டாமை ஆகியவற்றை பெரியாரின் சுய மரியாதை இயக்கம் கடுமையாகத் தாக்கியது. அதே நேரம் அந்த தாக்குதல் பிராமண எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என்றும் நீண்டது. இவை அனைத்துக்கும் தமிழகம் முழுவதும் பரவலான ஆதரவு இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசியல் சமூகத் தளத்தில் யாரை எதிர்ப்பதாக இருந்தாலும் பெரியார் காலத்திலும் சரி, இன்றும் சரி, அவர்களை எளிதில் பார்ப்பனர், பார்ப்பன ஆதரவாளர், இந்து சனாதனி, சாதியவாதி, மனுவாதி என்று முத்திரை குத்தினால் போதும். பெரியார் காங்கிரஸ் கட்சியை இப்படித்தான் முத்திரை குத்தி வீழ்த்தினார். திமுக ஆட்சிக்கும் வந்தது. திமுக இன்றுவரை தன்னை பெரியார் இயக்கத்தின் நீட்சியாகத்தான் பார்க்கிறது.
தமிழகமெங்கும் இந்துக் கோவில்கள் நிரம்பி வழிந்தாலும், 'இந்து ஒருங்கிணைப்பு' என்பது இங்கு நிகழவில்லை. அது தமிழக அரசியலுக்குத் தேவையாக இருக்கவில்லை. சாதி ஒருங்கிணைப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது.
இந்துத்துவத்துக்கும் பாஜகவுக்கும் எதிரான இந்த மூன்றாவது தரப்பு உண்மையில் தமிழகத்தில் மட்டும்தான் இன்று உள்ளது. அதன் காரணமாகவே அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டப்படும்போது, தமிழகத்தில் 'இது இராவணன் பூமி' என்ற முழக்கம் சமூக வலைத்தளங்களில் தென்பட்டது.
பெரியார் இராமனையும் இராமாயணத்தையும் நேரடியாகத் தாக்கினார். அவரை இலக்கிய ரசனை கொண்டவராகக் கருத முடியாது. ஆனால் எழுத்தாளரான அண்ணாவுமே கம்பரசம் என்ற புத்தகத்தை எழுதி, கம்பராமாயணத்தில் எங்கெல்லாம் அல்குலும் மார்பும் சொல்லப்பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி விளக்கிக்கொண்டிருந்தார்.
ஊரெங்கும் மேடைகள் போடப்பட்டு இராமாயணம் கேலி செய்யப்பட்டது. ஊர்வலங்களில் இராமர், சீதை படங்கள் இழிவுபடுத்தப்பட்டன. புலவர் குழந்தை, இராவண காவியம் என்ற காப்பிய நூலை எழுதி பெரியார் அதனைத தன் இதழில் தொடராக வெளியிட்டார்.
அதில் இராவணன்தான் பாட்டுடைத் தலைவன். இராமன் எதிர் நாயகன். இவற்றைப் பற்றி பொதுமக்களும் கவலைப்படவில்லை. ஆட்சியாளர்களும் சட்டை செய்யவில்லை.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை திமுக கொண்டுவந்தபோது, "இராமர் கட்டிய பாலத்தை உடைக்கும் செயல்" என்று அதற்கான பெரும்பான்மை எதிர்ப்பு தமிழகத்துக்கு வெளியிலிருந்துதான் வந்தது.
தமிழகத்தில் மிகக் குறைவான எதிர்ப்புதான் இருந்தது. தமிழகத்தின் எதிர்ப்புமே மத அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. சுற்றுச்சூழல், பவளப்பாறைகளின் பாதுகாப்பு, பொருளாதார வீணடிப்பு என்ற வகையின்கீழ்தான் இருந்தது.
திராவிடர் கழகத்தின் வலு இன்று குறைந்துள்ளது. திமுக தன் இந்து மத எதிர்ப்பைக் குறைத்துக்கொண்டிருக்கிறது.
ஆளும் அதிமுகவினர் வெளிப்படையாகவே தங்கள் கடவுள் பக்தியை வெளிக்காட்டுகின்றனர். ஆனாலும் இராமர் கோவில் போராட்டம் என்பதைத் தமிழகத்தில் வெகு சிலர்தான் வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். அப்படி ஆதரிப்பவர்களின் வாக்குகள்கூட பாஜகவுக்கு முழுமையாகப் போய்ச்சேருமா என்பது சந்தேகமே.
இந்நிகழ்வை இந்து எழுச்சி அல்லது இந்துக்களின் ஒருங்கிணைப்பு என்று இந்துத்துவர்கள் மகிச்சியுடன் பார்க்கின்றனர். மதச்சார்பின்மையின் வீழ்ச்சி என்று இடதுசாரி லிபரல்கள் வருந்துகின்றனர். இஸ்லாமியத் தரப்பு என்ன என்பது வெளிப்படையாக இன்னமும் தெரியவில்லை.
ஒருவேளை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிற்பாடு அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், தமிழகத்தில் பெரும்பாலும் இப்பெரு நிகழ்வின் எந்தத் தாக்கமும் இல்லாமல் இருப்பதுபோலவே எனக்குத் தோன்றுகிறது.
இந்துத்துவமும் பெரியாரிய திராவிடமும் இரு எதிரெதிர் துருவங்கள். இந்துத்துவம் இந்தியாவை ஒற்றை நிலப்பரப்பாக, ஒற்றைக் கலாசார நிலமாகப் பார்க்கிறது. திராவிடம் தென்னிந்தியாவைத் தனியான பகுதியாக, தனித்த வரலாறு கொண்டதாக, மதமற்றதாக அல்லது தனியான தமிழர் மதத்தைக் கொண்டதாகப் பார்க்கிறது. சமஸ்கிருதத்தின் தாக்கம் இல்லாததாக, சமஸ்கிருதத்தைவிடச் சிறந்ததாகத் தமிழ் மொழியைக் காண்கிறது.
"இந்துத்துவம்" இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக சமஸ்கிருதத்தைக் காண்கையில், திராவிடம் தமிழைத் தென்னிந்திய மொழிகளின் தாயாக, மிகப் பழமை வாய்ந்ததாகக் காண்கிறது. தமிழை அழிக்கவந்த மொழியாக அது சமஸ்கிருதத்தை காண்கிறது. சிந்து நாகரிகத்தைத் தன்னுடையதாக திராவிடம் தற்போது காண்கிறது. அந்த நிலங்களை விட்டு சமஸ்கிருதம் பேசும் ஆரியர்கள் திராவிடர்களை, தமிழர்களைத் துரத்திவிட்டதாக திராவிட கருத்தாக்கம் சொல்கிறது.
இந்த கருத்தாக்கங்கள் தமிழகத்தில் ஆழமாகப் பரவியிருக்கும்வரையில் தமிழக அரசியல் சமூகப் பார்வையில் பெரும் மாற்றம் ஏற்படாது. தமிழகம் இந்திய மையக் கண்ணோட்டத்திலிருந்து விலகியே இருக்கும்.
பிற செய்திகள்:
- இலங்கையில் வரலாற்று வெற்றியை தனதாக்கியது ராஜபக்ஷ சகோதரர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி
- மு. கருணாநிதியின் மரணத்தின்போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?
- முன்னாள் அதிகாரியை கொல்ல கனடாவிற்கு கொலை கும்பலை அனுப்பினாரா சௌதி இளவரசர்?
- லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்திற்கு `அரசின் அலட்சியமே காரணம்`
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












