தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன?

அக்டோபர் 1ஆம் தேதி முதல் வரவிருக்கும் தளர்வுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் உணவகங்களுக்கான நேரம் நீட்டிப்பு, கூடுதல் விமானங்களுக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் அரசாணையை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாதத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்பு அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 30ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

இதையடுத்து, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும் அக்டோபர் 31ஆம் தேதிவரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அக்டோபர் 1ஆம் தேதி முதல், சில கூடுதலான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவை காலை ஆறு மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். பத்து மணி வரை உணவுகளை பார்சல் வாங்கிச் செல்லலாம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே தினமும் 50 வெளி மாநில விமானங்கள் வந்து இறங்க அனுமதிக்கப்படும் நிலையில், இப்போது கூடுதலாக மேலும் ஐம்பது விமானங்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பிற விமான நிலையங்களில் தற்போதைய நிலையே தொடரும்.

கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் வாரச் சந்தைகள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்கலாம்.

பத்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்பதற்காக பள்ளிக்கூடங்களுக்கு வரலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த அறிவிப்பு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர, ஏற்கனவே அமலில் உள்ள, பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நிலை நீடிக்கும்.

மேலும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். சென்னை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து இயங்காது.

எல்லாவிதமான கூட்டங்களை நடத்துவதற்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: