ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வல்லுறவு: உ.பி அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பட மூலாதாரம், Ani
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவத்தில், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியானதகவல்களில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விவரித்தது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தது ஆகியவை தொடர்பாகவும், அந்த பெண்ணின் சடலத்தை அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்ய உறவினர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்ப்டடிருந்தது.
இந்த சம்பவங்கள் மிகவும் வலியைத் தருபவையாக உள்ளன என்று கூறியுள்ள மனித உரிமைகள் ஆணையம், மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதை உணர முடிகிறது என்றும், இதில் ஈடுபட்ட நபர்களின் செயல் சட்டத்தைக் கண்டு அஞ்சாதவர்களாக அவர்கள் இருந்தனர் என்றும் அறிய முடிகிறது என்று கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் காவல்துறை தலைமை இயக்குநர் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் மாநில அரசு பதில் அனுப்ப வேண்டும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டு வாரங்களாக உயிருக்குப் போராடிய அந்த பெண் பிறகு மரணம் அடைந்தார். இந்த நிலையில், அவரது உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நள்ளிரவில் அப்பெண்ணின் உடல் வலுக்கட்டாயமாக குடும்பத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
மூன்று மணிக்கு இறுதி சடங்கு
பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய அந்த பெண்ணின் சகோதரர், “போலீஸார் வலுக்கட்டாயமாக உடலை பறித்து கொண்டனர். என் தந்தையையும் அவர்களுடன் அழைத்து சென்றனர்,” என்று கூறி உள்ளார்.
நள்ளிரவில் ஹாத்ரஸ் கிராமத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு இறுதி சடங்கு நடந்துள்ளது.
அந்த பெண்ணின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல விரும்பியதாகவும், ஆனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இறுதி சடங்கு நடத்த கோரியதாகவும் கூறுகின்றனர் கிராம மக்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
என்ன நடந்தது?
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல் வெட்ட தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த பெண் சென்றிருந்தார். அப்போது உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்து பிறகு கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயங்களுடன் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பிபிசியிடம் பேசும்போது, செப்டம்பர் 14ஆம் தேதி எனது சகோதரி, தாய், மூத்த சகோதரர் புல் வெட்ட சென்றோம். பிறகு சகோரர் கைநிறைய புல்லுடன் திரும்பினார். எனது தாயார் முன்பகுதியில் புல் வெட்டச்சென்றார். அப்போது அங்கு நான்கு பேரும் எனது சகோதரியை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்தனர் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சுயநினைவிழந்த நிலையில், அருகே உள்ள உள்ளூர் சமுதாய மருத்துவ நிலையத்துக்கு அந்த பெண்னை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு அங்கிருந்து அவர் அலிகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 13 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு திங்கட்கிழமை அவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், அவரது உயிர் செவ்வாய்க்கிழமை காலை பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது சகோதரிக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்ட அவரது சகோதரர், "எனது சகோதரியின் முதுகெலும்பு உடைந்திருந்தது. அவரது நாக்கு வெட்டப்பட்டிருந்தது. அவரது கையை அசைக்கக்கூட முடியவில்லை. செய்கை மூலம் வலியைத் தாங்கிக் கொண்டு அவர் பேச முற்பட்டார்" என்று தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நடந்த சம்பவத்தை உத்தர பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி கடுமையாக கண்டித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கவும் அரசு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி வலியுறுத்தினார்.
பிற செய்திகள்
- கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்து இந்தியா மீது டிரம்ப் கடும் தாக்கு
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்
- கொரோனா: இந்தியாவுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய அச்சுறுத்தல்
- குவைத் மன்னர் ஷேக் சபா 91 வயதில் மரணம்
- 50 பெண்களுக்கு மது கொடுத்து மருத்துவமனையில் பாலியல் வல்லுறவு என புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












