அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: சர்ச்சை நாளாகுமா அக்டோபர் 7?

பட மூலாதாரம், Facebook
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய கூட்டங்களில் தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும், அதிமுக கட்சி முக்கிய கூட்டத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் பற்றி அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என நேற்று (செப்டம்பர் 28) அறிவிப்பு வெளியான பின்னர், முக்கிய கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
2021ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் ஆகஸ்ட் மாதம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் பன்னீர்செல்வம் ,துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கூட்டறிக்கையில், முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவை கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் அது குறித்து யாரும் விவாதிக்கவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வண்ணம் செயற்குழு கூட்டத்தில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, அக்டோபர் 7ம்தேதிவரை காத்திருக்கும் நிலைக்கு அதிமுக தொண்டர்களை தள்ளியுள்ளது.
அதிமுக அமைச்சர்களோ, எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சமமாக பார்ப்பதாக கூறுகின்றனர். உண்மையில் செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும், அந்த கூட்டத்தின் தாக்கம் என்ன என இந்த விவகாரங்களை நெருக்கமாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
தலைமை செயலகத்தில் நடந்த கொரோனா ஊரடங்கு குறித்த கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் வரவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், அவர் தனக்கான பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
''பன்னீர்செல்வம் கடந்த ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டார் என்பதை பார்க்க வேண்டும். அவர் தனது மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும் என்பதை உறுதி செய்தார். தன்னுடன் பயணம் செய்த பிற கட்சி தலைவர்களுக்கு பொறுப்புகளை வாங்கித் தருவதில் பெரிய முன்னேற்றத்தை அவர் காணவில்லை. அவரது தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பது வரை வரலாறு. நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை யாரும் எடுக்கவில்லை. அதன் விளைவாக அவர் தலைமை செயலக கூட்டத்தை நிராகரித்திருப்பார் என்று ஊகிக்கிறேன். தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் அவர் இருக்கிறார் என்பதைத்தான் இது உணர்த்துகிறது,''என்கிறார் ராதாகிருஷ்ணன்.
முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு அக்டோபர் 7ம் தேதி முடிவு வரும் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர் என்றபோதும், அந்த நாளும் மற்றொரு நாளாகவே அமையும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.
''கட்சியில் இரட்டை தலைமை இருப்பதுபோல காட்டிக் கொண்டாலும், எடப்பாடி பழனிசாமியின் கை தற்போது ஓங்கியிருப்பது போன்ற சூழல்தான் உள்ளது. முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு செய்ய 11 நபர்கள் கொண்ட குழு அமைக்கவேண்டும் என பன்னீர்செல்வம் முன்னர் சொல்லியிருந்தார். ஆனால் அவரின் கருத்து எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதேபோல, செயற்குழு கூட்டத்தில் அவருக்கு ஆதரவான குரல்கள் பேசியது போல தெரியவில்லை. அதனால் அவருக்கான ஆதரவாளர் கூட்டத்தை திரட்ட அவர் முயலலாம் என்பதை வைத்து பார்க்கும்போது, அக்டோபர் 7ம் தேதி மேலும் பல சர்ச்சைகள் உருவாகும் நாளாக இருக்கும்,'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.
அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் உள்ள பன்னீர்செல்வம் தனக்கான இடத்தை தக்கவைக்க முயற்சிகள் எடுக்கும் நேரத்தில் இருப்பதாக கூறுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

பட மூலாதாரம், Facebook
''முந்தைய ஆட்சிக் காலங்களில் முதல்வராக இருந்தவர் என்றபோதும், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு மீண்டும் ஒன்றிணைந்த பின்னர், பன்னீர்செல்வம் தனக்கான இடத்தை கட்சியில் நிலைநாட்டினாரா என்பதை விரிவாக பரக்கவேண்டியுள்ளது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் கூட தற்போது இவருக்கு உதவுவார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் கட்சியில் மூத்த அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகப் பேசவில்லை என்பதை அறிகிறோம். இப்போது கட்சி பதவியைக் கொண்டு அவர், முதல்வர் வேட்பாளர் பற்றிய கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தலாம்,'' என்கிறார் அவர்.
''தனக்கான ஆதரவாளர்களை திரட்டி பலத்தை காட்டவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், அக்டோபர் 7 வரை உள்ள காலகட்டம் அவருக்கு மிகவும் முக்கியமான தருணமாக அமையும். முதல்வர் வேட்பாளர் பற்றிய கூட்டம் என பேசப்பட்ட செயற்குழு கூட்டத்திற்கு அவர் வரும் வழியில் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி அலுவலக வளாகத்தில் பன்னீர்செல்வத்தின் முகமூடி அணிந்துகொண்டு, அவர் முதல்வர் வேட்பாளர் என்ற கோஷ்ம் எழுந்தது. பூக்கள் இறைக்கப்பட்டன என்பது வெளியே தெரிந்த காட்சிகள். கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை என்பதால்தான் தேதி சொல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.இதுவே நமக்கு செயற்குழு கூட்டத்தில் யாருக்கு ஆதரவு இருந்தது என்பதை உணர்த்துகிறது,''என்கிறார் குபேந்திரன்.
பிற செய்திகள்:
- கொரோனா: இந்தியாவுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய அச்சுறுத்தல்
- கேட் க்யூ: இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?
- ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: உயிருக்கு போராடிய 19 வயது பெண் டெல்லியில் உயிரிழப்பு
- 2ஜி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை
- பாபர் மசூதி தகர்ப்பு: சம்பவத்தை நேரில் பார்த்த செய்தியாளர்கள் விவரிக்கும் அதிர்ச்சியூட்டும் அனுபவங்கள்
- திருவொற்றியூர், குடியாத்தம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணைய முடிவுக்கு என்ன காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












