மு. கருணாநிதி: “முடிவற்றவற்றுள் கடைசி” - கருணாநிதியின் மரணத்தின் போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?

மு.கருணாநிதியின் மரணத்தின் போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?
    • எழுதியவர், மு.நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் சென்னையில் மரணமடைந்தார்.

மு.கருணாநிதியின் மரணத்தின் போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?

அவரின் மரணத்தை பெரும்பாலான இந்திய ஆங்கில நாளிதழ்கள் முதல் பக்கத்தில் முதன்மை செய்தியாக வெளியிட்டன.

குறிப்பாக வட இந்தியாவில் கணிசமான வாசகர்களைக் கொண்ட நாளிதழ்கள் எப்படி செய்தி வெளியிட்டன என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

"முடிவற்றவற்றுள் கடைசி"

கட்டுரைகளின் தலைப்புக்காகப் பெயர் பெற்ற தி டெலிகிராஃப் நாளிதழ், "முடிவற்றவற்றுள் கடைசி" என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் கருணாநிதியின் புகைப்படத்தையும், செய்தியையும் வெளியிட்டது.

முடிவற்றவற்றுள் கடைசி

பட மூலாதாரம், The Telegraph

மேலும் பன்மைத்துவ இந்தியாவுக்கான திராவிட தலைவர் என்ற தலைப்பில் நான்காம் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பைச் சுருக்கமாக, கொல்கத்தா சமூக அறிவியல் கல்வி மையத்தின் உதவி பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகரன் எழுதி இருந்தார்.

"குடும்பத்தை விட திராவிட அரசியலையே பெரிதும் நேசித்தார்" எனும் தொடங்கும் அந்தக் கட்டுரையில், 1948ஆம் ஆண்டு முதல் மனைவி பத்மாவதி மரணப்படுக்கையில் இருந்தபோது, கட்சி கூட்டத்திற்குச் சென்றார். திரும்பி வரும் போது, அவர் மனைவி உயிரிழந்துவிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினான்கு வயதிலேயே கருணாநிதி, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருந்தாலும், சிறுபான்மையினருக்கான கட்சியாக இன்றும் திமுக பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடும் கட்டுரையாளர், கடைசி காலம்வரை மதசார்பற்ற கொள்கைகளுக்காக, பன்மைத்துவத்திற்காக, கூட்டாட்சி தத்துவத்திற்காக உழைத்தார். அப்படியே கூட்டணியே வைக்கப்பாடுப்பட்டார் என அந்தக் கட்டுரை முடிகிறது.

'திராவிட சூரியன் அஸ்தமித்தது'

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், 'திராவிட சூரியன் அஸ்தமித்தது' என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

மு.கருணாநிதி:

பிரசாந்த் ஜா, சி.எஸ் கோடீஸ்வரன் மற்றும் எம் மணிகண்டன் இணைந்து இந்தக் கட்டுரையை எழுதி இருந்தனர். இதில் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சைகள், மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த மக்கள், தலைவர்களின் இரங்கல் உள்ளிட்ட செய்திகள் இடம் பெற்றிருந்தன.

பதினோராவது பக்கத்தில் இடம் பெற்றிருந்த செய்தியில், ஜனநாயகத்தை ஆழமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் செய்த ராஜதந்திரி என்ற தலைப்பில் பிரசாந்த் ஜா ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

காங்கிரஸ் வடக்கு மேலாதிக்கத்தை நிறுவ முயன்ற போதெல்லாம் எதிர்த்த தலைவர் என்றும், கூட்டாட்சியை மேம்படுத்த உழைத்த தலைவர் என்றும், சமூக நீதியை அரசியலில் முக்கிய கொள்கையாக மாற்றிய தலைவர் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

மேலும், மத்திய அரசை வடிவமைப்பதில் எப்போதும் கருணாநிதி ஒரு முக்கிய பங்கு வகித்தார் என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு தோழன் மற்றும் எதிரி என மற்றொரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதில் இரண்டு கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்த சூழல், எதிர்த்த சூழல் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

ஒளரங்கசீப் எழுதிய இந்தக் கட்டுரையில், அப்போதைய பிரதமர் இந்திராவால் 1976ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, பின்னர் 1980ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என்று அப்போது கருணாநிதி கூறியது, அது போல பா.ஜ.கவுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பொடா சட்டம் (POTA) சமயத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, அங்கிருந்து வெளியேறி 2004ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றது, பின்னர் 2013 ஆம் ஆண்டு காங்கிரஸுடன் ஏற்பட்ட பிணக்கு ஆகிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

அது போல இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்திய மரியாதைக்குரிய தமிழன் என்ற தலைப்பிலும், டெல்லியால் மரியாதையாகவும், பாசமாகவும் நடத்தப்பட்ட தலைவன் என்ற தலைப்பிலும் கட்டுரைகள் இடம்பெற்று இருந்தன.

ஒரு டைட்டன் புறப்பட்டது

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், "ஒரு டைட்டன் புறப்பட்டது" (A Titan Departs) என்ற தலைப்பில், முதல் பக்கத்தின் முகப்பில் கருணாநிதியின் பூத உடல் எடுத்து செல்லும் வாகனத்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.

செய்தியாளர் அருண் ஜனார்த்தனன் அன்று நடந்த நிகழ்வுகளை ஒரு கட்டுரையாகவும், எழுத்தாளர் வாஸந்தி எழுதிய 'ஜனநாயகவாதி மற்றும் கேள்விக்கு அப்பாற்பட்ட தலைவர்' என்ற தலைப்பில் எழுதிய நடுப்பக்க கட்டுரையில், வெகுஜன தலைவராகவும், அரசியல்வாதிகளுக்கான அரசியல்வாதியாகவும் கருணாநிதி இருந்தார் என குறிப்பிடுகிறார்.

அண்ணாவுக்கு அடுத்து கட்சி பொறுப்பை ஏற்றது, எம்.ஜி,ஆர் உடனான பிணக்கு, கருணாநிதி கைது, 2G வழக்கு, ராமானுஜர் தொடர்பாக தொடர் எழுதியது ஆகிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

'தி கொலொசஸ்' என்ற தலைப்பில் அந்நாளிதழ் தலையங்கமும் எழுதி இருந்தது. மாபெரும் ஆற்றல் உடைய தலைவரைக் குறிக்க கொலொசஸ் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

'தமிழகத்தின் தலைவிதியை எழுதிய...'

முதல் பக்கத்தில் கருணாநிதி இறந்த செய்தியையும், பத்தாவது பக்கத்தில் தமிழகத்தின் தலைவிதியை எழுதிய திரைக்கதை ஆசிரியர் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தது தி ஸ்டேஸ்மேன் நாளிதழ்.

""தி ஹான்ஸ் இந்தியா" நாளிதழ் திராவிட அரசியலில் பெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்ற திமுக தலைவர் என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.

இது தவிர்த்து காஷ்மீர் டைம்ஸ், தி சீக் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தியை வெளியிட்டு இருந்தன.

`இந்திய அரசியலை உலுக்கிய வார்த்தை வித்தகர்,` என்ற தலைப்பில் பிபிசி கட்டுரை வெளியிட்டது. இந்த கட்டுரையை சுதா ஜி திலக் எழுதி இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: